வெள்ளிமணி

வேங்கடாத்ரி ஸ்வாமிகள் தீர்த்த மஹோத்ஸவம்

ஏ.ஜி.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் கோயில். மதுரகவி ஆழ்வார் நீங்கலாக, பிற  ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்.  நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல் பாடப்பட்டுள்ளன.  ஸ்ரீரங்கநாதரின் பெருமையை கருட புராணம், பிரும்மாண்ட புராணம்,  ஸ்ரீரங்க பிரும்ம வித்தை, ஸ்ரீரங்க மகாத்மியம், ஸ்ரீ குண ரத்ன கோசம், ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் முதலிய நூல்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நவ கிரகங்களில் சுக்கிரனின் அம்சம் பொருந்தியதாக, இக்கோயில் கருதப்படுவதால் சுக்கிரன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கிருக்கும் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிருஷ்டங்கள்,  நோய்கள் நீங்குவதாகக் கூறப்படுகிறது. மூலவர் சுதையில் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை.  அதற்குப் பதில் இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட தைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.

கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ராமாநுஜரது திருமேனி அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே எழுந்தது. அதுவே தற்போது ராமாநுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமாநுஜர் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மன்னர்கள், தனவான்கள் என பலர் பல கைங்கர்யங்களைச் செய்திருக்கிறார்கள். பலர் திருவாபரணங்களாகவும் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு தற்போது பல நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். 

அவர்களுள் ஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி எனும் ஸ்ரீ திருவேங்கட ராமாநுஜ ஜீயரும் ஒருவர். அவர் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணா மாவட்டம் (தற்போது என்.டி.ஆர். மாவட்டம்) கன்சிகசெர்லா கிராமத்துக்கு அருகில் அல்லூர்  அக்ரஹாரத்தில் 23.2.1807}இல் (பங்குனி உத்திரம் பெüர்ணமி திதி) அவதரித்தவர். அவர் திருமலை } திருப்பதி தேவஸ்தானம்,  பத்ராசலம், காஞ்சிபுரம், திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட  தலங்களில் உள்ள பகவானை ஆராதித்து 300}க்கும் மேற்பட்ட கீர்த்தனங்களைப் பாடியுள்ளார்.

வேங்கடாத்ரி ஸ்வாமிக்கு 52 வயதாக இருந்த சமயத்தில் ஸ்ரீ ரங்கநாதர் அவரது கனவில் தோன்றி "கோபிசந்தன மஹாராஜா பாண்டியன் கொண்டை எனும் முத்து வளையம் செய்தார். அது இப்போது சிதிலமாகிவிட்டபடியால் நீ வேறொன்று செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பிச்சாடனம் (உஞ்சவிருத்தி) எடுத்து மாணிக்கம் மற்றும் 
ரத்தின கற்கள் பதித்த பாண்டியன் கொண்டை, வெள்ளை மகரகண்டி, பச்சை மகரகண்டியும், தாயாருக்கு மாணிக்கம் மற்றும் ரத்தின கற்கள் பதித்த ராஜ முடியும், நாச்சிமார்களுக்கு மாணிக்கம் மற்றும் ரத்தின கற்கள் பதித்த வைர கிரீடங்களும்,  நித்ய திருவாராதனத்துக்காக விளைநிலங்களும் சமர்ப்பித்தார். அவற்றின் மதிப்பு தற்போது பல கோடிகளைத் தாண்டும். அவை ஸ்ரீ ரங்கநாதருக்கு ஆண்டில் பங்குனி உத்திரம், பங்குனி பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி, வேங்கடாத்ரி ஸ்வாமிகளின் தீர்த்த மஹோத்ஸவம் ஆகிய நான்கு உத்ஸங்களின்போது மட்டுமே சாற்றப்படுகிறது. 

வேங்கடாத்ரி ஸ்வாமிகளின் தீர்த்த மஹோத்ஸவமானது ஒவ்வோர் ஆண்டும் தை மாத தேய்பிறை (மாக மாசம் பஹுல ஸப்தமி) ஸப்தமி திதியில், கொள்ளிட ஆற்றின் கரையில் ஆளவந்தார் படித்துறையில் அமைந்துள்ள வேங்கடாத்ரி ஸ்வாமிகளின் திருவரசில் ஸ்ரீகோயில் மரியாதை, சந்நிதி பரிவாரங்கள் ஸ்வாமி திருவரசுக்கு வந்து விசேஷ திருமஞ்சனமும், திருவாராதனமும், வேதபாராயண, திருவாய்மொழி சேவை, சாற்றுமுறையும் நடைபெறுவது வழக்கம். 

இதைத் தொடர்ந்து, திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு நடைபெறும் பஞ்சரத்ன கீர்த்தன வைபவம் போல, அகில ஸ்ரீவேங்கடாத்ரி ஸ்வாமி சிஷ்ய பஜனை கோஷ்டிகளால், ஸ்ரீமத் வேங்கடாத்ரி ஸ்வாமிகள் அருளிய நவரத்ன கீர்த்தன வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான வேங்கடாத்ரி ஸ்வாமிகளின் தீர்த்த மஹோத்ஸவம் பிப். 12}இல் நடைபெறுகிறது.

க. லீலாராம் ராமாநுஜம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT