தமிழ்மணி

தொக்கமாது அன்று; சொக்கமாது!

எஸ். சாய்ராமன்


தொண்டை நாட்டுத் தலமான திருவான்மியூருக்குத் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தில், அத்தல அம்பிகையின் பெயராக "தொக்கமாது' எனும் சொற்றொடர் வருகிறது. இது "திருவான்மியூர்த் தொக்கமாதொடும் வீற்றிருந்தீர் அருளென்சொலீர்' என்று அச்சுப் பதிப்புகளில் காணப்படுகிறது. சேக்கிழாரின்  பெரியபுராணத்தில் திருவான்மியூர் பற்றிக் குறிப்பிடும் இரண்டு இடங்களிலும் அத்தலத்து அம்பிகையைப் பற்றிய குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை.

திருவான்மியூரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் அருமையான தமிழ்ப்பெயர் "சொக்கநாயகி' என்பதாகும்.  பெரியபுராணத்திற்குப் பின்பு வந்த இலக்கியங்களிலும் அம்பிகைக்கு இந்த அருந்தமிழ்ப் பெயரே காணப்படுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலைய ஏட்டுச்சுவடியான "திருவான்மியூர் சொக்கநாயகியம்மை விருத்தம்' என்னும் நூல், "வான்மியூர் வாழ்...சொக்கநாயகி அன்னையே' என்னும் மகுடம் பெற்று முடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், அஷ்டாவதானம் பூவை. கலியாணசுந்தர முதலியார் இயற்றிப் பதிப்பித்த  "திருவான்மியூர்ப் புராணத்திலும் "சொக்கநாயகி துதி'  உள்ளது.

"சொக்கநாயகி'யை "சொக்கமாது' என்று இலக்கிய வழக்கில் கூறலாம். எனவே, சம்பந்தர் பாடலின் மூலச்சுவடியில், "திருவான்மியூர்ச் சொக்கமாதொடும் வீற்றிருந்தீர்' என்னும் பாடமே காணப்படின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதாக அமையும்.

பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியார், தனது "சிவக்ஷத்திர சிவநாமக் கலிவெண்பா'வில் (கண்ணி: 268) "வான்மியூர் மேவும் வளர்சுந்தரமாதின் பான்மே வியமருந்தே பால்வண்ணா' என்று பாடியுள்ளார்.

தேவார அச்சுப் பதிப்புகளில் காணப்படும் "தொக்கமாது' என்னும் பாடம், மேற்கண்ட கண்ணியில் வரும் "சுந்தரமாது' என்பதுடன் பொருள்பொதிந்து வரவில்லை. "சொக்கமாது' என்பதே பொருள்பொதிந்து வருகிறது. "சுந்தரம்' என்பதும் "சொக்கு' என்பதும் அழகினைக் குறிக்கும் சொற்களாகும். பேரழகு என்று பொருள்படும் அதிசுந்தரமே "சொக்கு' என்று வழங்கப்படுகிறது.

எனவே, "திருவான்மியூர்ச் சொக்கமாதொடும் வீற்றிருந்தீர்' என்று பிழைபட்டு மாறியிருக்கலாம். இதில் இரண்டாம் அடியின் இறுதியில் வரும், "சொலீர்' எனும் மோனைக்குத் தகுந்தாற்போல் "சொக்கமாதொடும்' எனும் எதுகை வருவதே பொருத்தமாக இருக்கும்.

உமாபதி சிவாசாரியார் வாழ்ந்த காலத்தில் அச்சுப் புத்தகங்கள் இல்லையே! அக்காலத்தில் சம்பந்தரின் ஏட்டுச் சுவடியில் "திருவான்மியூர்ச் சொக்கமாதொடும் வீற்றிருந்தீர்' எனும் செம்மையான பாடமே காணப்பட்டிருக்கலாம். அதனால்தான் அவர், "வான்மியூர் மேவும் வளர் சுந்தரமாது' என்று பாடியுள்ளார் என்றும் கருதலாம்.

சொக்கு என்னும் பேரழகைச் சார்ந்து "அன்' விகுதி பெற்றுவரும் "சொக்கன்' எனும் அருந்தமிழ்ப் பெயரின் மீது ஞானசம்பந்தப் பெருமானுக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. அதனால்தான், "ஆலவாய் சொக்கனே' என்று திருவாலவாய் தேவாரத்தில் பாடியுள்ளார். திருவான்மியூர் இறைவனையும் இறைவியையும் இணைத்து "திருவான்மியூர்ச் சொக்கமாதொடும் வீற்றிருந்தீர்' என்று பாடியிருக்கலாமே!

"சிவக்ஷேஷத்திர விளக்கம்' ஏட்டுச் சுவடியில் "பைந்திரு வான்மியூர் பால்வண்ணநாதர் சுந்தர நாயகி துலங்கிய சுந்தரம்' என்று காணப்படுகிறது. இச்சுவடி டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

திருவான்மியூர் அம்பிகையின் பெயர் குறித்த கல்வெட்டுச் சான்று ஏதுமில்லை. ஆயினும், "இராஜேந்திர சோழன், திருவான்மியூர் கோயில் திரிபுரசுந்தரிக்குத் திருவிளக்கு ஏற்ற தானம் வழங்கியிருக்கிறான்' என்று தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் குறிப்பிடுகிறார் (நூல்: வேங்கடம் முதல் குமரிவரை).

திருக்கழுக்குன்றத்து அம்பிகையை "திருமலை சொக்கநாயகி' என்றும் "திருமலை சொக்கி' என்றும் வழங்கிவருவதோடு, "திரிபுரசுந்தரி' என்றும் வழங்கிவருகின்றனர். அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருக்கழுக்குன்றப் புராணத்தில், "மஞ்சொக்க வளர்அளக மலைச்சொக்க நாயகியை வணக்கம் செய்வாம்' என்று வருகிறது. திருவான்மியூர் அம்பிகையும் "திரிபுரசுந்தரி'தானே!

எனவே, என் மனத்தில் "தொக்கமாது' என்பது சரியான பாடமன்று; "சொக்கமாது என்பதே சரியான  பாடமாக இருக்கும் என்று தோன்றியது. மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலில் வரும் "தொக்கவளை' என்பதற்கு "கூட்டமான வளை' என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அழகினைக் குறிக்கும் பொருளமைதி "தொக்க' என்னும் சொல்லாட்சியில் இடம்பெறவில்லை என்றும் தெரிகிறது. இதனால் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் உள்ள தமிழ்த்தாத்தா பயன்படுத்தித் தமது குறிப்புகளையும் திருத்தங்களையும் எழுதிவைத்துப் பதிவு செய்த பழைமையான தேவாரப் பதிப்புகளையும் பார்வையிடலானேன்.

டாக்டர் ஐயரவர்கள் குறிப்புகளை எழுதிப் பதிவு செய்திருக்கும் "மூவர்தேவாரம் ஸ்தலமுறை' என்னும் தேவாரப் பழம்பதிப்பை (1881) கண்டேன். அதில், திருஞானசம்பந்தரின் திருவான்மியூர் பதிகம் வரும் பக்கத்தில், "திருவான்மியூர்த் தொக்கமாதொடும் வீற்றிருந்தீர்' என்பதை, "திருவான்மியூர்ச் சொக்கமாதொடும்  விற்றிருந்தீர்' என்று மிகவும் அருமையாக ஐயரவர்கள் திருத்தி எழுதியிருந்தார். 

ஆம்! தமிழ்த் தாத்தாவுக்கு இந்த அருமைச் சிந்தனை பல்லாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருந்தது சிறப்புக்குரியது. "தக்கில் வந்த' எனத் தொடங்கும் இந்தத் தேவாரப் பாசுரந்தான் ஐயரவர்களின் திருத்தம் பெற்று, "திருவான்மியூர்ச் சொக்கமாதொடும் வீற்றிருந்தீர்' என்று மாசு நீங்கி மெருகூட்டப் பெற்று இன்று புத்தம் புதிதாகப் பொலிகிறது. 

"எழுதுமறை' என்று சேக்கிழார் பெருமானால் குறிப்பிடப் பெற்ற தேவாரத்தைத் திருத்தக் கூடாது என்ற எண்ணம் சைவர்களுக்கு இருந்தது. எனவே, சரியான பாடம் காணக்கூட, தேவாரத்தை அவர்கள் திருத்தவில்லை. ஆயினும், உண்மைப் பாடம் காணவே அவதரித்த சாமிநாதையர் திருவான்மியூர்த் தேவாரத்தை மிகச் செம்மையாகத் திருத்தியிருப்பதில் வியப்பில்லையே! 

எனவே "திருவான்மியூர்த் தொக்கமாது' என்ற பிழைபட்ட பாடத்தைத்தான் "திருவான்மியூர்ச் சொக்கமாது' என்று திருத்தியிருக்கிறார். 

தேவார ஒளிநெறி கண்டவரும் ஆராய்ச்சிப் பெருங்கடலுமான தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளையவர்களும் தமது "தேவார  ஒளிநெறி'யில் "தொக்கமாது' என்றே எழுதியிருக்கிறார். 

ஆயினும், ஐயரவர்களின் அருந்திருப்பணியே "சொக்கமாது' என்னும் உண்மைப் பாடத்துக்கு உயிரூட்டியிருக்கிறது!

இதோ அந்தப் பாடல்:
தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்திறத்
திக்கில்வந் தலறவ்வடர்த்தீர் திருவான்மியூர்ச்
சொக்கமாதொடும் வீற்றிருந்தீர் அருளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT