வெள்ளிமணி

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?

DIN

தில்லை நாதனிடம் எல்லையில்லா பக்தி கொண்டு, அவரைத் தனது அழகு தமிழ் கீர்த்தனைகளால் அர்ச்சித்தவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கோபால கிருஷ்ண பாரதி (1810 -1896).

அவரைச் சிவனடியார், சித்த புருஷர், அருளாளர், மகான், யதி, ஹடயோகி எனப் பலவாறு போற்றிப் புகழ்கின்றனர் அவரது சீடர்கள். கோபாலகிருஷ்ண பாரதி, நாகை மாவட்டம் நரிமணம் என்ற கிராமத்தில் (இவ்வூர், முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் "நரிமன்றமான கிடாரப் பிராந்தக நல்லூர்' என்று அழைக்கப்பட்டுள்ளதாக இங்குள்ள அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.  தற்போது பெட்ரோல் ஊற்று கண்டறியப்பட்டுள்ள ஊர்) அந்தணர் குலத்தில் அவதரித்தார். 

பின்னர் அவர் முடிகொண்டான், கூத்தனூர் ஆகிய ஊர்களில் வாசம் செய்து, இறுதியாக தனது சங்கீத குரு கோவிந்த யதிகள் வாழ்ந்த ஊரும், சிதம்பரம் நடராஜப் பெருமானின் புராணத் தொடர்புடைய ஊருமான, ஆனந்த தாண்டவபுரத்தை தன்னுடைய நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொண்டார்.

மிகவும் எளிதாக, பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில், மனதை வருடிக் கொடுக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்ப்பாடல்களைத் தன் இசை ஞானத்தால் அளித்துள்ளார். வள்ளல் நாகை கந்தப்ப செட்டியாரின் வேண்டுதலை ஏற்று, நந்தனார் சரித்திரத்தை புது பாணியில், உள்ளம் உருகக்கூடிய இசைச் சொற்பொழிவாக வடிவமைத்துத் தந்தார்.  

நந்தனார் சரித்திரத்தை பொதுமக்கள் கண்ணீர் மல்க அமர்ந்து கேட்பதைக் கண்ணுற்ற அப்போதைய பிரெஞ்சு கலெக்டர் ஸீúஸ, அதனைப் புத்தக வடிவில் அச்சடித்து அனைவருக்கும் அளிக்க ஏற்பாடு செய்தாராம். 

சம்பிரதாய பஜனைகள் நடக்கும் இடங்களில் இவரது தமிழ் பாடல்கள் இடம் பெறும். மிக முக்கியமாக ஆபோகி ராகத்தில்  "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?' என்ற சாகாவரம் பெற்ற பாடலை இவர் பாடும்போது சபையில் உள்ளோருக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். "தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யர்,  கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்களைப் புகழ்ந்து, அவரைத் தனது இசை ஆசானாகப் போற்றியுள்ளார். 

கோபாலகிருஷ்ண பாரதி பிரம்மச்சாரி. தினமும் பிராமணர்களின் கடமையான பிட்சை எடுத்து, அன்றைய ஆகாரத்தை இறைவனுக்கு சமர்ப்பித்து, பின்னர் அதை உண்டு வாழ்ந்து வந்தார். தன் கடைசி நாள்களில் தன் வசமிருந்த பணத்தின் மூலம், சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு சம்பா சாத நைவேத்யமும், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்களில் அர்த்தஜாம பூஜைகளைக் காணவரும் பக்தர்களுக்கு எளிய முறையில் அன்னதானமும் செய்வதற்கு ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்திவிட்டு, ஒரு சிவராத்திரி நாளன்று, சதாசிவ சிந்தையுடனேயே சிவபதமடைந்தார். 

இந்த ஆண்டு அவரது ஆராதனை விழா சிவராத்திரியன்று (மார்ச் 11-ஆம் தேதி) வைதீகமாக மயிலாடுதுறையில் ஓர் அன்பர் இல்லத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து, அனைவரும் கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்களைக் கேட்டு மகிழும் வண்ணம் ஓர் இசைவிழா மார்ச் 13, 14 -ஆம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் (வள்ளலார் கோயில் பிராகாரத்தில்) நடைபெறவுள்ளது. 

இக்கோயில் குளக்கரையில்தான் கோபாலகிருஷ்ண பாரதி அவ்வப்போது அமர்ந்து தன் பாடல்களைப் புனைவதிலும், யோகம் மேற்கொள்வதிலும் ஈடுபடுவாராம். முன்பு ஆனந்த தாண்டவபுரத்தில் நடைபெற்ற இவ்விழா, பின்பு அவரது பெயரிலேயே "இசைவிழா டிரஸ்ட்' ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து 33 ஆண்டுகளாக மயிலாடுதுறையில் நடைபெற்று வருகிறது. 

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதால், இசைப்பிரியர்கள் அதற்கேற்றாற்போல் பங்கேற்று அந்த மகானுக்கு அஞ்சலி செலுத்துவோமாக. நரிமணக்காரரின் நறுமணப் பாடல்களை நாடெங்கும் ஒலிக்கச் செய்வதில் நமது பங்கும் இருக்கட்டுமே..! 

மேலும் தகவல்களுக்கு: மாலினி ஸ்ரீராம், குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா (டிரஸ்டிகள்) - 9790744070 /  9884371723.

-எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT