வெள்ளிமணி

மழலைப்பேறு நல்கும் மாம்பழ வழிபாடு 

11th Jun 2021 04:52 PM | -எம். கோகுலகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

தொண்டை நாட்டில் சிறந்து விளங்கும் 32 சிவத் தலங்களுள் 12-ஆவது தலமாக விளங்குவதும், நால்வரால் பாடல் பெற்ற சிறப்பைப் பெற்றதுமான திருக்கோயில், திருவூறல் என்னும் தக்கோலத்தில் அமைந்திருக்கும் மரகதவல்லி சமேத மாம்பழநாதீஸ்வரர் ஆலயம் ஆகும். 

தக்கன் ஓலமிட்டு சிவனை வழிபட்டதால் இந்த இடத்திற்கு தக்கன் ஓலம் (தக்கோலம்) என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தல புராணம்: பஞ்சபாண்டவர்களின் வனவாசத்தின் போது நடைபெற்ற ஒரு சம்பவமே இத்தலவரலாற்றுப் பின்னணியாக கூறப்படுகிறது. சூதாட்டத்தில் துரியோதனாதிகளிடம் அனைத்தையும் பறிகொடுத்து ஆதரவற்றவர்களாய் பகவான் கண்ணனின் துணையை மட்டும் நம்பி, அவர் வழிகாட்டுதலுடன் வனவாச யாத்திரையின் ஒரு அங்கமாக சில சிவத்தலங்களை தரிசித்த வண்ணம் திருவூறல் என்ற தக்கோலம் பகுதிக்கு வந்து சேருகிறார்கள். 

ADVERTISEMENT

அங்குள்ள அடர்ந்த வனத்தில் நன்கு வளர்ந்த மாமரத்தில் ஒரே ஒரு அழகான மாம்பழம் தொங்கிக்கொண்டிருந்தது. கண்ணைப் பறித்த வண்ணம் இருந்த அதனை திரெளபதியின் ஆசைக்கு இணங்க அர்ஜுனன் வில்லால் வீழ்த்தினான். அச்சமயம் அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் சிலர், அம்மாமரம் கெளதம மகரிஷியின் ஆசிரமத்தைச் சேர்ந்தது என்றும், 12 வருடங்களுக்கு ஒரு முறையே பூத்து, காய்த்து, பழுக்கும் அம்மரத்தின் பழத்தை சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பார் என்றும், பாண்டவர்கள் செயலால் மகரிஷியின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாவது நிச்சயம் என்றும் கூறினர். 

செய்வதறியாது திகைத்த பாண்டவர்கள் கண்ணபிரானை வேண்டித் துதித்தனர். அசரீரியாக கிடைத்த வாக்கின்படி, தர்மரிலிருந்து ஆரம்பித்து பஞ்சபாண்டவர்கள் ஒவ்வொருவராகவும், இறுதியில் பாஞ்சாலியும் அம்மரத்தினடியில் தங்கள் மனதிலுள்ள "மனோ நிச்சயத்தினை' (உள்ளது உள்ளபடி ஒளிவுமறைவின்றி கூறல்) கூற, மாம்பழம் மரத்தில் திரும்பவும் ஒட்டிக் கொண்டது. பாண்டவர்கள் தர்மத்தை உலகிற்கு உணர்த்த இறைவனே காட்சி தந்தருளினார். அவர்களால் வழிபடப்பட்ட பெருமானே மாம்பழநாத ஈஸ்வரர் எனப் போற்றப்படுவதாக வரலாறு. தல விருட்சமாக மாமரம் அமைந்துள்ளது.  

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகத்தின் போது கைகளில் ரேகை தெரிவது இவ்வாலயத்தில் தனிச்சிறப்பு. 

பரிகாரச் சிறப்பு: புத்திர பாக்கியம் வேண்டுவோர் கணவரின் நட்சத்திர நாளில் தம்பதி சமேதராய் ஆலயத்திற்கு வந்து இரண்டு மாங்கனியை இறைவனின் சந்நிதானத்தில் வைத்து வேண்டி, ஆளுக்கு ஒன்றாக உட்கொண்டால் நிச்சயம் பலன்கிட்டும். 

சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம், கட்டடக்கலையின் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு, வட தமிழகத்தின் சஷ்டியப்த பூர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. 

அமைவிடம்: அரக்கோணம் வட்டத்தில், வரலாற்று சிறப்பு மிக்கத் திருவூறல் என்னும் தக்கோலத்தில் அமைந்துள்ள இவ்வாலயம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும், திருவாலங்காட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 

தொடர்புக்கு: திருமாம்பழநாதர் திருப்பணிக் குழுவினர் - 9994714422.

Tags : மழலைப்பேறு நல்கும் மாம்பழ வழிபாடு 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT