வெள்ளிமணி

கோதாவரி நதிக்கரையில்...

DIN


"மகாபாரதத்தை எழுதிய முனிவர் வேத வியாசரால் உருவாக்கப்பட்ட கோயில்!' என்ற சிறப்பைப் பெற்றுள்ளது தெலங்கானா மாநிலம், பஸôரில், கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ஞானசரஸ்வதி ஆலயம்.

கல்விக்கு சரஸ்வதி தேவியும், செல்வத்துக்கு மகா லட்சுமியும், வீரத்துக்கு பார்வதிதேவியும் தெய்வங்களாகத் திகழ்கின்றனர்.  

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட நிலையிலும், அங்கும் பிரசித்தி பெற்ற கோயில்கள் ஏராளமானவை உள்ளன. அவ்வரிசையில் பஸாரில் உள்ள ஞானசரஸ்வதி கோயிலும் ஒன்றாக விளங்குகிறது. 

1. காஷ்மீரில் உள்ள சரஸ்வதி கோயில்

காஷ்மீர், நீலம் பள்ளத்தாக்கில் சாரதா பீடம் எனப்படும் சரஸ்வதி கோயில் உள்ளது. கி.பி. 6 }ஆம் நூற்றாண்டு முதல் 12}ஆம் நூற்றாண்டு வரை மிகவும் பிரசித்தி பெற்ற அறிவுக் கோயிலாகத் திகழ்ந்தது. இந்திய } பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே 6 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயில் 18 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்ட இக்கோயில், போதிய பராமரிப்பில்லாததால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. 

2. தெலங்கானாவில் உள்ள சரஸ்வதி கோயில் 

மகாராஷ்டிர மாநில எல்லையை ஒட்டியுள்ள தெலங்கானா நிர்மல் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கரையில், சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதியோடு, மகாலட்சுமி, காளியும் எழுந்தருளி உள்ளனர்.

வேத வியாசரால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் 

குருஷேத்திரத்தில் மகாபாரதப் போர் முடிந்தவுடன், அமைதியான இடத்தை  நாடி முனிவர் வேதவியாசர் மற்றும் அவரது சீடர்கள் தண்டகாரண்ய பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.  

இறுதியாக கோதாவரி நதிக்கரையில் நிலவிய அமைதியான சூழலைக் கண்டு அங்கே தங்கினர். நாள்தோறும் கோதாவரியில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டார் வியாச முனிவர். அப்போது ஆற்றில் இருந்து மணலை சேகரித்து சிறு சிறு உருவங்களாக, தனது சக்தியால் சரஸ்வதி, காளி, லட்சுமியின் வடிவங்களை உருவாக்கி, வழிபட்டு வந்தார்.
"வியாசர்' உள்ளூர் மொழியில் "பஸார்' என அழைக்கப்பட்டதால், அந்த இடமும் "பஸார்' என்றானது.

பஸாரில் தற்போதுள்ள கோயிலை கர்நாடக மன்னர் பிஜ்ஜலடு என்பவர் கட்டினார்.

உற்சவங்கள்: ஞானசரஸ்வதி கோயிலில் மகா சிவராத்திரி (பிப்ரவரி } மார்ச்), தசரா நவராத்திரி (செப்டம்பர் } அக்டோபர்), வஸந்த பஞ்சமி (வியாச பூர்ணிமா உற்சவங்கள்) ஆகிய விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். 

அப்போது தெலங்கானா, ஆந்திரம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவர். 

வஸந்த காலத்தின் தொடக்கமே வஸந்த பஞ்சமி உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி கற்றோருக்கும், குழந்தைகளுக்கும் ஊக்க சக்தியாகத் திகழ்கிறாள்.
வித்யாரம்பம்: சிறு குழந்தைகளுக்கு முதன்முறையாக எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் என்கிற அட்சர அபியாசம் நிகழ்ச்சி இக்கோயிலில் மிகவும் பிரசித்தம்.  பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்து வந்து, வணங்கச் செய்து, சரஸ்வதி தேவியிடம் அருள் பெற்றுச் செல்கின்றனர். 

நாள்தோறும் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்து கொள்ள ரூ.100 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதில் கலந்துகொள்ள விரும்புவோர், மலர்கள், புத்தகம், பேனா, சிலேட்டு, பலப்பம், அரிசி, தேங்காய், மஞ்சள், குங்குமம் போன்றவை கொண்டு செல்ல வேண்டும்.
இத்தலத்துக்கு அருகிலேயே மகாகாளி கோயில், தத்தாத்ரேயா கோயில், வியாச மகரிஷி குகை, சிவன் கோயில்களும் உள்ளன. 

அமைவிடம்: ஹைதராபாத், நிஜாமாபாதில் இருந்து 34 கி.மீ. தூரத்தில் உள்ளது பஸôர் சரஸ்வதி கோயில். இத்திருத்தலத்திற்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு: 08752-255503.

-பா.சுஜித் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT