வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: 50 - உறையூர் வெக்காளி அம்மன்

3rd Dec 2021 06:00 AM

ADVERTISEMENT

 

"அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹு நகர -விஸ்தார - விஜயாத்ருவம்
தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா விஜயதே'

-செளந்தர்ய லஹரி

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றார் ஒளவை மூதாட்டி. சில இடங்களில் அம்பிகை வானமே கூரையாகக் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களைக் காக்க அமர்ந்திருக்கிறாள். அப்படி வேண்டும் வரம் அருளும் வெக்காளி அம்மனாக திருச்சி அருகே உறையூரில் கோயில் கொண்டிருக்கிறாள் அம்பிகை.

ADVERTISEMENT

முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது உறையூர். அழகான உறையூரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள் வெக்காளி அம்மன். சோழர்களின் போர்க்கடவுளாக விளங்கியவள் வெக்காளி அம்மன். வெற்றியை அருள்வாள். வீரத்தை அதிகரிப்பாள். நீதியரசி, குறை தீர்க்கும் கொற்றவையும் இவளே. தீமைகளை அழிக்கும் ஸ்ரீதுர்க்கையாக விளங்குகிறாள். வீரத்தையும், வெற்றியையும் அளிக்கும் தெய்வங்களை வடக்கு நோக்கி அமைப்பது வழக்கம். அவ்வவகையில் வெக்காளி அம்மன் கோயிலும் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

வானமே கூரையாகக் கொண்டு, வெட்ட வெளியில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறாள் வெக்காளி.

உறையூரை வன்பராந்தகன் என்ற மன்னன் ஆட்சி செய்தபோது, சாரமா முனிவர் தன் ஆசிரமத்தில் நந்தவனம் அமைத்து, அதில் பல்வேறு மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார். அந்த மலர்களைப் பறித்து, மாலையாகக் கட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமிக்கு அணிவித்து வந்தார்.

அப்போது, பிராந்தகன் என்ற பூ வணிகன், மன்னரிடம் நல்ல பெயர் வாங்க, யாரும் பார்க்காத நேரத்தில் முனிவரின் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து, மன்னருக்குக் கொடுத்தான். நல்ல வாசமுள்ள, அழகிய மலர்களைக் கண்டு மகிழ்ந்த மன்னன், நாள்தோறும் அதுபோன்ற மலர்களைப் பறித்து வர உத்தரவிட்டான்.

சாரமா முனிவர் தமது நந்தவனத்தில் பூக்கும் மலர்கள் குறைவதைக் கவனித்து, உண்மையை மறைந்திருந்து கண்டுபிடிக்கிறார்.

பூ வணிகனின் கள்ளத்தனம் பற்றி முனிவர், மன்னனிடம் முறையிட, அவன் கண்டு கொள்ளவில்லை. எனவே முனிவர், தாயுமானவ சுவாமியிடம் முறையிடுகிறார். தன் பக்தனின் வேதனையைக் காணப் பொறுக்காத ஆண்டவன், தன் முகத்தை உறையூர் பக்கமாகத் திருப்புகிறார். உடனே, அங்கு மண்மாரிப் பொழிய ஆரம்பித்தது.

உறையூரை மண் மூடிவிட, மக்கள் தங்களைக் காக்க வேண்டி வெக்காளி அம்மனிடம் தஞ்சம் புகுந்தனர். அன்னை, ஈசனிடம் வேண்ட மண்மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடு இழந்தனர். வெட்டவெளியில் நின்றார்கள். அவர்களின் துயர் கண்ட அன்னை, ""உங்களுக்கு வீடு கிடைக்கும்வரை, நானும் உங்களைப் போல் வெட்டவெளியில் இருக்கிறேன்!'' என்று கூறி விட்டாள்.

இன்றும் பலர் வீடு இல்லாமல் இருப்பதால் தன் உறுதிமொழி நிறைவேறாத அம்பிகை வெட்டவெளியையே கூரையாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். பலமுறை மேற்கோபுரம் கட்ட முயற்சித்தும் அது நிறைவேறாமலேயே போனது.

"மதுரையை எரித்த கண்ணகிக்கு பெருநற்கிள்ளி எடுத்த பத்தினிக் கோட்டமே இன்று வெக்காளி அம்மன் கோயிலாக விளங்குகிறது' என்றும் சிலர் கூறுகின்றனர்.

சுற்றிலும் அழகான மண்டபம். நடுவில் வெட்டவெளியே கூரையாக அன்னையின் கருவறை உள்ளது. இடது பக்கம் வல்லப கணபதி சந்நிதியும், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சந்நிதியும் உள்ளது.

மேலும் காத்தவராயன், புலி வாகனத்தில் பெரியண்ணன், மதுரைவீரன் சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு அபூர்வமாக, நாகப்பிரதிஷ்டையுடன் விநாயகர் அருள்கிறார். பொங்கு சனீஸ்வரருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பு.

அன்னை அமர்ந்த நிலையில் மேற்கரங்களில், உடுக்கையுடனும், இடதுபுறம் பாசம், கீழ்ப்புறம் வலக்கரத்தில் சூலம், இடது கரத்தில் கபாலத்துடன், இடது காலில் அரக்கனை மிதித்தபடி காட்சி அளிக்கிறாள்.

தங்கள் கோரிக்கைகளை பக்தர்கள் ஒரு சீட்டில் எழுதி கருவறை அம்மனுக்கு நேர் எதிரிலுள்ள, சூலத்தில் கட்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாதான். சித்திரைப் பெருவிழா, வைகாசி மாம்பழ திருவிழா, ஆனியில் காய்கனி அலங்காரம், ஆடி, ஆவணியில் சதசண்டி வேள்வி, புரட்டாசியில் நவராத்திரி, கார்த்திகையில் தீபத் திருவிழா, மார்கழியில் திருப்பள்ளியெழுச்சி, தை, மாசியில் தைப்பூசம், பங்குனியில் மலர் முழுக்கு வழிபாடு என்று கோலாகலமாக இருக்கிறாள்.

வெக்காளி அம்மனுக்கு ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு பொருள் என்பது இங்கு சிறப்பு. சித்திரையில் மரிக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், குங்குமம், பச்சைக் கற்பூரம், பன்னீர், ஆனியில் முக்கனி, ஆடியில் பால், ஆவணியில் எள்ளுடன் நாட்டுச் சர்க்கரை, புரட்டாசியில் அப்பம், ஐப்பசியில் அன்னம், கார்த்திகையில் தீபம், மார்கழியில் பசுநெய், தையில் தேன், மாசியில் போர்வை, பங்குனியில் பசுந்தயிர் என்று பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப் படுகின்றன.

இக்கோயிலைச் சுற்றி வயலூர், திருவானைக்காவல், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவாசி என்று பல திருத்தலங்கள் உள்ளன.

"அன்னையை காணக் கண்கோடி வேண்டும்!' என்கிறது வேதங்கள். அவளின் ஜோதி வடிவமே இந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கிறது.

"சந்திர மண்டலத்தில் வாசம் செய்யும் தேவியின் குளிர்ச்சி மிகுந்த கண்களின் கருணையே பக்தர்களைக் காக்கிறது!' என்கிறது செளந்தர்ய லஹரி.

வெக்காளி அம்மனை வேண்டினால் திருமணத்தடைகள் நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தி அடையும், அனைத்துக் குறைகளையும் நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது வெக்காளி அம்மன் கோயில். அமைவிடம்: திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உறையூர் வெக்காளி அம்மன் திருத்தலம்!

(தொடரும்)

Tags : vellimani Uraiyur Vekkali Amman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT