வெள்ளிமணி

நம்பாடுவானும் கைசிக ஏகாதசியும்!

ஆர்.​அ​னு​ராதா

திருக்குறுங்குடி எனும் திவ்ய தேசம்.  வராக அவதாரம் கொண்ட பெருமாள் தன் பிராட்டியோடு இங்குள்ள சிறு குடிலில் சில காலம் தங்கியமையால் குறுங்குடி எனப்பட்டது. பயங்கரமானவராக ரூபத்தை மிகவும் குறுகச் செய்தமையாலும் குறுங்குடி எனப்பட்டது.

"அழகிய நம்பிராயர் கோயில்' என அழைக்கப்படும் கோயிலின் மூலவர் நின்ற நம்பி  "குறுங்குடி நம்பி',  "வடுக நம்பி', "வைஷ்ணவ நம்பி' என்ற பல பெயர்கள் உண்டு. கிழக்கு நோக்கிநின்ற கோலம். தாயார் - குறுங்குடி வல்லிநாச்சியார். தீர்த்தம்- திருப்பாற்கடல். விமானம் - பஞ்சகேதக விமானம்.

வைணவ திவ்ய தேசங்களில் கால பைரவருக்கு என புராதனமான சந்நிதி அமைந்திருப்பதும் இங்கேதான். இந்த பெருமாளிடம் வேண்டித்தான் வேதம் தமிழ் செய்த மாறன் நம்மாழ்வார், காரியாருக்கும் உடைய நங்கைக்கும் மகளாக அவதரித்தார். திருமங்கை ஆழ்வார் பரமபதித்தது இத்தலத்தில்தான். அவரது திருவரசும் இங்கு உள்ளது. ராமானுஜர் இத்தலத்தில் குருவாக அமர்ந்து அழகிய நம்பி சீடனாக இருக்க அவருக்கு நாராயண மந்திரம் ஓதியது இத்தலத்தில்தான். 

ஆண்டுக்கு 25 ஏகாதசிகள் வந்தாலும் மார்கழி சுக்ல பக்ஷ ஏகாதசியான  
"வைகுண்டஏகாதசி',  கார்த்திகை மாத  "கைசிக ஏகாதசி' ஆகிய இரண்டும் ஏற்றம் மிக்கவை.  இவற்றிலும்  கைசிக ஏகாதசி விரதம் இருந்தால்,  ஆண்டில் அனைத்து ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் உண்டு .

கைசிக ஏகாதசி பலன்: கைசிக ஏகாதசி குறித்த வரலாறு  நடந்த இடம் திருக்குறுங்குடியாகும். ஒருமுறை பூமியானது பிரளயத்தில்  மூழ்கிவிட, பெருமாள் வராக உருவம் கொண்டு,  பூமிப்பிராட்டியைக்காத்து, அவள் 
ஆயாசம் தீர தன்னுடைய மடியில் அமர்த்தினார். மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின்துயர் தீர, பகவானிடம் வேண்டினார். இதற்கு உபாயம் எனக்காட்ட,  இந்த  "கைசிக புராணத்தை பூமித்தாயாருக்கு" உரைத்தார்.

நம்பாடுவானும் பிரம்மராட்சசனும்: 

"மகேந்திரகிரி' என்ற மலையடிவாரத்தில் வசித்து வந்த ஒரு பாணன் கைசிக பண்ணில் பாடுவதில் வல்லவர். நம்பாடுபடுவன் என்று இறைவனே அழைத்ததுண்டு.  ஒருநாள் கோயிலுக்குச் செல்லும்போது வனப் பகுதியில் இருந்த பிரம்மராட்சசன் ஒருவன் நம்பாடுபவனைப் பிடித்துக் கொண்டு, தனக்கு உணவாக்கிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தான். இதற்கு நம்பாடுவான், ""நான் கார்த்திகை ஏகாதசி விரதத்தில் இருக்கிறேன். விரதம் முடித்துப் பெருமாளை வணங்கிவிட்டு வரும்போது பசிக்கு உணவாவேன்'' என்று சொன்னார். இதை ராட்சசன் நம்ப முடியாதென்றுசொன்னான். "நான் நாராயணனின் பக்தன். பொய் கூறேன்' என்று சத்தியம் பண்ணிக்கொடுக்க, ராட்சசனும் சம்மதித்து அனுப்பினான்.

வழக்கம்போல் கோயிலுக்கு வெளியே துவஜஸ்தம்பத்துக்கு எதிரே நின்று பாடி, அழகிய நம்பிராயரை தரிசிக்க வேண்டுமென மனதில் எண்ணியவுடன் கொடிமரம்  விலகி காட்சி தர பெருமாளைக் கண்டு மகிழ்ந்து தனது விரதம் முடித்து திரும்பினான். 

நம்பாடுவான் திரும்பும்போது குறுங்குடி அழகிய நம்பி  முதியவர் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரில் வந்து, ""இவ்வழியே செல்லாதே.  பிரம்மராட்சசன் இருக்கிறான். அவன் உன்னைத் தின்று விடுவான்'' என்று சொல்ல, நம்பாடுவான் சிரித்துக்கொண்டே,  ""அவனுக்கு உணவாவதற்காகவே நான்செல்கிறேன். பெருமானே சொன்னாலும் சத்தியத்தை மீற மாட்டேன்'' என்றார்.  இதைகேட்ட எம்பெருமான் நம்பாடுவானுக்கு சுயரூபத்தைக் காட்டி மறைந்தார்.

பிரம்மராட்சசனைச் சந்தித்த நம்பாடுவான், "" என்னைப் புசித்துப் பசியாறு'' என்றான். ""அவன் எனக்குப் பசியே இல்லை. அதற்கு பதிலாக நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்கு கொடு'' என்று கேட்டான். நம்பாடுவான் முடியாதென்று மறுத்தான்.

"முற்பிறவியில் யோக சர்மா என்ற பிராமணனாக இருந்தேன். யாகத்தை இழிவாகக் கருதி பற்றில்லாமல் செய்ததால் இப்படியாகநேர்ந்தது. உன்னைப் போன்ற பக்தர்களின் தரிசனத்தாலும்,  ஸ்பரிசத்தாலும் எனக்கு சாப விமோசனம் ஆகும்  என்று வரமிருப்பதால்,  உன் வரவுக்காகக் காத்திருந்தேன். எனக்கு பிரம்மராட்சச  உருவம் நீங்க நீ பெற்ற விரத பலத்தில் கால் பங்காவது கொடு'' என்று நம்பாடுவானின் பாதத்தில்வீழ்ந்து பிரம்மராட்சசன் சரணடைந்தான். அவனை அன்போடு எடுத்து அரவணைத்த நம்பாடுவான் உகந்து, பலனை தருவதாகச் சொல்ல,  ராட்சசனும் சுய உருவடைந்தான்.

கார்த்திகை மாத கைசிக ஏகாதசி இவ்வாண்டு டிச. 4}இல் வருகிறது. அன்று கோயிலில் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், இரவு சுமார் 11 மணிக்கு மேல்  கெளசிக புராணம் வாசிக்கப்படும்.

விவரங்களுக்கு } 04635265291, 9360548252.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT