வெள்ளிமணி

மங்களபுரியில் மகத்தான வைபவங்கள்!

23rd Oct 2020 06:26 PM | -எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் பரந்தூர் செல்லும் வழியில் உள்ளது கண்ணன்தாங்கல் கிராமம். காஞ்சி புராணத்துடன் தொடர்புடைய இத்தலத்தில் உலகத்தில் முதல் முறையாக மகரிஷி வேதவியாசர் மத்ஸ்ய மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி 108 சக்தி பீட ஆலயங்கள், உலக அன்னை ஸ்வர்ண காமாட்சி தேவியின் கற்கோயிலைச் சுற்றி அமையப்பெற்று ஒரு சக்தி சங்கமமாக திகழ்கிறது. 

நந்தினி கோசாலையும், ஸ்வர்ண கமல நந்தவனமும் ஆலயத்தை மேலும் அழகூட்டுகிறது. உலக நன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சக்தி பீட சங்கம ஆலயம் இந்து சமய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்பது சிறப்பு. 

தேவியின் சாந்நித்தியம் மிகுந்து பக்தர்களின் வேண்டுதல்கள் குறைவின்றி நிறைவேறுவதால் இத்தலம் "மங்களபுரி க்ஷேத்திரம்' என்று ஆன்மிக நேயர்களால் போற்றி அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு விதித்துள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு இவ்வாலயத்தில் ஸ்ரீசாரதா நவராத்திரி மகோற்சவம் அக்.17 -இல் தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து, அக். 24 -ஆம் தேதி அம்பிகைக்கு அத்திவரதர் அலங்காரமும், அக். 25-இல் சரஸ்வதி அலங்காரமும், மூககவி தனது "ஆர்யா சதகம்' ஸ்தோத்திரத்தில் காமாட்சி தேவியின் திருவடிகளைப் பூஜிப்பவர்கள் நவகிரஹங்களையும் பூஜிக்கும் பலனைப் பெறுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு அக். 26-ஆம் தேதி விஜயதசமி அன்று நவகிரஹ நாயகி அலங்காரமும் சிறப்பாக நடைபெற உள்ளன.

நங்கநல்லூர் குருஜி காமாட்சி சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி, ஸ்ரீ காமாட்சி கைங்கர்ய டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சியின் கற்கோயில் வீடு பேறு அளிக்கும் தலமாக அமைக்கப்பட்டு, பின்னர் 2019-ஆம் ஆண்டு அனைத்து இன்பங்களும் வழங்கும் 108 சக்தி பீட ஆலயங்களையும், பொருட் செல்வத்தைத் தரும் சக்தி வலப்பாதையும் அமைக்கப்பட்டன. 

தற்போது நான்காம் கட்டமாக அறம் சார்ந்த ஆலயங்களாக ஸ்ரீஸ்வர்ண கணபதி, ஸ்ரீ சுவாமிநாத சுவாமி,  ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர் ஆகிய தெய்வ மூர்த்தங்களுக்கும், இன்றும் நமக்கெல்லாம் நல்வழி காட்டி அருளும் ஸ்ரீ காஞ்சி மஹா சுவாமிகளுக்கும் தனித்தனி ஆலயங்கள் மங்களபுரிய ஆலய வளாகம் அருகே கட்டப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை அக். 27-இல் நடைபெறுகிறது. இந்த தெய்வீகத் திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்று உதவிடலாம். மேலும் தகவல்களுக்கு: 9841285245 / 9444268655.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT