வெள்ளிமணி

கரும்பு தின்ற கல்யானை!

14th Jan 2022 05:58 PM | எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT

 

திருமறைக்காடு (வேதாரண்யம்) என்ற திருத்தலத்தில் பிறந்த பரஞ்சோதி முனிவர், பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்தவாறு மதுரையை வந்தடைந்தார். 
அங்கு மீனாட்சியம்மையையும், சோமசுந்தரப் பெருமானையும் நாடோறும் வழிபட்டு வந்த நிலையில், ஒருநாள் அம்பிகை அவர் கனவில் தோன்றி, சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய லீலைகளை அழகிய தமிழில் பாடுமாறு பணித்தாள். 
அதன்படி அம்முனிவர் "ஹாலாஸ்ய மகாத்மியம்' என்னும் வடமொழியில் உள்ள திருவிளையாடற்புராணத்தை தமிழில் மொழி பெயர்த்து மூன்று காண்டங்களாக இயற்றி அளித்ததாகச் சொல்லப்படுகிறது. (மதுரைக்காண்டம் - 18 படலங்கள், கூடற்காண்டம் - 30 படலங்கள், திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள் ஆக மொத்தம் 64 படலங்கள்) இதில் கூடற்காண்டத்தில் வருவது எல்லாம் வல்ல சித்தரான படலம்:
மதுரையை ஆண்ட அபிஷேக பாண்டியனுக்கும், மக்களுக்கும் இம்மை, மறுமைப் பயன்கள் உண்டாகும் பொருட்டுச் சோம சுந்தரக்கடவுள் எல்லாம் வல்ல சித்தராக வடிவம் கொண்டார். 
அவர் செய்யாத சித்து வேலைகளே இல்லை. மதுரை நகர மக்கள் யாவரும் தத்தம் தொழில்களையும் மறந்து அதைப்பற்றியே பேசலாயினர். இதனை அறிந்த பாண்டிய மன்னனும் அவரை தன்னிடம் அழைத்து வரப் பணித்தான். ஆனால் சித்தரோ "எமக்கு அரசனாலாகும் பயன் ஒன்றுமில்லை!' என்று கூறி, வர மறுத்துவிட்டார். 
இதனால் பாண்டிய மன்னன் சற்று மனம் வருந்தினாலும், இறையம்சம் பொருந்திய சித்தரை, தானே நேரில் சென்று சந்திக்க ஆயத்தமானான்.
அன்று தைத் திங்கள் முதல் நாள். வழக்கம் போல் ஆலயத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வலம் வந்த பாண்டிய மன்னன், வழியில் சித்தர் அமர்ந்திருப்பதைக் கண்டான். 
அவரைப்பற்றி அறியும் பொருட்டு, அவருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்ற எண்ணத்திலும் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டான் மன்னன். 
சித்தரும் "தான் எல்லா நாடுகளிலும் சுற்றித் திரிபவர் என்றும், பல சிவத்தலங்களை தரிசித்தவாறு, தற்போது மதுரையம்பதிக்கு வந்ததாகவும், மேலும் மன்னனால் தமக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை!' எனவும் சொல்லிச் சிரித்தார்.
சற்று இறுமாப்புடன் கலந்த அவர் பதிலைக் கேட்டு, சித்தரை சோதிக்க எண்ணினான் மன்னன். அவரிடம் ஒரு கரும்பை கொடுத்து, அருகில் உள்ள கருங்கல் யானைச் சிற்பத்தைக் காண்பித்து,"இக்கரும்பை இந்தக் கல்யானை உண்ணுமாறு செய்வீராயின், எல்லாம் வல்லவர் நீர் என்று ஒப்புக் கொள்கிறேன்!' என்றான். 
உடனே சித்தர் அந்த கல் யானையைக் கடைக் கண்ணால் நோக்க, அது உயிர் பெற்று, இடிபோல் பிளிறி, தன் துதிக்கையால் அரசன் கையில் இருந்த கரும்பைப் பறித்துத் தின்றது. கரும்புச் சாறும் அதன் வாயிலிருந்து ஒழுகியது. 
சித்தர் மீண்டும் கல்யானையை நோக்க, அது மன்னனின் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பறித்தது. இதனைக் கண்டு அரசன் சினம் கொல்ல, அரசனின் ஏவலர்கள் சித்தரை அடிக்க கையை ஓங்கினர். சித்தர் அவர்களை நோக்கி கையமர்த்தி நிறுத்த, அவர்கள் அனைவரும் கற்சிலை போல் நின்ற இடத்திலேயே நின்றனர். 
சினம் தணிந்து மன்னனும், சித்தரிடம் மன்னித்து அருளுமாறு வேண்டினான். சித்தரும் மனமிரங்கி மன்னித்து, மன்னன் விரும்பியபடி அவனுக்குப் பிள்ளை வரம் தந்தருளி மறைந்தார். கல்யானை மீண்டும் கல்லானது. இன்றும் ஆலயத்தில் கரும்பு தின்ற கல்யானை சிற்பத்தைத் தரிசிக்கலாம்.
நடந்தவையெல்லாம் சோமசுந்தரப் பெருமான் தனக்கு அருள்வதற்காக நிகழ்த்திய திருவிளையாடல் என்று அறிந்த பாண்டிய மன்னன் அவரை உளமாற வாயாரத் துதித்து வழிபட்டான். சிவபெருமான் அருளால் மன்னனின் வம்சமாக விக்கிரம பாண்டியன் பிறந்தான்.
இதனை வெகு அழகாக பரஞ்சோதி முனிவர் "கடாக்கல் யானை, மடைக்கண் திறந்து, படிவாய் திறந்து, கைச் சுவைத் தண்டைப் பறித்தது!' என்றெல்லாம் திருவிளையாடற் புராணத்தில் வர்ணித்துள்ளார்.
இன்று (ஜனவரி 14) தை முதல் தேதியில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் இந்த ஐதீக விழா, உள் விழாவாக நடைபெறுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT