வெள்ளிமணி

நந்திபுர விண்ணகரம்: நலன் தரும் நந்திரபுரத்து நாதன்

தினமணி

திருமால் உறையும்  திவ்ய தேசங்களில், ஆறு மட்டுமே விஷ்ணுவின் நகர் எனும்  விண்ணகர்  என்ற பெயர் பெற்றுள்ளன.  அவற்றில் ஒன்றுதான் நந்திபுர விண்ணகரம்.  

சிவனின் அதிகார நந்தி மஹா விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டத்துக்கு வந்தபோது,  காவலில் நின்ற துவாரபாலகர் அனுமதியின்றி உள்ளே செல்ல முயற்சித்ததால்,  "கடும் உஷ்ணம் உண்டாக' என்று சபித்துத் திருப்பி அனுப்பினர்.   தவறை உணர்ந்த நந்தியும் சிவனிடம் பரிகாரம் கேட்டது.  நந்தியை வளமையும் குளுமையும் மிக்க  செண்பகாரண்ய ஷேத்திரத்தில் திருமாலை தவமிருந்து தரிசித்து  சாபத்தைப் போக்கிக் கொள்ளச் சொன்னார். விஷ்ணுவும்  நந்திக்கு காட்சியளித்து சாபத்தைப் போக்கினார் என்பது வரலாறு. அதனால் "நந்திபுர விண்ணகரம்'  என்றும் ஊர் "நந்திபுரம்'  என்றும் பெயர் பெற்றன.

பவிஷ்ய புராணம்  7 அத்தியாயங்களில்  இந்தத் தல வரலாறு உள்ளது. நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் கோயிலை திருப்பணி செய்து புதுப்பித்ததால்,  "நந்திபுர விண்ணகரம் என்று பெயர் வந்தது.

திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக வாசம் செய்ய விரும்பிய திருமகள் செண்பகாரண்ய ஷேத்திரமான இத்தலத்தில், கிழக்கு நோக்கி தவம் செய்தாள், எம்பெருமான் மேற்கு நோக்கி தாயாருக்கு காட்சி கொடுத்து,  பிரார்த்தனையை நிறைவேற்றினார். செண்பகாரண்ய தலமாதலால், தாயார் செண்பகவல்லி ஆனார். 

மூலவர் திருமகளின் எண்ணத்துக்கு இசைந்து பிராட்டியை நெஞ்சில் ஏற்றுக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன்  மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் அருளுவதால்  பெருமானுக்கு "போகஸ்ரீனிவாசன்' என்பது பெயர்.  இப்பெருமான் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு என்ற  5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதராக வீற்றிருந்த திருக்கோலத்தில் திகழ்கிறார்.

உற்சவருக்கு  ஜகந்நாதன் என்பது நாமம். நாதன் உறைகின்ற "நந்திபுர விண்ணகரம்' என்பதே திருமங்கையாழ்வாரின் பாசுரமாகும் . "நந்தி பணி செய்த நகர்' என்றும்  ஆழ்வார் கூறுகிறார். " வாளும் வில்லும் வளையாழி கதை சங்கமிவையங்கையுடையான்' என்று ஐந்து ஆயுதங்களையும் ஏந்தி உள்ள எம்பெருமான் என்கிறார். விண்ணகரப் பெருமாள், யோக ஸ்ரீனிவாசன் என்ற பெயர்களிலும்  நாதநாதன் வணங்கப்படுகிறார்,. 

சிபி சக்கரவர்த்தி புறாவுக்கு அடைக்கலம் தந்து புறாவின் எடைக்குச் சமமாக, இறுதியில்தானே தராசில் அமர்ந்தார் என்பது வரலாறு. இந்த அரிய தர்மத்தின் நிகழ்வைக் காண கிழக்கு நோக்கி இருந்த  பெருமாள் மேற்கு நோக்கி திரும்பி   அமர்ந்ததாகவும் கூறுவர்.

மூலவர் விமானம் மந்தார விமானம்.  தீர்த்தம் நந்தி புஷ்கரணி. கருவறையில்  பிரம்மாவும், நந்தியும்.  பெருமாளை வணங்கியபடி  இருக்கின்றனர்.

மூலவர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றிருந்தாலும்,  உலாத்திருமேனியான உத்ஸவர் பெயரிலேயே இந்தக் கோயில் "ஜகந்நாதப்பெருமாள் கோயில்' என்றும்,  "நாதன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. கர்ப்பக் கிருகத்துக்கு வெளியே, சந்நிதிக்கு வலதுபுறத்தில் ஆழ்வார்கள்,  ராமானுஜர் என இருபுறமும் சீடர்களுடன் சேவை சாதிக்கிறார்.
சந்நிதிக்கு நேரே மண்டபத்தின் வாயிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். 

விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் மன்னர் தன்அன்னைக்குத் தோன்றிய காரணம்  அறிய  இயலாத நோயை நீக்குமாறு இப்பெருமானிடம் வேண்டினார்,  நோய் நீங்கியதால் கோயிலுக்கு பல  திருப்பணிகளைச் செய்தார். 

பலன்கள், வழிபாடு:
ஐப்பசி பௌர்ணமிகளில் கோயிலில் விசேஷங்கள் உண்டு.  "வழிபடுவோருக்கு தொழில் அபிவிருத்தி, கல்வி கேள்விகளில் மேன்மை அடையச் செய்வார்.  செல்வமும் மேன்மையும் கிடைக்கும். பெண்களுக்கு திருமணமும்,  மழலைப் பாக்கியமும் கைகூடும்' என்கின்றனர் பக்தர்கள். பிரார்த்தனை செய்து கொண்டோருக்குத் தவறாமல் பலன் தரும் தலமாகும்.

கல்லாமலே கவி மழை பொழிந்த ஆசுகவி,  வரதன் என்ற பெயர்களைக் கொண்ட கவி  காளமேகம் பிறந்த ஊர்.   இப்போதும் தங்கள் குழந்தைகள் கல்வியறிவு பெற்றுச் சிறக்க இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டு செல்கின்றனர்.

இந்த கோயில்,நாங்குனேரி வானமாமலை ஜீயர்  மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. பக்தர்கள் பங்களிப்போடு, கோயிலின் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.  மே 24-ஆம் தேதி காலை 6 .15 மணி முதல் 7.30  மணிக்குள்   மகா சம்ப்ரோக்ஷணமும் நடைபெறுகிறது.  இதற்கான  பூஜைகள் மே 22-இல்  தொடங்குகின்றன.

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் கிழக்கே பழையாறை வழியில் முழையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோயிலை அடையலாம். விவரங்களுக்கு 98437 95904.


- இரா. இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT