வெள்ளிமணி

கலைகளின் அரசி கள்ளிக்குடி சரஸ்வதி தேவி

இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்

சரஸ்வதி கோயில் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் கோயில்தான். தற்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், "கோட்டூர் நற் கொழுந்தே' என்று திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றுள்ள தேவார வைப்புத்தலமான கோட்டூர் நயினார் வயல் தலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள கள்ளிக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது கலைகளை அள்ளித் தரும் கலைகளின் அரசி சரஸ்வதி தேவி ஆலயம்.

இவ்வூரில் உள்ள ஸ்ரீ காருடைய அய்யனார் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அய்யனார் ஆலயத்தில் "புரவியெடுப்பு' என்னும் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஊரின் நான்கு மூலைகளிலும் நான்கு தூண்கள் நடப்பெற்று, திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

"நாலு பேர் சொன்னபடி நட' என்ற வாக்கு சைவக் குரவர்கள் நால்வர் வாக்குதான் என்பது இந்த கிராமத்தினரின் தெளிவான சிந்தனையாகும். 

ஊரின் முகப்பில் வரவேற்கும் விநாயகர் கோயில், மூதாதையர்கள் கோயில், மாரியம்மன் கோயில், அய்யனார் கோயில் என்று ஆலயங்களுக்கு அழகு சேர்க்க கற்றோர் நிறைந்திருக்கும் இக்கிராமத்தில் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு ஓர் ஆலயம் அமைத்திட முடிவு செய்தார்கள். கள்ளிக்குடி தற்போது கல்விக் குடியானது. "தென் கூத்தனூர்' என்று புகழும்படி மாறியுள்ளது. 

கிழக்கு நோக்கிய சந்நிதியில் பிரதான தெய்வமாக சரஸ்வதி தேவி அருள் பாலிக்கின்றாள். அன்னை இரண்டு கரங்களில் வீணையினை வாசிக்க, வலது மேற்கரத்தில் ஸ்படிக மாலையும், இடது கரத்தில் புத்தகச் சுவடியும் தாங்கி புன்னகையுடன் அருள்புரிகிறாள். அம்பிகையின் முன்புறமாக அவளின் வாகனமான அன்னம் அம்பிகையை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கிறது. 

சந்நிதியின் இருபுறங்களிலும் வலதுபுறம் கல்விக் கடவுளும், குருவுமான ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார். இடதுபுறம் நவ வியாகரண பண்டிதரான ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ பரமேஸ்வரனும், சரஸ்வதி தேவியும் சகோதர உறவு என்பதால் ஸ்ரீபரமேஸ்வரன் போலவே கோஷ்டங்களில் தெய்வங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

தெற்கு நோக்கி ஸ்ரீ தட்சிணாமூர்த்தியும், மேற்கில் "அடிமுடி காட்டாநாதர்' என்னும் அண்ணாமலையாரும், வடக்கில் பிரம்மதேவர் மற்றும் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். 

இந்த ஆலயத்தில் ஒரு புதுமையாக ஒரு தனி சந்நிதி "இஷ்ட தேவதை' என பெயரிட்டு ஒரு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு அவரவர் இஷ்ட தெய்வத்தை நேரில் சென்று வழிபடும் சூழல் அமையவில்லையோ அவர்கள் இங்கே உள்ள சந்நிதியில் தங்களின் இஷ்ட தெய்வத்தை எண்ணி வழிபாடுகள் செய்து மகிழ்கின்றார்கள். 

சிவாலயத்தில் உள்ளது போல் வடகிழக்கில் நவகிரஹங்களின் சந்நிதி தனி ஆலயமாகக் காணப்படுகிறது. 

ஆலயத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சுருக்கமாக வரலாற்றுடன் கூடிய திருவுருவப் படங்கள் வரிசையாக உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள், 18 சித்தர்களின் திருவுருவங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஆண்டவர் அப்பா என்னும் முத்துக் கருப்ப சாமி சித்தர் பிரதானமாக வீற்றிருக்கின்றார். ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டி உற்சாகமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

சரஸ்வதி பூஜை நன்னாளில் சிறப்பு வழிபாடும், விஜய தசமியன்று "அக்ஷர அப்யாசம்' என்னும் புதிய மாணவர்களுக்கு கல்வி தொடங்குதல் விழாவும் சிறப்பாக நடைபெறும். புதிய குழந்தைகள் சந்நிதி முன்பு நெல்லில் ஓமென்று விரலால் எழுதி கல்வியைத் தொடங்குவார்கள். 

ஆண்டுதோறும் நவராத்திரி கொலு பொம்மைகள் அருமையாக அமைக்கப் பெறும். தேர்வு நேரங்களில் இப்பகுதியிலுள்ள மாணவர்கள் நோட்டு புத்தகம், பேனா பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வைத்து வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர். கலைகளை அள்ளித்தரும் கலைகளின் அரசி கள்ளிக்குடி சரஸ்வதி தேவியை நாமும் வழிபட்டு நலன்கள் அனைத்தையும் பெறுவோமாக! தொடர்புக்கு: 94420 47321. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT