தமிழ்மணி

குருவிக்கு இரையாகும் நெற்குஞ்சம்

முனைவர் சே. கரும்பாயிரம்


உழவர்கள் நல்ல நாளில் பொழுது விடியும் முன் கதிர் அறுக்க வயலுக்குச் செல்வர். எவ்வித இடையூறுமின்றி அறுவடை நடைபெற வேண்டும் என்பதற்காக வயலின் ஈசானிய மூலையில் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பொருள்களான சூடம், சாம்பிராணி, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றைக் கொண்டு வழிபாடு செய்வர். பின்னர் கதிர் அரிவாள் கொண்டு நெற்கதிரை அறுப்பர். அதனை நாட்கதிர் கொய்தல் என்று இலக்கியம் (முக்கூடற்பள்ளு, 137) கூறும்; கதிர் அறுத்தல் என்று மக்கள் வழக்கில் கூறப்படும்.      

அரிகளாக அறுத்து வைத்த நாட்கதிரைத் தலைப்பு மாற்றி அடுக்கிப் பிரிகள் கொண்டு கட்டித் தலையில் சுமந்து செல்வதை, திருமலைப் பள்ளன் நாட்கதிர் கொண்டு சிரத்துச் சுமந்து போயினான் (திருமலை முருகன் பள்ளு, 157) என்று பாடலடி குறிப்பிட்டுள்ளது. இந்நாட்கதிரைப் பல்லக்கில் எடுத்துச் செல்வதுண்டு. இதனைக் கூனிரும்பிற் கொய்துதொங்கல் பூநிறைந்த சிவிகைமேல் கொண்டுவந்து (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு,167) என்னும் பாடலடியால் அறியலாம்.

அதனால்  நாட்கதிரைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று வைத்து இறைவனிடம் வழிபடுவர்.   கோயிலில் இருக்கும் நாட்கதிரை வயது முதிர்ந்த அனுபவமுடையவர் எடுத்து அதன் அடிப்பகுதியை வரிசைப்படுத்தி நெற்தாள் குறுகியும் நெல்மணி விரிந்தும் இருக்கும்படி தலைக்கீழாகக் கயிற்றினால் பின்னி உருவாக்குவர். இதை நெற்குஞ்சம், கதிர்க்குஞ்சம் என்னும் பெயர்களில் அழைப்பர். இது பார்ப்பதற்கு வட்ட வடிவில் பம்பரம் போல  இருக்கும்.  

நெற்குஞ்சத்தை உருவாக்க சம்பாப் பருவத்து நெற்கதிரினையே பெரிதும் தேர்வு செய்வர். அப்பருவத்து நெற்கதிர் ஆடி மாதம் தொடங்கித் தைம்மாதம் வரை ஆறு மாதங்கள் கொண்டு இருப்பதால் அதன் தாள் நீண்டும் உறுதி தன்மையுடனும் இருக்கும்.  

கட்டிய நெற்குஞ்சத்தைக் கோயிலின் மையப் பகுதியில் தொங்க விடுவர். இந்நெற்குஞ்சத்தில் நான்கு அல்லது ஐந்து படி அளவிற்கு நெல்மணிகள் இருக்கும். தொங்கும் நெற்குஞ்சம் நீண்ட நாள் கயிறு அற்றுப் போகும் வரை கீழே விழாது.  

கோயிலில் நெற்குஞ்சத்தைக் கட்டி வைப்பது போல வீட்டின் நிலைக் கதவுக்கு மேலே மையப் பகுதியில் நாட்கதிரின் கொத்துகளைச் சாணியை வைத்துத் தொங்க விடுவர். 

கோயிலில் தொங்கும் நெற்குஞ்சம் அழகாகக் காட்சி தருவதோடு, அதிலுள்ள நெல்மணிகளைச் சிட்டுக்குருவி முதலான குருவிகள் வந்து விரும்பி உண்ணும். நெல்மணிகளைக் குருவிகள் உண்ண வேண்டும் என்று நினைக்கும் உழவனுடைய பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் செயல் போற்றத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT