வெள்ளிமணி

27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில்!

சொக்கம்பட்டி வி.குமாரமுருகன்

செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையில்  உள்ள புளியரையில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் சதாசிவமூர்த்தி மூலவராக இருந்தாலும், மூலவருக்கும், நந்திக்கும் இடையே அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கே சிறப்பு வாய்ந்தத் தலமாக விளங்குகிறது. 

இங்குள்ள மூலவர் சதாசிவமூர்த்தி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக சிவன் கோயில்களில் தட்சிணாமூர்த்தி தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவருக்கும் ,வாசலில் உள்ள நந்திகேஸ்வரருக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கின்றார். கோயிலுக்குள் செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றன.  நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

சமண மதம் மேலோங்கி இருந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்த நடராஜர் சிலையை பாதுகாப்பாக சில அடியார்கள் எடுத்து கொண்டு பொதிகை மலையை தாண்டி சேர எல்லைக்குள் வந்தனர். அங்கிருந்த வனத்தில் சுவாமி சிலையை ஒரு புளியமர பொந்தில் மறைத்து வைத்தனர். அந்த சிலையை பார்த்த ஈசனின் பக்தர் ஒருவர் சுவாமியை  அங்கேயே வைத்து வணங்கி வந்தார்.

இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து அந்தச் சிலையை எடுத்து செல்வதற்காக  வந்த அடியார்களுக்கு சாரை,சாரையாக சென்ற எறும்புகள் வழிகாட்டியதாகவும், பின்னர் அவர்கள் மூலவர் சிலையை எடுத்து சென்றனராம். வழக்கம்போல் சுவாமியை வணங்க வந்த பக்தர் சிலை அங்கு இல்லாததை பார்த்து வருந்தியதும்,  ஈசனை வணங்கி மீண்டும் காட்சி தர வேண்டினாராம். அவர் வேண்டுதலுக்கு மனமிறங்கிய ஈசன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்தாராம். பின்னர் அப்பகுதி மன்னன் மற்றும் பக்தர்கள் சிவனுக்கு அங்கேயே கோயில் கட்டி வழிபட்டதாக ஒரு வரலாறு கூறுகின்றது.

கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்ததாம். அரசர் சிவனை வேண்டினாராம். சிவபெருமான் கனவில் தோன்றி புளியரை காட்டில் தான் சுயம்புவாக இருப்பதைக் கூறி கோயில் கட்டுவதற்கு கட்டளையிட்டாராம். அரசரும் இறைவனின் கட்டளைக்கிணங்க அப்படியே செய்தார் எனவும் மற்றொரு  வரலாறு கூறுகிறது.

இங்கு சிவனுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இரண்டு சந்நிதிகளுக்கும் இடையே திருக்கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் வடக்கு புறமும், அம்பாள் தெற்கு புறமும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
சிவன் சந்நிதிதிக்கு முன்புறம் தட்சிணாமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஒரே தீபாராதனையில் சிவனையும், தட்சிணாமூர்த்தியையும்,நந்திகேஸ்வரரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். இவ்வாலயத்தில் சடாமகுட தீர்த்த குளம் உள்ளது. 

இக்கோயிலில் வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். மேலும், திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி, வேலை, தொழில் ஆகியவை சிறக்க இங்கு வழிபட்டால் போதும் என்கின்றனர். வியாழக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கோயில் திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 5 முதல் இரவு 8 மணி வரை

வியாழக்கிழமைகளில்: காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை. மாலை 4.30 முதல் இரவு 8 .30 மணி வரை

இக்கோயிலுக்கு தென்காசி, செங்கோட்டை பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தென்காசி,குற்றாலம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில்  தங்கி கொண்டு அங்கிருந்து புளியரை செல்வது சிறப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT