வெள்ளிமணி

தாமிரபரணி தைப்பூச தீர்த்தவாரி

DIN

 திருமால், பிரம்மா, முப்பத்து முக்கோடி தேவர்கள் சிவனை வழிபட சிறந்த இடத்தைக் காண வேண்டினர். அப்போது, அசரீரிபடி பிரம்மன் தனது கை தண்டத்தை கங்கையிலே மிதக்கவிட, அது தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியே ஆற்றிலும் மிதந்து மேல் திசை சென்று ஒரு மருதவனத்து அருகிலேயே ஆற்றின் கரையிலே நின்றது. அங்கு பிரம்மதண்டத்தை நிறுத்தி சிவலிங்கத்தையும் நிறுவி, தேவர்கள் வணங்கி அருளைப் பெற்று திரும்பினார்கள். இந்த லிங்கம் காலப்போக்கிலேயே மண் மேடிட்டு மறைந்தது. மருத மரம் வனமாக மாறியது.
 பாண்டிய மன்னன் வேட்டைக்குப் புறப்பட்டு, அங்கு வந்தான். எந்த விலங்கும் காணப்படவில்லை. இறுதியில் மான் ஒன்றைக் கண்டு துரத்தினான். மானின் மீது அம்பு எய்ய வேகமாக ஓடி மருதமரத்தில் மறைந்தது. கோடாரியை எடுத்து மருதமரத்தில் ஓங்கி வெட்ட மரம் வீழ்வதற்குப் பதிலாக செம்பிழம்பாக சிவலிங்கம் வெளிப்பட்டது. அதிசயித்த மன்னன் இந்த லிங்கத்தை , கோயில் கட்டி வழிபட்டான் என்பது தல வரலாறு.
 அர்ச்சுனம் என்றால் மருத மரம். புடார்ச்சுனம் என்றால் சிவன் தான் இருந்த இடத்தைப் புடைத்து பெரியதாகக் காட்டியமையால் புடார்ச்சுனம் என வழங்கப்படுகிறது.
 தேவேந்திரன் விருத்திகாசுரன் என்னும் அசுரனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று. இங்கு வந்தவுடன் தோஷம் மாயமாய் நீங்கியது. இந்திரனும் அங்கிருந்து தேவலோகம் சென்றார். இந்த நிகழ்ச்சி நடைபெற்றது தைப்பூசத்தில்தான்.
 எனவே, தைப்பூச நாளில் அஸ்திரதேவருடன் இந்திரனும் தீர்த்தவாரி உத்ஸவத்தில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. இந்திரன் மரமாக நின்ற அந்த மரங்களின் ஊடே சிவன் லிங்கமாகத் தோன்றி அருள் செய்தமையால் இத்தலத்துக்கு "திருப்புடை மருதூர்' என்று பெயர் வந்தது.
 அகத்தியர் இங்கு இறைவனை தொழுது வணங்க வந்தார். தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அக்கரையிலிருந்து அகத்தியர் ஆண்டவனை அழைக்க இறைவன் சிறிது சாய்ந்து காது கொடுத்து கேட்டார். இறையருளால் தாமிரபரணி வழிவிட ஆற்றைக் கடந்து வந்து, குரல் கேட்க சாய்ந்த லிங்கம் தரிசித்து மகிழ்ந்தார்.
 மணம் வீசக்கூடிய மலர்கள் நிறைந்த சோலைகள் அடர்ந்த வனத்தில் பூக்கள் மணம் வீசும் வனத்தில் இறைவன் குடி கொண்டு இருப்பதால் அவருக்கு "நாறும்பூநாதர்' என்று பெயர். புடார்ச்சுனம் என்னும் தலத்தில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் "புடார்ச்சுனேஸ்வரர்' என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு.
 இங்கு ஈசனுக்கு வலது புறத்தில் அம்பாளின் தனி சந்நிதி கருவறையுடன் அமைந்துள்ளது. அம்பாளின் பெயர் கோமதி. அபூர்வமான நீலக் கல்லால் ஆன திருமேனியாள். அம்பாள் நின்ற கோலத்தில் இருந்து அருளுகிறாள். அம்பிகை பிள்ளை வரம் கேட்போருக்கு அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.
 திருப்புடைமருதூரில் 10 தீர்த்தங்கள் கோயிலுடனும் ஊருடனும் தொடர்புடைய தீர்த்தங்களாக அமைந்துள்ளன. அவற்றில் கடனா நதி சேரும் இடத்தில் உள்ள கடனா சங்கமத் தீர்த்தம் கோயில், தைப்பூச தீர்த்தவாரி நடக்கும் சுரேந்திர மோட்ச தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் முக்கியமானவையாகும்.
 லிங்கத்துக்குத் தென் புறத்தில் கெளதம தீர்த்தத்தில் அகத்தியர் நீராடி வழிபட்டு பிதுர்க்களுக்கும் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தார் என்பது வரலாறு.
 கி.பி . 9-ஆம் நூற்றாண்டில் அரசோச்சிய ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லவன் என்னும் மன்னனால் கோயில் கட்டப்பட்டது. பின்னர் பலரும் திருப்பணிகளைச் செய்துள்ளனர். மூன்று பிரகாரங்களை உள்ளடக்கிய பெரும் கோயிலாக தாமிரபரணியின் கிழக்கு கரையில் கிழக்கு பார்த்த கோயிலாக உள்ளது. அதன் முன்புறம் முடிவு பெறாத நாயக்கர் காலத்து ராஜகோபுரக் கட்டுமானப் பணி நிறைவடையாமல் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளிலும் 16-ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட மூலிகை வண்ண ஓவியங்களும் மரச் சிற்பங்களும் அழகு சேர்க்கின்றன.
 கோயிலில் தைப்பூசம் பிரம்மோத்ஸவம் ஜனவரி 26-இல் தொடங்கியது. பிப். 3-ஆம் தேதி திருத்தேரும், 5-ஆம் தேதி தைப்பூசத்தன்று தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.
 பிப். 18-இல் மகா பிரதோஷமும் மகா சிவராத்திரியும் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரம் தீபங்கள் ஏற்றி வழிபாடு, 3024 இளநீர் கொண்டு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 திருப்புடைமருதூர் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வழித்தடத்தில் வீரவநல்லூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: 8248056286, 9360813021.
 -இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT