வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: 56 - சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன்

14th Jan 2022 06:05 PM | ஜி.ஏ.பிரபா

ADVERTISEMENT

 

"த்வதுந் மேஷாஜ்ஜாதம் ஜகதித - மúஸஷம் ப்ரலயத:
பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத - நிமேஷாஸ் - தவ த்ருஸ:'

-செளந்தர்ய லஹரி

அம்பிகை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக வெவ்வேறு தலங்களில் இருந்தாலும் இம்மூன்றும் சேர்ந்த மகா சக்தியாக சிதம்பரத்தில் காட்சி அளிக்கிறாள். 

சைவப் பெருமக்களுக்கு "கோயில்' என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கிறது. தேவாரத் திருத்தலங்களுக்கு நுழைவாயிலாகத் திகழ்கிறது சிதம்பரம்.

ADVERTISEMENT

இறைவன் இங்கு ஆனந்த நடராஜ மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். இந்த ஆனந்தத் தாண்டவத்தை முழுமையாக அனுபவிப்பவள் அன்னை சிவகாமசுந்தரி.

இறைவனின் நடனத்தை "நாதாந்த நாடகம்' என்பார்கள். இதை நன்கு அனுபவித்து உலகத்துக்கு உணர்த்துபவள் அன்னை. 

"பாலுண் குழவி பசுங்குடர் பேராதென நோயுண் மருந்து தாயுண்டாங்கே!' என்று பாடுகிறார் குமரகுருபரர் சுவாமிகள். 

இறைவனின் அன்றாட நிறைவு பூஜையில் அவரின் பள்ளியறையில் சிவபோக சுந்தரி எனப்படும் "இச்சா சக்தி'யாக அமர்ந்திருப்பவள் இவளே ஆவாள்! பொற்சபையில் ஆனந்த நடராஜ மூர்த்தியின் அருகில், சிவகாம சுந்தரி எனும் பெயருடன் "கிரியா சக்தி'யாக விளங்குகிறாள். இவளே பிரதான மூர்த்தியான "ஞானசக்தி'யுமாவாள்.

உலகின் ஆதி சக்தியாக அன்னை வீற்றிருக்கும் அற்புத úக்ஷத்திரம் சிதம்பரம். ஆறடி உயரத்தில் அழகு மிளிரக் காட்சி அளிக்கும் அன்னையைத் தரிசித்து ஆனந்தம் அடைந்தவர்கள் பல்லாயிரம் கோடிப் பேர். உலகம் என்ற உடலின் இதயப் பகுதியாக இருப்பது சிதம்பரம்.

அன்னையின் அழகில் மனம் உருகி, அவள் கருணையில் நனைந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கிட முடியாது. கிழக்கு நோக்கி அன்னை நின்றிருக்கும் இடம் "திருக்காமக் கோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

சிவகங்கைத் தீர்த்தக்கரைக்கு மேற்கே நூற்றுக்கால் மண்டபம், பாண்டி நாயகம் என்னும் முருகன் கோயிலுக்கும் இடையில் அம்பிகை அருள் காட்சி அளிக்கிறாள். 

முன்பாக சொக்கட்டான் மண்டபமும், இரண்டடுக்கு மாளிகை போல் அமைந்த வெளிப்பிரகாரமும், மகா மண்டபத்துடன் கூடிய கருவறையும் அமைந்து "ஒட்டியான பீடம்' என்ற சிறப்புப் பெயருடன் எல்லையில்லா அழகுடன் திகழ்கிறது.

உள்பிரகாரத்தில் சித்திர குப்தரும், அவரைப் பார்த்தபடி நடுக்கம் தீர்த்த விநாயகரும் தென்மேற்கு மூலையில் அமர்ந்துள்ளனர். சித்திர குப்தர் எதைக் குறித்துக் கொண்டாலும், அந்த நடுக்கத்தைத் தீர்ப்பவர் விநாயகர். வடக்குப் பக்கம் சுகப்பிரம்ம ரிஷி ஸ்தாபித்த சாளக்கிராமத்தினால் ஆன ஸ்ரீசக்கரம் விளங்குகிறது. 

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழனின் ஆட்சியில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, மணவிற் கூத்தன் காளிங்கராயன் காலத்தில் திருப்பணிகள் முற்றுப் பெற்றதாக வரலாறு குறிக்கிறது.

அம்பிகையை வலம் வரும்போது உள்பிரகாரத்தில் சப்த மாதர்களும், அத்யயன கணபதியும், ஆறுமுகனும், சண்டிகேஸ்வரியும், விசேஷமாக அம்பிகையின் முன்பு நந்திகேசரும் இருக்கிறார்கள்.

அன்னை சர்வ அலங்கார பூஷிதையாக காட்சி அளிக்கிறாள். ஜொலிக்கும் கிரீடமும், பளிச்சிடும் மூக்குத்தியும், புல்லாக்கும், தங்க வளைகள், தண்டை, கொலுசு, மெட்டி அணிந்து, வாசனை குங்குமம் இட்டு, வலக்கையில் அட்சர மாலையும், இடக்கையில் கிளியும் தாங்கி, மங்களமே உருவான ஞானசக்தியாகத் திகழ்கிறாள். 

ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வந்தபோது, கேனோப உபநிஷத்தில் வரும், "உமாம் ஹைமா வதீம்!'- என்ற பதத்திற்கான பொருளில் ஐயம் ஏற்பட்டு அன்னையை வேண்டி நின்றார். 

அப்போது அன்னை அவர்முன் தோன்றி "அது நானே!'என்று விளக்கம் தந்தார்.

அன்னையை வேண்டி நின்றால், புகழ், கல்வி, செல்வம், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், அறிவு, அழகு, இளமை, துணிவு, நோயின்மை, தீர்க்காயுள் என்று பதினாறு செல்வங்களையும் தந்து நம்மை வாழ வைப்பாள்.

இங்கு தில்லைமரம் தல விருட்சமாக விளங்குகிறது. சிவகங்கை தீர்த்தம், பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் என்று பல்வேறு தீர்த்தங்கள் உள்ளன. 

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான இங்கேதான் தேவாரப்பாடல்கள் மீட்டெடுக்கப் பட்டன. பஞ்ச சபைகளில் பொற்சபை இது. நள்ளிரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் இங்கு வந்து சேர்கின்றன என்பது ஐதீகம்.

நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் கருங்கற்களால் கட்டப்பட்ட பெரிய மதிற்சுவர்களுடன், விண்ணைத் தொடும் அளவுக்கு நான்கு ராஜ கோபுரங்களுடன், பிரம்மாண்டமாக அமைந்துள்ளது கோயில். கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்களின் சிற்பங்கள், கிழக்கு, மேற்கு கோபுரங்களில் நூற்றியெட்டு நடன பாவங்களை அறிவிக்கும் சிற்பங்களும் செதுக்கப் பட்டுள்ளன. 

"இங்கு நடராஜர் இடது பாதம் தூக்கி நடனம் ஆடுவது ஏன்?' என்று தஞ்சாவூர் பாபவிநாச முதலியார் ஒரு பாடலில் அழகான விளக்கம் சொல்கிறார்.

"சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்று தரையில் அடி வைக்கத் தயங்கி நின்றதுவோ?' என்று கேட்கிறார்.

"ஈசன் தன் இடப்பாகத்தை சக்திக்குத் தந்துள்ளார். எனவே, நடனமாடும் போது மனைவிக்குரிய இடது பாகம் தரையில் பட்டால் மனைவிக்கு வலிக்குமே என்று தன் இடது காலைத் தூக்கி ஆடுகிறார்!' என்று அவர் பாடுகிறார்.

அன்னையை வல்லி என்கிறார். வல்லி என்றால் கொடி, வளைந்து, வளைந்து செல்லும். அன்னையின் சிலையிலும் இடுப்பை வளைத்துச் செதுக்கி இருக்கிறார்கள். அம்பாள் சிவனுடன் இணைந்து தன் அருளைக் கொடிபோல் படர விடுவாள்!.

"அன்னைக்கு சதா சர்வகாலமும் தன் பக்தர்களின் நலன் பற்றித்தான் சிந்தனையாம். எனவே அவள் கண்களால் ஈசனையே எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்!' என்கிறார் ஆதிசங்கரர்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT