வெள்ளிமணி

அற்புத சிவ - சக்தி லிங்கம்

கி.ஸ்ரீதரன்

சிவ ஆலயங்களில் சிவ பெருமான் லிங்க வடிவமாகவே காட்சி தந்து அருள்புரிகின்றார். இந்த லிங்கத்தில்தான் எல்லாம் தோன்றின என்பர். 

ஆக்கல்,  அழித்தல்,  காத்தல் ஆகிய மூன்றும் அடங்கியதால் லிங்கம் எனப்பட்டது. இந்தத் திருஉருவில் சதுரமான அடிப்பகுதியை "பிரம்மபாகம்' எனவும்,  எட்டு பட்டையான இடைப்பகுதி ஆவுடையாருடன் இணைந்த பகுதி "விஷ்ணு பாகம்'  எனவும், திரண்ட தலைப்பகுதி "ருத்ரபாகம்' எனவும்  அழைக்கப்படுகிறது. 

ருத்ர பாகத்தைத்தான் கோயில்களில் வழிபடுகிறோம். லிங்க வடிவின் சிறப்பை அண்ட லிங்கம், பிண்ட லிங்கம், சதா சிவ லிங்கம், ஆத்ம லிங்கம், ஞான லிங்கம் என்ற தலைப்புகளில் திருமூலர் அருளிய "திருமந்திரம்' போற்றுவதைக் காணலாம்.

சிவன் சதாசிவ லிங்கமாகக் காட்சி தரும்பொழுது,  தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என்ற ஐந்து முகங்களுடன் அருள்புரிகின்றார். ஆனால் கோயில்களில் நான்கு முகங்களுடன் சதுர்முக லிங்கமாகக் காணலாம். இத்தகைய சதுர் முகலிங்கத் திருமேனிகளை திருவதிகை, காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருப்புன்கூர் போன்ற கோயில்களில் காணலாம். 

சிவனின் ஐந்தாவது முகமான "ஈசானம்'  லிங்கத்தின் உச்சிப் பகுதியாக விளங்குகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் இறைவன் சதாசிவ மூர்த்தியாக காட்சி தருகிறார். கருவறையைச் சுற்றியுள்ள பாதையில் அகோரமூர்த்தி, சத்யோஜாத மூர்த்தி, வாமதேவமூர்த்தி ஆகிய இறை வடிவங்களைக் காணலாம்.

சிவனின் இடது பாகத்தை "வாம பாகம்' எனக் குறிப்பிடுவர். இறைவனை மாதொருபாகனாக } அர்த்த நாரீசுவரராக } சக்தியும் சிவனும் இணைந்த வடிவில் வழிபடுகிறோம். பல கோயில்களில் கருவறையின் மேற்கு தேவ கோட்டத்தில் இவ்வடிவைக் காணலாம். திருச்செங்கோடு கோயிலில் இறைவன் அர்த்தநாரீசுவரராக } அம்மையப்பனாக எழுந்தருள்கிறார்.
இதற்கும் மேலாக சிவ லிங்கத்திலேயே இறைவியின் வடிவமும் காணப்படும் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது. காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஆதிபீட பரமேசுவரி கோயிலில் சக்திலிங்கத்தைக் கண்டு வழிபடலாம்.

கோயிலில் தேவி அமர்ந்த கோலத்தில் அங்குசம், பாசம், அபயகரம், கபாலம் (அட்சய பாத்திரம்) தாங்கி அருள் புரிகின்றாள். கிரீடத்தில் சந்திர பிரபை காணப்படுகிறது. காலின் கீழே பீடத்தில் மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. காஞ்சி காமாட்சி அம்மன் போன்ற மிக அழகிய வடிவுடன் காட்சி தந்து அனைவருக்கும் அருள் வழங்குகின்றாள்.
கோயிலில் நுழைந்தவுடன் இடது புறத்தில் "சக்தி லிங்கத்தைக்" கண்டு வழிபடலாம்.

சிவலிங்கத்தின் உருத்திர பாகத்தில் அமர்ந்த நிலையில் தேவி காட்சி தருகிறாள். தனது நான்கு கரங்களில் அங்குசம், சூலம், கத்தி, கபாலம் தாங்கிய அற்புத வடிவைக் காணலாம். தேவி இறைவனுடன் சேர்ந்து காணப்படும் வடிவினை "தொண்மைக் கோலம்' என மாணிக்க வாசகர் பெருமான் போற்றுகின்றார்.

இறைவனும் இறைவியும் இணைந்த நிலையே உலகின் தோற்றம் ஆகும். இதனை "சிவசக்தி' எனப் போற்றுவர். சிவன் இல்லாமல் சக்தி இல்லை. இரண்டும் இணை பிரியாததாகும்.
சக்தியும் சிவனும் ஒன்றான தத்துவத்தை விளக்கும் வகையில் இந்த "சக்திலிங்கம்' விளங்குகிறது. இத்தகைய வடிவில் அமைந்துள்ள லிங்கத்தை வேறு கோயில்களில் காண இயலாது.
காஞ்சி ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதோஷ வேளையில் சக்திலிங்கத்தை வழிபடுவோர்க்கு எல்லா நலன்களும் கிடைக்கும். ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளிலும் சிவராத்திரி நாளிலும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

"ஆதி காமாட்சி அம்மன்' என்ற சிறப்போடு விளங்கும் இந்தக் கோயிலுக்கு சிவராத்திரி நாளில் சென்று வழிபட்டு அனைத்து நலன்களையும் அடைவோம்.

-கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT