வெள்ளிமணி

நூறு ஆண்டுகளைக் கடந்த "திருப்புகழ் படி விழா'

கைலாசம் சுப்ரமணியம்

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் 103 ஆண்டுகளுக்கு முன் தொடக்கி வைக்கப்பட்ட திருத்தணி திருப்புகழ் படி விழா ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.  
ஆறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழநி ஆண்டவர் திருக்கோயிலில் ஓர் உற்சவம்  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது "வங்கார மார்பிலணி'  என்ற திருச்செங்காட்டங்குடித்  திருப்புகழுக்கு ஒரு பெண் நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டார், கோயிலில் திருப்பணி  செய்துகொண்டிருந்த அர்த்தநாரி என்ற இளைஞர்.
அவர் அப்பாடலில் ஈர்க்கப்பட்டு, அருணகிரிநாதரின்  திருப்புகழை ராக தாளத்துடன் பாடத் துவங்கினார். மேலும் திருப்புகழை நாடெல்லாம் பரப்பும்  பணியையும் மேற்கொள்ளத் தீர்மானித்தார்.  
பூர்வீகம்: பிரமோதூத ஆண்டு கார்த்திகைத் திங்கள் (1870) கோயம்புத்தூரிலுள்ள பூனாச்சிபுதூர் என்ற  கிராமத்தில் சிதம்பர ஜோசியர், மகாலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அர்த்தநாரி.  மைசூர் சமஸ்தானத்தில் சிறிது காலம் பணி செய்தார். குன்ம நோயினால் அவதிப்பட்டு பழநி வந்து, ஆண்டவரை வழிபட்டு குணமடைந்தார். பின்னர் அங்கேயே தங்கி கோயில் திருப்பணிகளில்  ஈடுபட்டார். 
இதனிடையே பழநியிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும்படி உத்தரவு வர, அங்கு சென்று சேஷாத்திரி சுவாமிகளையும், ரமண மகரிஷியையும் சந்தித்தார். 
அப்பொழுது சேஷாத்திரி சுவாமிகள் அவரிடம், ""திருப்புகழ் மகா மந்திரம். அதுவே உனக்குப் போதுமானது. வள்ளிமலைக்குச் சென்று தவம் செய்!'' என்று கூற வள்ளிமலை சென்றார் அர்த்தநாரி. 
1916-ஆம் ஆண்டு வள்ளிமலை கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த சுவாமிகள் அங்குள்ள மலையில் ஒரு ஆசிரமம் அமைத்துத் தங்கினார். அவருக்கு ஊர் மக்களும் ஆதரவு அளித்தனர். அவரும் மக்களுக்குத் திருப்புகழைக் கற்றுக் கொடுத்தார்.  நாளடைவில் "வள்ளிமலை  சச்சிதானந்த சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார். 
ஆசிரமம் அருகில் தன்னை ஆட்கொண்ட பொங்கி அம்மனுக்கு மலைமேல் கோயில் அமைத்து  வழிபட்டார். 
சென்னை திருமுல்லைவாயல் வைஷ்ணவி ஆலயத்தில் உள்ள தேவிக்கு "வைஷ்ணவி'  என்ற பெயரைச் சூட்டியவர் சுவாமிகள்.  
"திருப்புகழ் வேல்மாறல்', "திருப்புகழ்க் கோ பூஜை', "தின அநுட்டானத் திருப்புகழ்', "மார்கழிப்  பாராயணத் தவநெறித் திருமுறை' முதலிய நூல்களைத் தொகுத்துள்ளார். முருக பக்தர்களால்  தமிழ்நாடு மட்டுமன்றி வெளிநாட்டிலும் வேல்மாறல் பாராயணம் செய்யப்படுகிறது. 
திருத்தணி திருப்புகழ் படி விழா: 1917-18-ஆம் ஆண்டில் திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் படி விழாவைத் துவக்கி வைத்த பெருமை வள்ளிமலை சுவாமிகளையே சாரும். அன்று முதல் 103 ஆண்டுகளைக் கடந்து இன்று வரை திருப்புகழ் அன்பர்கள் ஆண்டு தோறும் டிசம்பர் - 31, ஜனவரி - 1 ஆகிய தேதிகளில் திருத்தணி மலைப் படிகளில் திருப்புகழ் பாடி தணிகேசனை வணங்கி  வருகின்றனர். 
வள்ளிமலை அமைவிடம்: காட்பாடி - அரக்கோணம் இடையே திருவலம் ரயில் நிலையத்துக்கு  வடக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளிமலை. இத்தலத்தில் தான் முருகப் பெருமான், வள்ளியம்மையுடன்  பல திருவிளையாடல்கள் நிகழ்த்தி அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
அருணகிரிநாதர்  இத்தலத்து இறைவன் மேல் "வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த பெருமானே, வனசரர் மரபினில் வருமொரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமானே'என்று பதினோரு திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார். 
மலையடிவாரத்தில் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமானாகவும், மலைக் கோயிலில் ஒரு திருமுகத்துடனும் அருள்பாலிக்கிறார். அருகிலுள்ள மலைக் குகையில் திருப்புகழ் வள்ளிமலை  சுவாமிகள் ஆசிரமமும், சமாதியும் உள்ளது.  
குருபூஜை: சுவாமிகள் விக்ருதி ஆண்டு கார்த்திகைத் திங்கள் அசுவினி நட்சத்திரத்தன்று (22-11-1950)  முருகப் பெருமானின் திருவடியை அடைந்தார். 
அவருடைய 70-ஆம் ஆண்டு குருபூஜை வள்ளிமலை திருப்புகழ் ஆசிரமத்தில் நவம்பர்  27, 28 இரண்டு நாள்களிலும் நடைபெறும். 
மகாசமாதி குருபூஜை, திருப்புகழ் பாராயணம், பொங்கி அம்மன்  பூஜை, அன்னம் பாலிப்பு போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. நாமும்  திருத்தணி
கேசனை வணங்கி, வேல்மாறலை பாராயணம் செய்து வளமுடன் வாழ்வோம். 
மேலும் தகவலுக்கு ஸ்ரீ வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபை: 044- 42694228/  9444005878. 

கார்த்திகை விரதம்!


நாரத முனிவர் ""யாவராலும் ஏற்கப்படுகின்ற ஏழுவகை முனிவர்களுக்குள் நானே மேன்மையுமாறு ஒரு விரதத்தை உரைத்தருளுக!'' என்று விநாயகப் பெருமானிடம் வேண்டினார். அவரும், ""ஆறுமுகங்களையுடைய தம்பியான கந்தனை வழிபட்டு கார்த்திகை நட்சத்திர விரதத்தைப் பன்னிரண்டு ஆண்டுகள் மேற்கொள்வாயாக. அதனால் நீ விரும்பியதைப் பெறுவாய்''என்று அருளினார். 
நாரதரும் பூவுலகத்திற்கு வந்து, பரணி நட்சத்திர நாளில் ஒரு பொழுது உண்டு, கார்த்திகை நட்சத்திர நாளில் உபவாசமிருந்து முருகப் பெருமானின் திருவடிகளை அர்ச்சித்து, அப்பெருமானின் புராணத்தையும் கேட்டு, இரவு முழுவதும் உறங்காது, திருவடிகளை தியானித்தவாறு இருந்தார். 
மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று பாராயணம் செய்தார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதத்தை முறைப்படி செய்து ஏழுவகை முனிவர்க்கும் மேலான உயர்ந்த பதத்தை அடைந்தார். இந்த விரதத்தை மனு சக்கரவர்த்தி, திரிசங்கு, அந்திமான், சந்திமான் போன்ற அரசர்கள் கடைப்பிடித்து பேறு பெற்றனர். இந்த வரலாற்றை முசுகுந்தனிடம் வசிட்ட முனிவர் கூறியுள்ளார்.
கந்தப் பெருமான், கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், முருகனடியார்கள் மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து பெருமானை வழிபடுகின்றனர்.
சஷ்டி விரதம், சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம் ஆகிய மூன்று விரதங்களையும், அதை அனுஷ்டித்தவர்களையும் பற்றி கந்த புராணத்தில், கந்த விரதப் படலத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் விவரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT