தமிழ்மணி

சிறியதோர் முறுவலும் புதியதோர் முறுவலும்!

ம.பெ. சீனிவாசன்


எட்டுவகை மெய்ப்பாடுகள் பற்றிப் பேசும் தொல்காப்பியர், "நகை' எனப்பெறும் மகிழ்ச்சிக்கே முதலிடம் கொடுக்கிறார்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப    என்பது நூற்பா (1197). 

இந்த "நகை' மகிழ்ச்சியின் வெளிப்பாடான புன்சிரிப்பாகவும், வாய்விட்டுச் சிரிக்கும் பெருஞ்சிரிப்பாகவும், சில சமயம் பிறரைக்குறித்து நகுகின்ற கேலிச்சிரிப்பாகவும் அமையும். புன்முறுவலே இவையனைத்துக்கும் தோற்றுவாய்.
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்; 
                                                                         நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்  (1094)

எனும் குறட்பாவில் வாய்ப்பேச்சுக்கே இடமின்றித் தன்னைப் பார்த்துப் புன்னகை புரிந்த காதலி குறித்துப் பேசுகிறான் தலைவன். அவளின் காதல் விருப்பத்தைக் குறிப்பால் உணர்த்தும் கருவியாக அவளின் மென்சிரிப்பு அமைந்தது.
இனிக் காதல் இருவரைப் பற்றிய ஒரு கம்பசித்திரம்: இராமனும் சீதையும் கோதாவரிக்கரையில் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழும்போது சீதையின் நடையைப் பார்த்து ஒதுங்கிச் செல்லும் அன்னத்தைப் பார்த்தான் இராமன்; மறுகணமே தன் பார்வையைத் திருப்பிச் சீதையின் மேல் செலுத்திச் "சிறியதோர் முறுவல் செய்தா'னாம். 
சீதையும் தன் பங்குக்கு அங்கு வந்து நீர்பருகிச் செல்லும் ஆண் யானையின் நடையைப் பார்த்து அடுத்த நொடியே இராமனைப் பார்த்துப் "புதியதோர் முறுவல்' பூத்தாளாம்.
ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் 
                                                                உழையள் ஆகும்
சீதையின் நடையை நோக்கிச் சிறியதோர் 
                                                             முறுவல் செய்தான்;
மாதுஅவள் தானும் ஆண்டு வந்து 
                                                                  நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் 
                                                                  முறுவல் பூத்தாள் 
என்பது பாடல் (2736). 
இங்கு இவ்விருவரிடையே உரையாடலாக ஒரு சொல் கூட இடம் பெறவில்லை. அதே சமயம் ஒருவர் மீது ஒருவர்க்குள்ள தீராக்காதலை அவர்களின் புன்சிரிப்பே நமக்கு உணர்த்திவிடுகிறது. இராமனின் சிறியதோர் முறுவலைக் காட்டிலும் உவகை மேல் உவகையாக எழுந்த சீதையின் புன்சிரிப்பைப் "புதியதோர் முறுவல்' என்று பாடும் கம்பன் வாக்கில் புதுமை பொலிகிறது.
இனி இவ்வின்பப் புன்முறுவல் நண்பர்கள் மற்றும் அறிந்தவர்களுக்கிடையே கேலிச் சிரிப்பாக மாறுவதுண்டு. பிறருடைய ஏளனத்துக்கு ஒருவர் ஆளாதலும் இளமையால் மடம்பட நடத்தலும் அறிவின்மையால் பிறர் சிரிக்கும்படி நேர்தலும் ஒன்றை மற்றொன்றாக மாறி உணர்தலும் ஆகிய இந்நான்கினாலும் நகைபிறக்கும் என்கிறார் (1198) தொல்காப்பியர். 
நகையா கின்றே தோழி என்னும் நற்றிணைப் பாடல் (245)  இதற்கு நல்ல சான்று. தலைவன் குறையைத் தலைவி ஏற்கும் வண்ணம் தலைவியிடம் சாதுரியமாகப் பேசுகிறாள் தோழி. ""சேர்ப்பன் (கடற்கரைத் தலைவன்) ஒருவன் நம்மை நோக்கி "என்னுயிரைக் கைக்கொண்ட நீ யாரோ' என்று, அவனால் நாம் வருந்துவது அறியாமல் நம்மால் அவன் வருந்தினதாகக் கூறி நம்மை நோக்கிக் கை கூப்பி வணங்கிநின்றான். இதை நினைக்குந்தோறும் எனக்குச் சிரிப்புண்டாகிறது'' என்கிறாள். 
இது பிறரிடத்துத் தோன்றிய பேதைமை காரணமாகப் பிறந்த நகை என்பர் உரைகாரர்.
மைத்துன முறைமையும் உரிமையும் உடையவர்களிடையே நிகழும் கேலிப் பேச்சினை நாமறிவோம். "வெட்கங் கெட்டவனே! மாட்டுத் தொழுவத்தில் விளையாடியதால் புழுதிபடிந்த உன் கோலத்தைப் பார்த்து உன் மாமன் மகளான நப்பின்னை சிரிக்க மாட்டாளா? எனவே மறுக்காமல் நீராடுதற்கு வா' என்று சொல்லித் தன் மகனான கண்ணனை அழைத்தாளாம் யசோதை.
நாண் இத்தனையும் இலாதாய்
நப்பின்னை காணில் சிரிக்கும்;
மாணிக்கமே என் மணியே
மஞ்சனம் ஆட நீ வாராய்        என்பது பெரியாழ்வார்  பாசுரம் (2-4-9
"தன்னைத்தானே வியந்து தற்புகழ்ச்சி செய்து கொள்வாருக்கு மைத்துனர்மார் பலர் உண்டாவர்' என்று கேலி பேசுகிறது நாலடியார்.
பகைவர்களை மதியாது எள்ளுவது இயல்பு. நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் எனப் பாண்டியனின் பகைவர் கூற்றாக வரும் புறநானூற்றுப் பாடலடி (72:1) இங்கு நினைக்கத்தக்கது. "நகுதக்கனர்' எனில் நம்மால் சிரிக்கத்தக்கவர் என்று பொருள்.
வடபுலத்து அரசராகிய கனகவிசயர்கள் காவா நாவினராய்த் தமிழர் வீரத்தை இகழ்ந்து நகையாடினர். அதனால் சேரனின் சீற்றத்துக்கு ஆளாகிக் கல் சுமந்த கதையைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
தான் இகழ்ந்து சிரித்த பகைவரெல்லாம் தன்னைக் கண்டு சிரிக்கும் நிலை உண்டாயிற்றே என்று இராவணன் வருந்துவதாகக் கம்பன் கவிதை காட்டுகிறது. முதல் நாள் போரில் இராமனிடம் தோல்வியுற்று அவனால் அபயம் அளிக்கப்பெற்று ஏறெடுத்து எதையும் பாராதவனாய்த் தரைபார்த்தே நடந்து வருகிறான் இராவணன். 
அந்நிலையில் "தன்பகைவர்கள் சிரிப்பார்களே' என்று அவன் வருந்தவில்லையாம். பிறகு எதை நினைத்து அவனுக்கு வருத்தமாம்?
கம்பன் பாட்டிலேயே அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
வான்நகும் மண்ணும் எல்லாம் நகும் 
                                                  நெடு வயிரத் தோளான்
 நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று 
                                                                அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் 
                                                                        மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தாற் 
                                                     சாம்பு கின்றான் (7282)
பகைவரது எள்ளல் சிரிப்பைக் காட்டிலும் சீதையின் பரிகாசச் சிரிப்பால் உண்டாகும் அவமானத்தைப் பற்றியே அவன் அதிகம் வருந்துகிறான்.
இங்குக் காட்டியவை போலன்றி தமக்குத்தாமே நகுவது பற்றிய ஓர் அரிய குறிப்பினைக் காலிங்கர் உரையிற் காணலாம்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்   (774)
என்னும் குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய மூவரும் தன்கைவேலைக் களிற்றின் மீதெறிந்து வெறுங்கையனாய் நின்றபோது தன்மெய்யின் மேல் பாய்ந்த வேலினைப் பறித்து "கருவிபெற்றோம்' என்று மகிழ்ந்ததாக உரை கூறியுள்ளனர். 
வேலினை இழந்த நிலையில் மார்பில் பாய்ந்த வேலால் அவன் மகிழ்ச்சியடைந்தான் என்பது கருத்து. பரிதியாரும் சற்றொப்ப இதே கருத்தினராய் ""மதயானை கூடப் போர் செய்து கைவேல் பறிகொடுத்த வீரன் மெய்யிலே தைத்த வேலைப்பறித்து "இந்தத் தறுவாயில் வேல் நேர்பட்டது' என்று சிரித்துச் சலிப்பிலன் ஆனான்'' என்று எழுதுகிறார். 
காலிங்கரோ அவ்வீரன் சிரித்ததற்குப் பின்
வருமாறு இரண்டு காரணம் கூறுகிறார்:
""நகும் என்றது "வெறுங்கையாளனை எறிந்தவன் என்ன வீரனோ' என்று ஒரு நகையும் "வெறுங்கைக்கு அம்மா! ஒரு வேல்வந்ததே' என்று ஒரு நகையும் என அறிக'' என்பது அவர் தரும் விளக்கம். இவையிரண்டும் முறையே கேலிச்சிரிப்பும் உவகைச் சிரிப்புமாதலை உணரலாம்.
காலிங்கரின் இவ்வரிய உரைக்குறிப்பு சில சமயங்களில் சிலர் செயல் குறித்து நமக்கு நாமே சிரித்துக் கொள்வதை நினைவூட்டுகிறது இல்லையா?
கதைமாந்தர் பலர் இடம் பெறுகின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற காப்பியங்களில் கதை நிகழ்ச்சிக்கு ஏற்பப் பிறக்கும் நகையாடல்கள் பலவுண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT