வெள்ளிமணி

பிறரிடம் கையேந்தாமை!

11th Jun 2021 05:01 PM | -மு. அ.அபுல் அமீன்

ADVERTISEMENT

 

பிறரிடம் கையேந்தி இரப்பது இழிவானது. அப்படி இரப்பவனுக்கு இரவாதிருப்பது அதனினும் இழிவானது.  இல்லை என வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி வழங்குபவன் மேலோன். இல்லாமையால் பிறர் இல்லம் தேடிச் செல்லாமல், இரக்கத் தயங்கி, மயங்கி இருப்போரின் குறிப்பறிந்து கொடுத்து உதவுவது உயர்வானது. 
"பிறருக்குக் கொடுக்கும் பழக்கமே உங்களிடம் இருக்க வேண்டும். பிறரிடம் வாங்கும் பழக்கம் உங்களை அணுகக் கூடாது. இத்தீய பழக்கம் பிள்ளைகளுக்கு ஏற்படாது இளமையிலிருந்தே பயிற்று விக்க வேண்டும்' என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) கூறினார்.  
இது நபி மொழியைப் பின்பற்றிப் புகன்ற அறிவுரை. 
"நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட தன்னிறைவு உடையவர்களாக விட்டுச் செல்வதே சாலச் சிறந்தது' அறிவிப்பவர் - சஅத் (ரலி) நூல் -புகாரி. 
"ரகசியமாக எதையும் யாரிடமும் கேட்காதீர்கள் என்று கேண்மை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த பிறகு எந்நிலையிலும் எதையும் யாரிடமும் கேட்டது இல்லை' என்று அப்துற் றஹ்மான் இப்னு அவ்ப் இப்னு மாலிக்கில் அசஜா (ரலி) கூறியது முஸ்லிம், திர்மிதீ, நஸஈ நூல்களில் உள்ளது. 
அன்னை ஆயிஷா (ரலி) பிறரிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதனை விரும்பவும் மாட்டார்கள். அன்பளிப்புகள் அளிப்பவருக்குப் பிரதியாக ஆயிஷா (ரலி) அன்பளிப்புகள் அனுப்பி விடுவார்கள். 
ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான உணவு பொருள்களைத் தயார்படுத்திக் கொள்ள கூறுகிறது குர் ஆனின்  2- 197 ஆவது வசனம். அப்பொழுது நபிகள் (ஸல்) அவர்களின் நற்றோழர்கள் சிலர் "எதுவுமே இல்லாத அவர்கள் எவ்வாறு உணவு பொருள்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்?' என்று வினவினர். 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறரிடம் கையேந்தாமல் உணவுப் பொருள்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள ஊக்கம் ஊட்டினார்கள். நூல் - தப்சீர் இப்னு அபீஹாத்திம்.
"சொர்க்கத்தில் முதலில் நுழையும் மூன்று மனிதர்களில் ஒருவர் பிறரிடம் கையேந்தாமல் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்' என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாக்குறுதியை அறிவிக்கிறார். அபூ ஹுரைரா (ரலி) நூல் - திர்மிதீ 1566.
"ஈ யென்று நான் ஒருவரிடம் நின்று கேளாத நிலையில் நிமிர்ந்து நிற்கச் செய்' என்று இறைவனை இறைஞ்சுவது நிறைவைத் தரும்..! 

 

Tags : பிறரிடம் கையேந்தாமை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT