வெள்ளிமணி

வேதத்தின் விளக்கொளி!

8th Oct 2021 01:22 PM | முன்னூர் ரமேஷ்

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு அருகே, பொன்விளைந்த களத்தூரை அடுத்து அமைந்துள்ளது ஆனூர் வேதநாராயணப் பெருமாள் திருத்தலம். கி.மு. 3 -ஆம் நூற்றாண்டு முதலே இங்கு மக்கள் வாழ்ந்து வந்துள்ளதை  இங்கு கண்டெடுக்கப்பட்ட கற்கால ஈமச் சின்னங்களின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. 

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் ஒன்று சேரும் இடமே "பிரயாகை' என்றும், "திரிவேணி சங்கமம்' என்றும் போற்றப்படுகிறது. இந்த இடத்தில் நீராடினால் நம் பித்ருக்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும், அதனால் அவர்கள் மோட்ச உலகம் சென்று மகிழ்வார்கள் என்பதும் அன்பர்களின் நம்பிக்கையாகும். 

தட்சிணப் பிரயாகை:  இதுபோன்றே, "க்ஷீர நதி' என்று போற்றப்படும் பாலாறு, வேகவதியாறு மற்றும் செய்யாறு ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் சங்கமமாகும் இடமே திருமுக்கூடல் திருத்தலமாகும். இந்த நதியானது தெற்கிலிருந்து வடக்காகப் பாயும் இடமான "படாளம்' என்ற ஊருக்கு அருகில், ஆனூர் ஸ்ரீவேத நாராயணப் பெருமாள் கோயில் அமைந்திருப்பதால் இந்த நதியும் பிரயாகைக்கு நிகராக, "தட்சிணப்பிரயாகை' என்று போற்றப்படுகிறது. 

ADVERTISEMENT

பித்ரு தோஷப் பரிகாரத் தலம்: எனவே, ஆனூர் வேதநாராயணப் பெருமாளை வழிபடுவதாலும், இத்தலத்தில் உள்ள "வேத மங்கள தீர்த்தம்" என்ற கிணற்றின் புனித நீரை அருந்துவதாலும், பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பதோடு, பிரம்மஹத்தி தோஷமும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 

ஸ்ரீமந் நாராயணன் தன் அடியார்களைக் காப்பாற்றும் உறுதியில் எந்த நேரத்திலும் பின் வாங்காதவன். இதனால் பெருமானை "மஹதோ மஹீயாந்' அதாவது "பெரியவற்றுக்கெல்லாம் பெரியவன்' என்று புகழ்கிறது வேதம். 

நம்மை உய்விக்கும் பொருட்டே எம்பெருமான் பல அவதாரங்களை எடுத்து வந்திருக்கிறான். அந்தப் பரம்பொருளே கலியுகத்தில் அர்ச்சாரூபத்தில்  புராதனமான ஆனூர் திருத்தலத்தில் "வேதநாராயணப் பெருமாளாக'  எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இப்பெருமானின் திருமேனி முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது என்றும் கூறப்படுகிறது. 

ஒன்பது கல்வெட்டுகள்: மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரியனை அடக்கியதால் சோழ மன்னர் முதலாம் ராஜராஜனுக்கு "சத்தியாசிரிய குலகாலன்' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது. இதன் நினைவாகவே ஆனூருக்கு "சத்தியாசிரிய குலகால சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளதை இத்தலத்தின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆனூரைச் சேர்ந்த ஒன்பது கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

வேதப் படிப்பு: இக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் ஆனியூர் (ஆனூர்) மகாசபையினர் அந்தணர் ஒருவருக்குப் "பட்டவிருத்தியாக' நிலம் அளித்த செய்தியும், அவர் சாம வேதத்தில் தேர்ச்சி பெற்று விளங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், வழக்கப்படி இக்கோயிலில் நான்கு மாணவர்களுக்கு வேதம் முதலிய பாடங்களைச் சொல்லித்தர வேண்டும் என்றும், அவர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்க வேண்டும் என்றும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. 

ராஜராஜ சோழர் காலத்தில் நிலத்திலிருந்து பெறப்பட்ட வருவாய் மூலம் இக்கோயிலில் கல்விச் சேவைகள் நடைபெற்றதை அறியும்போது, வேத பண்டிதர்களுக்கும், மாணவர்களுக்கும் மன்னர் அளித்த முக்கியத்துவத்தை உணர முடிகிறது. 

ராஜராஜ சோழரின் மெய்க்கீர்த்தியும் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. வேதநாராயணப் பெருமாள் கோயிலின் முக மண்டபத்தில் மிக அழகான ஒரு பெருமாள் சிலை; அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இச்சிலை பாலாற்றின் கரையில் மணல் அள்ளும்போது கிடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.      

பொதுவாக, வைஷ்ணவத் திருத்தலங்களில் கோயில் மேல் முகப்புகளில் சுதைகளினால் ஆன கருடாழ்வார் சிலைதான் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் இதற்கு மாறாக சுதைகளினால் ஆன சிம்மங்கள் உள்ளன. 

மகாமண்டபத்தின் இடது புறத்தில் ஸ்ரீராமபிரானும், சீதா தேவியும், வலது புறத்தில் பிரபையுடன் காட்சி தரும் பக்த அனுமனும், பிரபையின்றி காட்சி தரும் பக்த அனுமனும் அருள் பாலிக்கின்றனர். பெரிய திருவடி கருடாழ்வார் அஞ்சலி அஸ்தத்துடன் சேவை சாதிக்கிறார். கோயிலின் வெளிப்புறம் கருங்கல்லினால் ஆன  அழகிய தூண் ஒன்றும் காணப்படுகிறது.  

திருப்பணி: இத்தகைய பெருமைகள் மிக்க  இத்திருக்கோயில் தற்பொழுது திருப்பணியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதன் அருகிலுள்ள இதுபோன்ற மற்றொரு புராதனத் திருத்தலமான ஆனூர் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில், ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகத்தினரின் முயற்சியால், அண்மையில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.  

அதேபோன்று, வேதத்தின் விளக்கொளியாகத் திகழும் வேத நாராயணர் கோயிலும் விரைவில் புனரமைக்கப் பட்டு புத்தொளி வீசுவதற்கு, பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளைச் செய்து பெருமாளின் பேரருளைப் பெற வேண்டுகிறோம்!  தொடர்புக்கு: ஆர்.தேவராஜன் - 90801 92363 / 9551066441. 

 

Tags : temple perumal Chengalpattu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT