வெள்ளிமணி

மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்... 22

சு​ம​திஸ்ரீ

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி


திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே
(பாடல் : 258)

பொருள்: நம் வினைப்பயனால் வந்த இந்தப் பிறவி பெரும் கடல். இதில் நாம் துன்பப் படுகிறோம். பிறவித் துயர்க் கடலை விட்டொழிய, தோணி போல இரண்டு வழிகள் உதவி செய்கின்றன. நாமும், நம் சுற்றத்தாரும் எல்லையற்ற புகழுடையவனான பரம்பொருளின் திருவடித் துணை கொண்டு, துறவு நிலையில் நின்று மேற்கொள்ளும் தவம் மற்றும் இல்லறத்திலே இருந்து செய்யும் தருமங்கள் என்னும் இரண்டுமே அவை.

பிறவி எடுத்து, நமது முந்தைய வினைப்பயன்களால் அவதியுறும் துன்பம் போக்க தவமும், தருமமுமே வழிகள் என்கிறார் திருமூலர்.

இல்லற வாழ்வில் இருப்போர் தருமம் செய்ய வேண்டும் என்பதை எல்லா அருளாளர்களுமே வலியுறுத்துகிறார்கள்.

தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். தானம் என்பது கேட்பவர்களுக்கு உதவி செய்வது. கேட்பவர்களுக்கு ஒன்றைக் கொடுப்பது...! தருமம் என்பது கேட்காமலேயே ஒருவரின் தேவையறிந்து செய்வதாகும்!

சிவ ஆலயங்களில், இறைவனுக்கு முன்னால் நந்தி இருக்கிறது. அது தருமத்தின் வடிவம். தருமம்தான் நந்தியாக வடிவெடுத்தது.

நந்தியின் கொம்புகளுக்கு நடுவேதான் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வதன் பொருள் என்ன தெரியுமா..?

நந்தி என்பது தர்மத்தின் வடிவம். தர்மத்தின் வழியில் நின்றால்தான் இறைவனைக் காண முடியும். தர்மத்தின் வழியில் நின்றுதான் இறைவனைக் காண வேண்டும் என்பதுதான் அதன் உட் பொருள். அதர்மத்தால் ஒரு போதும் இறைவனைக் காண முடியாது.

தர்மத்தில் தலையாயது அடுத்தவர்களுக்கு உணவளிப்பது.
அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே
(பாடல் : 253)

பொருள்: பற்று, பந்தம், பாசம் இவற்றை விட்டொழித்த ஞானிகளுக்கு அவர் உண்ண உணவளிப்பதே மேலான தருமம் என்று நீதி நூல்கள் கூறும். அப்படி பல நூல் கற்று அறிவு மணம் வீசுவதாக சொல்லிக் கொள்ளும் மனிதர்கள், ஞானிகளைத் தேடி, பார்த்தறிந்து, ஆறு அல்லது குளக்கரையில் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் அவர்களை அழைத்து வந்து, அவர்களை உண்ணச் செய்து, அதனால் பெறக்கூடிய புண்ணிய பலனை அறியாமல் இருக்கிறார்களே.

ஞானியரைத் தேடி அழைத்து, உணவு படைத்து அதன் மூலம் புண்ணியம் பெற வேண்டும் என்பதை அறியாதவர்களாக மக்கள் இருக்கிறார்களே என
வருந்துகிறார் திருமூலர்.

கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி,
"அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை..!'
என்று விருந்தினரை உபசரிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறாள்.
சீதையும் அசோக வனத்தில் அமர்ந்தபடி,
"விருந்து வந்த போது என் உறுமோ?'

என்று, விருந்து வந்தால் ராமன் தனியே என்ன செய்வான் என்றே வருந்துகிறாள்.
இப்பாடலில் திருமூலர் சொல்வது போல, அடியவர்களைத் தேடித் தேடி உணவளித்த நாயன்மார்களை பெரிய புராணத்தில் பார்க்கிறோம். உணவளிப்பது மிகப்பெரிய தர்மம்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் சொன்ன தகவல் இது:

அவர் சிறுவனாக இருந்த போது அவரின் அம்மா, கீரை விற்று வந்த பெண்மணியிடம், "இந்தக் கீரைக் கட்டுக்கு நீ சொல்லும் விலை அதிகம். அரையணாதான் தருவேன்' எனப் பிடிவாதம் பிடித்து ஒரு கீரைக் கட்டு வாங்கியிருக்கிறார். அந்த பெண் கீரையைக் கொடுத்து விட்டுக் கிளம்பும் போது, பசியால் உடல் தள்ளாடுகிறார்.

அப்போது "சாப்பிட்டியா, இல்லையா..?' என விசாரித்த அவரின் அம்மா, வீட்டிலிருந்து ஆறு இட்லிகளை எடுத்துக் கொண்டு வந்து கீரைக்கார பெண்மணியை சாப்பிட வைத்து அனுப்பினாராம்.

பின்னர், சொக்கலிங்கம் தன் அம்மாவிடம் "என்னம்மா... அரையணாவுக்கு மேல் கீரைக்குக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னீர்களே...! இப்போது நீங்கள் கொடுத்த இட்லி ஒன்று அரையணா என்றாலும் ஆறு இட்லிக்கு கணக்கு போட்டால் எவ்வளவு வருகிறது...? அதை மட்டும் எப்படி கொடுத்தீர்கள்?' என்று கேட்டுள்ளார்.

அப்போது அவரின் அம்மா சொன்னாராம்... "வியாபாரத்துல தருமம் பார்க்கக் கூடாது..! தருமத்துல வியாபாரம் பார்க்கக் கூடாது..!' என்று.

நீங்கள் தருமத்தை தருமமாக செய்யுங்கள்... நீங்கள் செய்கிற தருமம், உங்களுக்கு இறைவனுடைய அருளை அபரிமிதமாகப் பெற்றுத் தரும்.

(தொடரும் )

(கட்டுரையாசிரியர்: இலக்கியச் சொற்பொழிவாளர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT