வெள்ளிமணி

பொன்மொழிகள்!

12th Sep 2021 06:36 PM | சுவாமி கமலாத்மானந்தர்

ADVERTISEMENT


ஏ மனிதனே! சூரியன் முதலிய ஒளிரும் பொருள்களுக்கு ஆதாரமாக இருக்கும் தேவன் யார்? 
ஏற்கெனவே பிறந்து இறப்பதற்கும், இனி பிறக்க இருப்பதற்கும் யஜமானன் யார்?
அந்த பரமாத்மாவே பூமி முதல் சூரியலோகம் வரையில் படைப்பு முழுவதையும் ஆக்கி, தாங்கி நிற்பவர். அந்தப் பரம்பொருளிடம் நாம் பக்திகொண்டு அவரை வழிபடுவோமாக.     
-ரிக் வேதம் 10, 127,1.

பரமாத்மாவே அக்கினியும், சூரியனும், வாயுவும், சந்திரனும், சுக்கிரனும், ஜலமும், பிரஜாபதியும் ஆவார். அவரே எங்கும் வியாபித்திருக்கிறார்.
 -யஜுர்வேதம் 32, 1.

இந்த ஏழைகள், குருடர்கள், செவிடர்கள், அங்கஹீனர்கள், நோயாளிகள் ஆகியவர்களைக் கண்ட பிறகும் எவன் உள்ளத்தில் தயை தோன்றவில்லையோ அவன் மனிதனல்ல அரக்கன்தான்.    
-ஸகந்த புராணம், ரேவா -13

பிறர் தன்னிடம் யாசிக்கும்போது எவர்கள் மகிழ்கிறார்களோ, அளிக்கும் தானத்தை அன்பாகவும், இனிய சொல்லுடனும் அளிக்கிறார்களோ, தானத்தினால் கிடைக்கும் பயனை விட்டுவிடுகிறார்களோ அவர்கள் சொர்க்கம் சேருவார்கள்.        
தம் பகைவரிடமும் கடுஞ்சொல் சொல்லாமல், பிறரது நல்ல குணங்களையே பேசுபவர்கள் சொர்க்கம் சேருவார்கள்.
எவர்கள் தம் மனம் மொழி மெய்களால் பிறர் மனையை விழைவதில்லையோ அவர்கள் சொர்க்கம் சேருவார்கள்.
 - பத்ம புராணம், பாதாள - 92 -17, 19, 20.

ADVERTISEMENT

ஏ அக்கினி தேவனே! என்னை தெய்வங்களுக்கு வேண்டியவனாக ஆக்கு; அரசர்கள் என்னை விரும்பட்டும்; சூத்திரர்கள் என்னை விரும்பட்டும்; சான்றோர்கள் என்னை நேசிக்கட்டும்; பார்ப்பவர்கள் எல்லோரும் என்னை விரும்பட்டும்.
- அதர்வண வேதம் - 3, 27, 1. 

இந்த உலகத்தில் நல்ல குணம், தீய குணம் ஆகியவை கலந்திருக்கின்றன. இத்தகைய உலகம் முழுவதிலும் யோகிக்கு எங்கும் ஆத்மாவே தென்படுகிறது. அந்த யோகிக்கு வேண்டியவன் யார், வேண்டாதவன் யார்?
யோகியின் அறிவு சுத்தமாக இருக்கிறது. அவன் மண்கட்டியையும் தங்கப்பாளத்தையும் ஒன்றுபோலவே மதிக்கிறான்; அவன் எல்லா உயிர்களையும் ஏற்றத் தாழ்வின்றி சமமாகக் கருதுகிறான்  அத்தகைய யோகி என்றும் அழியாத நிலை எய்தி, பிறவி மரணம் என்று சக்கரம்போல் மாறிமாறி வரும் இந்தச் சூழலலிருந்து விடுபடுவான்.    
-மார்க்கண்டேய புராணம் 41, 2324

சபைகள் சிலவற்றில் நல்ல வார்த்தைகளும், தீய சொற்களும் ஒன்று போலவே வரவேற்பை பெறுகின்றன. அந்தச் சபையில், செவிடர்கள் குழுவில் அமைதி காக்கும் சங்கீத வித்வான்போல் ஞானிகள் அமைதி காப்பார்கள்.
 -மகாபாரதத்தில் விதுரர்

ADVERTISEMENT
ADVERTISEMENT