வெள்ளிமணி

தேவின் திருத்தலங்கள் 18 - காளையார்கோவில் சொர்ணவல்லி அம்மன்

ஜி.ஏ. பிரபா

"தனுச்சாயாபிஸ் தே தருண தாரணி - ஸ்ரீ சரணிபிர்
திவம் சர்வா முர்வீ மருணிமனி மக்னாம் - ஸ்மரதி ய:'

-செளந்தர்ய லஹரி 

சண்டாசுரன் என்கிற அரக்கனின் ஆணவத்தால் அவஸ்தையுறும் தேவர்களையும், மக்களையும் காக்க அம்பிகை காளியாக அவதரிக்க வேண்டும். அந்த அவதாரம் நிகழ ஒரு காரணம் வேண்டும். அதற்கு அம்பிகை ஈசனுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடத்துகிறாள். 

ஒருமுறை கைலாயத்தில் அம்பிகை விளையாட்டாக ஈசனின் கண்களைப் பொத்திவிட, அகில லோகமும் இருண்டு விட்டது. உலகுக்கே ஒளியும், உயிரும் கொடுக்கும் ஈசனின் கண்களை உமையவள் மறைத்து விட்டதால், உலகமே இருண்டு போகிறது. தங்கம்போல் ஜொலிக்கும் அம்பிகையின் நிறமும் கருத்துப்போய் ஆக்ரோஷமான காளியாக மாறி விடுகிறாள்.

பின்னர், தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, சண்டாசுரனை சம்ஹாரம் செய்கிறாள். அதன்பின் காளையார்கோவில் திருத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, தன் கருமைநிறம் நீங்கி, சொர்ணமாக ஜொலிக்கும் பழைய உடலைப் பெறுகிறாள். அதனால் அன்னை "சொர்ணவல்லி' என்று அழைக்கப்படுகிறாள். அன்னைக்கு அருள்பாலிக்க ஈசன் இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார்.
சொர்ணவல்லி, செüந்தரநாயகி, மீனாட்சி என்ற பெயர்களுடன் மூன்று சந்நிதிகளில் அருள் பாலிக்கிறாள் அம்பிகை. கொக்கு மந்தாரை தல விருட்சமாக இருக்கிறது. இங்கு யானை மாடு தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தம், இவற்றுடன் விஷ்ணு, சரஸ்வதி, கௌரி, ருத்ர, லக்ஷ்மி, சுதர்சன தீர்த்தங்களும் உள்ளன.

தேவர்கள் காளியை வேண்டி நின்ற இடம் தேவகோட்டை, சண்டாசுரனை அழித்த இடம் கொடிக்குளம், கரிய நிறம் நீங்க, அம்பிகை தவம் இருந்த இடம் அரியாக்குறிச்சி என்று இப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் அம்பிகையுடன் தொடர்புடையவை.

ஆலயம் நான்கு ஏக்கர் பரப்பளவில் இரண்டு ராஜகோபுரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. சிறிய கோபுரம் சுந்தர பாண்டியனாலும், பெரிய கோபுரம் மருது சகோதரர்களாலும் கட்டப்பட்டது. இந்தக் கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் தெரியும்.

யானை மாடு தீர்த்தம்: ஒருமுறை இந்திரனின் வாகனமான ஐராவதம், மகரிஷி தந்த பிரசாத மாலையை தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற யானை அதன் விமோசனத்துக்காக இங்கு வந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டது. 

அப்பொழுது தன் தந்தத்தால் பூமியைக் கீறி, ஓர் ஊற்றை உண்டாக்கி அந்த நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டு, தன் சாபம் நீங்கி தேவலோகம் சென்றது. எனவே இந்தக் குளத்துக்கு "யானை மாடு தீர்த்தம்' என்று பெயர்.

"சிவகங்கை தீர்த்தம்' காளி தன் வழிபாட்டுக்காக உண்டாக்கியது. ஆடிப்பூரமும், பெüர்ணமி பூஜையும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தன் சாபம் நீங்கி பொலிவான தேகம் பெற்ற அம்பிகையைத் தரிசித்தால் நம் தோல் வியாதிகள் நீங்கும், திருமணப் பாக்கியம் கிட்டும், மழலைப்பேறும் அருள்வாள். இங்கு தங்கத்தாலான பள்ளியறை இங்குள்ளது. தந்தம், தங்கத்தினாலான பள்ளியறை ஊஞ்சல் தரிசனம் இங்கு விசேஷம்.

சுந்தர மூர்த்தி நாயனார்: ஒருமுறை சுந்தர மூர்த்தி நாயனார் இங்கு வந்தபோது ஊர் முழுக்க சிவலிங்கமாக இருந்தது. தரையில் கால் வைத்து அவர் நடக்கத் தயங்கியபோது, ஈசன் தன் காளையை அனுப்பி வைக்கிறார். அது கால் வைத்த இடங்களில் லிங்கம் இல்லையென்று அதன் வழித்தடத்தில் நடந்து சென்றார் சுந்தரர். எனவே "கானப்பேர் எயில்' என்ற இடம் "காளையார் கோவில்' என்று அழைக்கப்படலாயிற்று.

ராஜகோபுரம்: இங்குள்ள ராஜகோபுரம் பற்றி ஒருகதை சொல்லப் படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும், மருது சகோதரர்களுக்கும் நடந்த போரில், மருது சகோதரர்கள் தப்பித்து காட்டில் ஒளிந்து இருந்தார்கள். 

அவர்கள் சரணடையா விட்டால் இந்தப் பெரிய ராஜகோபுரத்தை இடித்து விடப் போவதாக ஆங்கிலேயர்கள் பறை சாற்றினர். கோபுரத்தைக் காக்க மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து, பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார்கள். தேசபக்தியும், தியாகமும், கலைச் சிறப்பும், கம்பீரமும் நிறைந்த கோயில் இது.  நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளமும், கோயிலுக்கு எதிரில் மருது பாண்டியர்களின் சமாதியும் இருக்கிறது. 

சகஸ்ரலிங்கம்: அகலிகையால் சாபம் பெற்ற இந்திரன் சிவகங்கையில் ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டார். அதுவே இன்று நமக்கு சகஸ்ரலிங்கமாகக் காட்சி தருகிறது.     

"வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம் காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளு ஞானநீர் தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே' 

 என்று இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடுகிறது திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம்.

ஆதிசங்கரர் செüந்தர்ய லஹரியில் அன்னையின் ரூபத்தைப் புகழ்ந்து பாடும்போது "உன் தேகத்தின் பிரகாசமே உலகிற்கு ஒளியைத் தருகிறது' என்கிறார். அம்பிகையாக இருக்கும்போது சாந்தமாக இருக்கும் அன்னை, காளியாக மாறும்போது எல்லையற்ற ஆக்ரோஷத்துடன் காட்சி தருகிறாள். தன் பக்தர்களுக்குத் தீங்கு செய்தவர்களை அசுரவேகத்துடன் வந்து அழிப்பவள் காளி மகாதேவி.

சக்தியின் வடிவமான இவளை வணங்கினால் சகல ஆசைகளும் நியாயமான வழியில் நிறைவேறும். இவள் காலத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவள். காளி என்றாலே அச்சம் தரும் தோற்றத்தை தரும்படி படைக்கப் பட்டிருந்தாலும் அவள் அசுரர்களை அழிக்கிறவள். நமக்குள் இருக்கும் அசுர குணங்களை அழித்து, சென்ற பல பிறவிகளில் நாம் செய்த பாவங்களை எல்லாம் நீக்கி, முக்திக்கு வழி காட்டுபவள் மகா காளி. அன்னையின் எழில் உருவம் காணக் கண்கோடி வேண்டும்.

கனிவுடன் நம்மைக் காத்தருள காளையார் கோவிலில் கருணையுடன் காத்திருக்கிறாள் சொர்ணவல்லித் தாயார்! 

இருப்பிடம்: சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் உள்ளது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT