வெள்ளிமணி

கோமாதாவைப் போற்றும் கோஷ்டாஷ்டமி

20th Nov 2020 06:00 AM | -ரஞ்சனா பாலசுப்ரமணியன்

ADVERTISEMENT

 

பொதுவாக கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியை "கோபாஷ்டமி' அல்லது "கோஷ்டாஷ்டமி' என்று அழைப்பர். இந்த நாளை பசுக்களைப் போற்றிக் கொண்டாடும் ஒரு திருநாளாக வட நாட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) கோஷ்டாஷ்டமி திருநாளாகும்.

கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே கோஷ்டாஷ்டமி கொண்டாடப்பட்டுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.  

மும்மூர்த்திகளுக்கும் ஓர் உலகம் இருப்பது போல், பசுக்களுக்கும் ஓர் உலகம் உள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதைக் "கோ லோகம்' என்பர். திருமாலின் உலகமான வைகுண்டத்தின் ஊர்த்தவ பாகத்தில் இந்த கோ லோகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது  நந்தா, சுசீலை, பத்திரை, சுரபி, சுமனை என்னும் ஐந்து பசுக்கள் தோன்றின. இவற்றின் சந்ததிகளே இன்றளவும் கோமாதாவாக  நமக்குச் சகல செல்வங்களையும் அளித்து வருகின்றன. 

ADVERTISEMENT

பசுவின் பவித்ரமான தேகத்தில் 33 கோடி தேவர்களும் வாசம் செய்வதாய் உபநிஷத்துகள் கூறுகின்றன. பசுவின் கோமியமும், பஞ்ச கவ்யமும் அனைத்து வியாதிகளையும் நீக்கும் தன்மை கொண்டது. குழந்தைப் பருவத்தில்  தாய்ப்பாலை அருந்தும் மனிதனுக்கு அந்தப் பாலுக்கு இணையாக அவன் தேக வளர்ச்சிக்குரிய பாலைத் தரும் பசுவை இந்துக்கள் இரண்டாவது தாயாகக் கருதிப் போற்றுகிறார்கள், பேணிக்காக்கிறார்கள். பசுவை கோ"மாதா' என்று பூஜிக்கிறோம். 

அக்காலத்தில் ஒரு நாட்டை கைப்பற்றும் மன்னன், கோடிக்கணக்கில் செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும், அவன் மனம் பசுவைக் கவர்வதிலேயே குறியாக இருக்கும். பசுக்கள் ஒரு நாட்டின் செல்வங்களாகப் போற்றப்பட்டன.  

பசுக்கள் நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவதன் மூலம்  8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றைச் செய்த புண்ணியம் கிட்டுகிறது. "ஒருவர் இறந்த பின் பூலோகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் கடக்க இயலாமல் தவிக்கும். பசு தானம் செய்பவர்களுக்கு இந்தத் துன்பம் ஏற்படாமல், அவரால்  தானம் செய்த பசு அங்கு தோன்றும். அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியைக் கடந்து விடலாம்' என்கிறது கருட புராணம். 

முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால்  ஏற்படும்  பாவம் பதினாறும் அகத்திக் கீரையை பசுவுக்குத் தருவதால் நீங்கும்; பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவின் பெருமையையும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் பற்றி காஞ்சி மஹா சுவாமிகளின் "தெய்வத்தின் குரல்' என்ற நூல் விவரிக்கிறது.

"ஆ' என்றாலும் பசு; "கோ' என்றாலும் பசு."ஆ'வைக் காப்போம், ஆனந்தமடைவோம்! "கோ' வைக் காப்போம், கொண்டாடி மகிழ்வோம்! 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT