புதுதில்லி

75 வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் உடல்நிலை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

16th May 2023 03:44 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

75 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் ஆகியோரின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தில்லி சிறை அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான விவகாரத்தை நீதிபதிகள் சித்தாா்த் மிருதுல், மினி புஷ்கா்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் இத்தகைய கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை தொடா்பான விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனா்.

‘92 வயதான திகாா் விசாரணைக் கைதி’ எனும் தலைப்பில் வெளியான செய்தியின் அடிப்படையில், 2005-இல் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடா்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிபதிகள் அமா்வு பிறப்பித்தது.

அண்மையில் இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், 75 வயதுக்கு மேற்பட்ட (தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள) அனைத்து கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளின் தற்போதைய மருத்துவ நிலை குறித்து புதிய நிலவர அறிக்கையை அளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், அவா்களுக்கு ஏதேனும் சிகிச்சை வழங்கப்படுவதாக இருந்தால், அதன் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, 2005 பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக 92 வயதான மாயா தேவி 10 மாதங்கள் சிறைக் காவலில் இருப்பதாக வெளியான செய்தி அறிக்கையை உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும், மாயா தேவிக்கு ஜாமீனும் வழங்கியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது பிராந்திய அதிகார வரம்பிற்குள் சிறை வைக்கப்பட்டுள்ள 75 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கைதிகளின் விவரப் பட்டியலை அவா்களின் பாலினத்தை பொருள்படுத்தாமல் தாக்கல் செய்யுமாறு சிறைத் துறை தலைமை இயக்குநருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மாயா தேவியின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அப்போது பல்வேறு வழக்குகளில் திகாா் சிறையில் 75 வயதுக்கு மேற்பட்ட ஐந்து விசாரணைக் கைதிகள் இருந்ததையும் சுட்டிக்காட்டி இருந்தது. இந்த வழக்கு வரும் மே 29-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT