தமிழ்மணி

அங்கணம் என்னுமோர் அரிய சொல்

பிலோமினா சந்தியநாதன்


திருக்குறளில் "அவையறிதல்' என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் தந்திருக்கும் அருமைக் குறள்

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்

"அறிவாலே தம் இனத்தவர் அல்லாதவர் கூடியிருக்கும் அவையில் ஒன்றையும் பேசுதல் கூடாது. .அவ்வாறு பேசு மொழிகள் தூய்மையில்லாத முற்றத்தில் விழுந்த அமுதினைப் போன்றதாகும்" என்பது இக்குறட்பாவின் பொருள்.

அங்கணம் என்னும் சொல்லை வள்ளுவர் இக்குறட்பாவில் எடுத்தாண்டுள்ளது சிறப்பானது. அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் அங்கணம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்த சொல்லாகும். ஓடு வேய்ந்த வீடுகளில் அடுக்களை என்னும் சமையல் செய்கின்ற பகுதியில் தென்மேற்குப் பகுதியில் "அங்கணம்" அமைந்திருக்கும்.

தரையிலிருந்து சற்று பள்ளமாக இவ்வங்கணத்தை அமைத்திருப்பர். இதனை சமையல் செய்த பாத்திரங்களைத் துலக்குவதற்குப் பயன்படுத்துவர். பெண்களின் குளியலறையாகப் பயன்படுத்துவதும் வாடிக்கை. பல ஆண்டுகளாகப்பயனில் இருந்த இச்சொல் புதிதாகக் கட்டிய வீடுகளின் வருகையால் மக்களின்பேச்சு வழக்கிலிருந்து விடை பெற்றுககொண்டன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்றிருந்தால் " அம்மா பால் கெட்டுப்போனமாதிரித் தெரியுது' என்று பிள்ளைகள் சொன்னால், தாய் பாலை வாங்கி மோந்து பார்த்து விட்டு " ஆமா பால் திரிந்து விட்டது" அங்கணத்தில் கொட்டிடு" என்று கூறுவார். அங்கணம் என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் இருந்த சொல்லாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நாலடியாரிலும் அங்ஙனம் என்னும் சொல் எடுத்தாளப்பட்டிருக்கிறது.

நாலடியாரின் பொருட்பால் நல்லினம் சேர்தல் அதிகாரத்தில் அங்கணம் என்னும் சொல் கையாளப்பட்டுள்ளதைக் காண்போம்
ஊரங்கண நீர் உறவுநீர் சேர் ந்தக்கால்
பேரும் பிரிதாகித் தீர்த்தமாம் - ஓருங்
குலமாட்சிஇல்லாரும் குன்று போல நிற்பர்
நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து
"ஊரின் சாக்கடை நீர் கடலைச் சேர்ந்தால் பேரும் கடல் நீர் என்று வேறாகி அருள் நீராகும்.

மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாத கீழோரும் குலப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர் நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி விளங்குவர்' என்பது இப்பாடலின் பொருள்
கம்பராமாயணம் மாயாசனகப்படலத்தில்
வரிசிலை ஒருவன் அல்லால் மைந்தர்
என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ?
அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து
அழுக்குத் தின்னும்
நரியோடும் வாழ்வது உண்டோ?
நாயினும் கடைப்பட்டோனே

அதாவது "நாயினும் கீழ்மைப்பட்டவனே வில்லேந்திய ஒப்பற்ற இராமபிரான் அல்லாமல் என்பக்கலில் வந்த(வேற்று) ஆடவர்கள் விளக்கு எரியில் விழுந்த வீட்டில் பூச்சிபோல உயிரழிவார் அல்லவா? விலங்குகளின் அரசனாகும் தன்மை உடைய ஆண் சிங்கத்தோடு வாழ்ந்த பெண் சிங்கம் புழக்கடையில் அழுக்கைத் தேடித் தின்னும் நரியுடன் கூடி வாழ்வது எங்கேனும் உண்டோ' எனத் தனது தந்தையைப் போன்று உருவம் கொண்ட மாயா சனகனிடம் வெகுண்டு உரைக்கின்றாள் சீதை மேலும் அற த்தையே சொல்லும் அறநெறி சாரத்தில்
முடியுடை அங்கணம் நாடொறும் உண்ட
கடைமுறைவாய் போதரக்கண்டும் - தடுமாற்றறில்
சாவாப் பிறவாச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு
"அழுகல் நாற்றத்தினையுடைய சாக்கடையினைப்போன்று , தினந்தோறும் சாப்பிட்ட உணவுப்பொருட்கள் இழிவான நிலையில் எருவாய் முதலியவற்றின் வழியாக வெளிவருதலைச்செய்யப் பார்த்திருந்தும் தடுமாறு மக்கள் மனமயக்கத்தினாலே செத்தும் பிறந்தும் வாழ்கின்ற இம்மாயமான உலக வாழ்க்கையிடத்தே உண்மைப்பொருளையுணர்ந்த பெரியோர்களின் மனம் பொருந்தாததாகும்' என்பது பொருளாகும் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் திருவருட்பா மூன்றாம் திருமுறை இரண்டாம் தொகுதி சிவநேச வெண்பாவில்
அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலாரைச்
சார்ந்தோர்தம்
வங்கணமே வைப்பதினான் வைத்தனேல் -
அங்கணத்தில்
நீர்போல் எனது நிலை கெடுக நிற்பழி சொற்
றார்போலழிக தளர்ந்து
அருளாளனாகிய சிவனே! நின் திருவடிக்கண் அன்பில்லாரைச் சார்ந்தோர் உறையும் இடத்தில நான் தங்குவதற்கு விருப்பம் கொள்ளேன்; கொள்வேனாயின் சாக்கடையில் நிற்கும் நீர் கெடுவது போல எனது நிலை கெடுக. நின்னைப்பழித்துரைப்பவர் போல் யான் தளர்வுற்றுக் கெடுவேனாக எனப்பொருள் கூறுகிறார் அடிகள்.
இவ்வாறு வள்ளுவர் முதல் வள்ளற்பெருமான் வரை பல்வேறு இடங்களில் அங்கணம் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது நாம் சுவைத்து மகிழத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT