வெள்ளிமணி

திருமணத் தடை நீக்கும் வக்கரை மந்தாரம்

என்.எஸ். நாராயணசாமி

மயிலாடுதுறை மாவட்டத்தில், வக்கரை மந்தாரம் என்கிற அழகான திருவூரில் ராகு தோஷம் நீக்கி பக்தர்களுக்கு திருமண பாக்கியம் கிட்ட அருள் பாலிக்கும் அபயாம்பிகை சமேத அற்புத சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

அதன் சிறப்புகளைப் பார்க்கலாம்: 

திருநாவுக்கரசர் அருளிய úக்ஷத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் வக்கரை மந்தாரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊருக்குத் தற்போது ஆத்தூர் என்று பெயர். அப்பர் திருப்புகலூரில் பாடிய பதிகத்தில் இந்த ஊரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"மண்ணிப்படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரைமந்தாரம் வாரணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் பெண்ணையருட்டுறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்கண்ணை களர் காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே...'

மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் என்று பொருள் தரும் இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு சிறப்பு மிகுந்த சிவத் தலங்களில் "வக்கரை மந்தாரம்' என்று அழைக்கப்பட்ட ஆத்தூரும் ஒன்று.

மண்ணியாறு: தேவர்களையும், முனிவர்களையும் அச்சுறுத்தி வந்த கொடிய அரக்கனாம் சூரபத்மனை வதம் செய்த பின், முருகப்பெருமான் பல சிவத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தார். அப்படி ஆறுமுகர் ஆத்தூர் வந்த போது, நீராட வேண்டி தன் வேலாயுதத்தை பூமியில் விடுத்தார். ஊற்றெடுத்த அந்த இடம் ஒரு நதியாக மாறியது. அந்த நதியில் நீராடி, கந்தன் இத்தலத்தில் கருணை பாலிக்கும் சொர்ணபுரீஸ்வரரை வழிபாடு செய்தார் என்று இத்தல புராணம் கூறுகிறது. 

முருகப்பெருமானால் அன்று ஊற்றெடுத்த அந்த சுப்பிரமணிய நதி இப்போது "மண்ணியாறு' என்கிற பெயரில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

கிழக்கு நோக்கிய இவ்வாலயம் இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. நந்திமண்டபமும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியே உள்ளது. மூலவர் சொர்ணபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். இங்கு அபயாம்பிகை, கயற்கண்ணி என்று இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. 

கயற்கண்ணி: முற்காலத்தில், இங்கிருந்த மந்தார வனத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கயற்கண்ணி என்ற ஒரு பெண். ஏழை அந்தணர் தன் பெண்ணிற்குத் திருமணம் செய்ய முடியாமல் தவித்து மந்தாரவனநாதரை மனமுருகி வேண்டினார். அவர் பக்தியை மெச்சி, சொர்ணபுரீஸ்வரரே எழுந்தருளி கயற்கண்ணியை கல்யாணம் செய்தார். ஆதலால் இத்தலத்து கயற்கண்ணி அம்பிகையை வழிபட்டால் திருமணத்தடை,  சுக்கிரதோஷம் ஆகியவை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். 

ஆண்டு தோறும், ஆயிரக்கணக்கானோர் இந்த அம்பிகையை வணங்கி அருள் பெற்று செல்கின்றனர். இக்கோயிலுள்ள அஷ்டபுஜ துர்க்கை கையில் பூவும், கிளியும் ஏந்தி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கையை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அபிஷேக, அர்ச்சனை செய்தால் மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும்.

நந்தியெம்பெருமான்: ஒரு முனிவர் புத்திரபாக்கியம் வேண்டி சிவபெருமானை வெகு நாள்களாக வழிபாடு செய்து வந்தார். நீலகண்டன் அவருக்கு அருள் பாலிக்க, நந்தியெம்பெருமான் அந்த முனிவருக்கு மகனாக அவதரித்தார். 

நந்தி, சிவபெருமானை பூஜித்து வர, இறைவன் நந்திக்கு ஞானம், அறிவு, ஆற்றல் ஆகிய வரங்களை அளித்து ஞானத்தை உபதேசித்தார். 

இந்த நந்தியை வழிபாடு செய்தால் அறிவு, ஞானம், புத்திர பாக்கியம், பதவி உயர்வு பெறலாம். இந்தப் புராண வரலாற்றை நினைவு படுத்தும் வகையில், நந்தி சிவபெருமானை வழிபடும் அரிய சிற்பம் இவ்வாலயத்தில் உள்ளது.

தவளைக்கு அருளிய அம்பிகை: கோயிலுக்கு வெளியே இவ்வாலயத்தின் சிறப்பு மிக்க "மண்டூக தீர்த்தம்' உள்ளது. இக்கோயில் குளத்தில் ஒரு தவளை வெகு நாள்களாக வசித்து வந்தது. ஒரு சமயம் பெரு மழை பெய்ய, தவளை கரை ஓரத்தில் ஒதுங்கிய போது, பாம்பு ஒன்றிடம் சிக்கியது. 

"கோயில் குள தீர்த்தத்தில் வாசம் செய்தும், தனக்கு இப்படி ஒரு கதி நேர்ந்ததே!' என்று தவளை வருந்த, அம்பிகை அங்கு எழுந்தருளி தவளைக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்தாள். உடனே, தவளை பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டது. தீர்த்தமும் "மண்டூக தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. 

இந்த சிறப்பு மிகுந்த தீர்த்தத்தில் நீராடி, ராகு காலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் மண்டூக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம், ஜாதகத்தில் ராகு 1, 2, 5, 7, 8 மற்றும்  11-ஆம் இடங்களில் இருக்கும் தோஷம் ஆகியவை நீங்கும். 

அமைவிடம்: வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து, அங்கிருந்து பந்தனை நல்லூர் சாலையில் வலது புறம் சென்று ஆத்தூரை அடையலாம். வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT