வெள்ளிமணி

கூர்ம ஜெயந்தி நாளில் விரதம் இருந்தால்..!

9th Jun 2023 04:36 PM | இரா.இரகுநாதன்

ADVERTISEMENT

 

நாராயணனின் அவதாரங்கள் தீமையை அழித்து நல்லவற்றை அருள எடுக்கப்பட்டவை ஆகும்.   தசாவதாரத்தில் இரண்டாவதான கூர்ம அவதாரம், யாரையும் அழிக்காமல் பல அரிய பொருள்களை தேவர்களுக்கும்,  மக்களுக்கும் வழங்கத் துணை நின்றது.

தேவலோகமங்கைக்கு  மலர் மாலையை மகாலட்சுமி அளித்தாள்.  பக்தியோடு அவள் தனது வீணையில் தாங்கி பிரம்மலோகம்  செல்ல,  வழியில்  துர்வாச முனிவரைக் கண்டு வணங்கி,  மாலையை அவரிடம் கொடுத்தாள்.  உடனே முனிவர் மாலையுடன் தேவலோகம்  சென்றார்.  எதிரில் தேவேந்திரன் யானையில் வர  அந்த மாலையைக் கொடுத்தார் . அவர்  வாங்கி, யானையின் மத்தகத்தில்  வைத்தார்.  யானை  துதிக்கையால்  எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது. 

துர்வாசருக்கு கோபம் வந்து,  லட்சுமிதேவியின் பிரசாதத்தை அவமதித்ததால் , மூவுலகிலும் லட்சுமி கடாட்சம் அழிய சாபமிட்டார். இந்திரன் பதறி முனிவரின் காலில் விழ,  துர்வாசர் அலட்சியப்படுத்தவே உலகமே வறுமையில் ஆழ்ந்தது. 
இந்த நேரத்தில், அசுரர்கள்  தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போரிட்டனர்.  ஆனாலும் போரில்  வீழ்ந்த அசுரர்கள் , குரு சுக்ராச்சாரியாரால் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர்.  தேவர்களை  உயிர்ப்பிக்க வழியில்லாத நிலையில்   தேவேந்திரனோ பிரம்மனின் தயவை நாடினான்.  பிரம்மன், திருமாலிடம் அழைத்துச் செல்ல, "பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பருகினால் மட்டுமே சாகா வரம் பெற முடியும்'  என்றார்.

ADVERTISEMENT

அசுரர்களை உதவிக்கு அழைத்து வாசுகி பாம்பைக் கயிறாக்கி மேரு மலையை மத்தாக்கி,  அசுரர்கள் தலைப் பகுதியிலும் தேவர்கள் வால் பகுதியிலும் பிடித்து கடைய மத்தாக இருந்த மலை நழுவியது.  விஷ்ணு ஆமையாக  அவதரித்து கடலுக்கு அடியில் சென்று மலையை தன்னுடைய முதுகில்  தாங்கிப் பிடித்தார். அவ்வாறு கூர்ம அவதாரத்தை எடுத்து  மலையைத் தாங்கியது  ஆனி மாதத்தில்  தேய்பிறை துவாதசி திதியாகும்.  அந்த நாளே "கூர்ம ஜெயந்தி'  என கொண்டாடப்படுகிறது.

திருமால் தாங்கிப் பிடித்ததால் பாற்கடலிலிருந்து பல பொக்கிஷங்கள் வந்தன. வெளிவந்த  மகாலட்சுமி திருமாலை  மணந்தாள். காமதேனு,  ஐராவதம், கற்பகம்.. போன்றவை  தேவர்களிடம் சென்றன.  வருணி, சுராதேவி, அழகு மங்கையர்களை அசுரர்கள் கைப்பற்றினர்.  இறுதியில்  சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்தகலசம், கதாயுதம் ஆகியன தாங்கி   நான்கு கரங்களுடன் அவதரித்த தன்வந்திரி   மருத்துவர்களின் தலைவராகி "வைத்தியநாராயணன்'  என்ற பெயரோடு விளங்கினார். 

இந்த வரலாறை சிலப்பதிகாரம், "வடவரையை மத்தாக்கி,  வாசுகியை நாணாக்கி கடல்வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே!'' என  இளங்கோவடிகளே குறிக்கிறார்.

சனி தோஷத்தை நீக்கும்: திருமாலின்  தசாவதாரம் முழுவதும்  நவக்கிரக அம்சங்களை அடங்கியது.  நவக் கிரகங்கள் தசாவதாரக் கட்டுப்பாட்டில் உள்ளவை. அந்த வகையில்,  ராமன்} சூரியன் , கிருஷ்ணன் - சந்திரன் , நரசிம்மர்  - அங்காரகன், கல்கி  - புதன், வாமனர் - குரு, பரசுராமர் - சுக்கிரன், கூர்மம்} சனி, வராகம் }ராகு,  மச்சம்} கேது அம்சமாகவும்  கூறப்படுகின்றன. சனிக்குரியவர் கூர்மாவதார மூர்த்தி என்பதால்,  எந்த வகை சனி தோஷம்  இருந்தாலும் அதை நீக்கி நற்பலன் தருபவர் கூர்ம பகவான். 

கோயில்கள்:  கம்போடியாவில் அங்கோர்வாட்  கோயில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காக்  விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீகூர்மத்தில் தனிக் கோயில் இருக்கிறது.  

தமிழ்நாட்டில் கும்பகோணம் பெரிய தெருவில் "சரநாராயணப் பெருமாள்' என்றும் "தசாவதாரப்பெருமாள் கோயில்'  எனவும் குறிப்பிடப்படும்  கோயில் உள்ளது.  நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார்களால் ஸ்ரீ சாரங்கபாணியுடன் இணைந்து, மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோயில் எனப்படுகிறது. 

தசாவதாரங்கள் தனித்தனி ரூபத்துடன் 12 ராசிகளுடைய நவக்கிரக பரிகாரத்தலமாக விளங்குகிறது. கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு நாளாகும்.  சனிக்கிழமைகளில் வழிபடுவோருக்கு சனி தோஷ நிவர்த்தி என்கிறது ஜோதிட சாத்திரம்.  ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சங்கு சக்கரம் கை மாறிய நிலையிலும் சிரித்த முகத்துடனும் காட்சி அளித்து  பக்தர்களுக்கு அருள் தருகிறார். கருவறையின் இடப்புறம் ராஜகோபாலசுவாமி சந்நிதி உள்ளது. தரிசனம் காலை 6 முதல் மதியம் 12 மணி வரையும்,  மாலை 4 முதல் இரவு 7 மணி வரையாகும்.

ஸ்ரீரங்கம், குடந்தை தசாவதாரக்  கோயில்  அழகர் கோயில், சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில்  ஆகிய கோயில்களில் உள்ள கூர்ம பெருமாளை வணங்கலாம்.

கூர்ம ஜெயந்தி விரதம்: கூர்ம ஜெயந்தி நாளின் முதல்நாள்  இரவில் தொடங்கி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து "விஷ்ணு சஹஸ்ரநாமம்' , திவ்விய பிரபந்தம் ஓதுதலுடன்   மறுநாள்  பகல் வரை விரதம் தொடர்கிறது.  அன்றைய நாள் மாலையில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து, தானம் வழங்கலாம். இந்த ஆண்டு ஜூன் 14}இல்  கூர்ம ஜெயந்தி வருகிறது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT