தமிழ்மணி

தமிழர் வாழ்வில் நிமித்தங்கள்

தினமணி


தமிழர் வாழ்வு முறை அகம் - புறம் என்ற இருபெருங் கூறுகளைக் கொண்டது. அகவாழ்வியல் களவு, கற்பு என்ற நிலையில் பண்டை நாள் தொட்டு இன்று வரை உள்ளது. இந்த அகவாழ்வியல் முறை இரண்டும் புதிர் நிறைந்தவை. எங்கே எப்போது என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே கூறமுடியாதவை; அறிய முடியாதவை. வாழ்வின் புரியாத புதிரைப் புரிந்து கொள்ளத் தமிழன் கையாண்ட கருத்தளவையே "நிமித்தம்' ஆகும். இதனைஉத்திமுறை என்ற சொல்லாலும் வழங்கலாம்.

களவு வாழ்க்கைக்கு உதவும் நிமித்தங்கள் வேறு; கற்பு வாழ்க்கைக்கு உதவும் நிமித்தங்கள் வேறு. கனவு வாழ்க்கையில் நல்ல நாள், நேரம் பார்ப்பதில்லை

இதனை,

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை
(தொல். கள: 44)

என்பார் தொல்காப்பியர்.


எனினும் "கட்டுப்பார்த்தல்', "கழங்குபார்த்தல்', "கூடலிழைத்தல்' போன்ற நிமித்தங்களைப் பார்ப்பதுண்டு. இந்நிமித்தங்களைக் கூட்டமாகவோ, இனத்தாரோடோ பார்த்தறிய எண்ணமாட்டார்கள். மாறாக, தனித்தோ, தனக்கு அணுக்கமான சிலரைக் கொண்டோ பார்த்தறிவர். காரணம் களவு வாழ்க்கையென்பது ஊரறிய, சுற்றமறிய நடைபெறுவதன்று. அது அலர்படக் கூடாது என்ற மன அச்சத்தோடே நிமித்தங்களைக் கமுக்கமாகக் காண விழைவர்.

ஆனால் கற்பு வாழ்க்கை நிமித்தங்கள் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. ஊரறிய தாம் மேற்கொள்ளும் செயல் எவ்விதத் தடையுமின்றி நல்ல முறையில் நடந்தேற வேண்டும் என்பதற்கும், அவ்வாறு நிறைவேறினாலும், பின்னாளிலும் நல்லபடியாக அவ் வாழ்க்கை தொடரவேண்டும் என்ற நோக்கிலும் பார்ப்பதாக அமைந்திருக்கும். சுருங்கக் கூறின் வாழ்வின் ஐயமும், அச்சமும், உவகையும் அதில் காணப்பட்டன.

இதனைஅச்சமும், உவகையும், எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உள்பட
(தொல். 1037)

என்ற விதியால் தொல்காப்பியர் புறத்திணைக்குக் கூறினாலும் இந்நிமித்தங்களான நாள், புள், பிறவற்றின் என்ற மூன்றும் அகவாழ்வுக்கும் பொருந்தும்.

தமிழர் வாழ்வில், திருமணம் என்பது முதன்மை இடம் பெறும் நிகழ்வாகும். எனவேதான், இதனை "ஆயிரங்காலத்துப் பயிர்' என்று குறிப்பிடுவர். எனவே, மணவிழாவில் நிமித்தம் பார்ப்பது எல்லாவற்றையும் விட முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

மணவீட்டார் இருவரும் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அறிய ஆர்வம் கொள்வர். இதன் பொருட்டு நாள், நட்சத்திரம், பிறவும் பார்க்க முனைவரென்பதனை இலக்கியங்களும் காட்டுகின்றன.

தலைவனாவன் வரைவு செய்து கொள்ளாமல் களவியலிலேயே காலங்கடத்துவதால் துயருற்ற தலைவியைத் தோழியானவள் ஆற்றுப்படுத்துவதை நற்றிணை காட்டும்.

நல்நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்மன் தோழி
(நற்றிணை: 125)

இதில் தோழி, தலைவியிடம், "தலைவன் காலங்கடத்துவதை எண்ணிக் கவலைப்படாதே; ஒரு நல்ல நாள் பார்த்து உன்னை மணப்பெண்ணாக அழைத்துச் செல்வான்' என்று கூறி அவளைத் தேற்றுகிறாள்.

நிமித்தங்கள் மூன்றில், தொல்காப்பியர் கூறும் பிறவற்றின் என்பது பூ, மரம், குழலோசை போன்ற பிறவும் அடங்கும்.

பொதுவாக பெற்றோர் நன்னாள் பார்த்ததுடன் புள் நிமித்தமும் பார்த்து மனநிறைவு அடைந்தனர். திருமண விழாவொன்றில் புள்நிமித்தம் பார்த்ததை அகநானூறு,

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளும் புணர்ந்து இனியவாக
(அகம். மணிமிடை: 136)
எனக்கூறுகின்றது.

வேங்கை மலர்வதும் தினைக்கதிர்கள் அறுவடைக்குத் தயார் ஆவதும் ஒரே பருவத்தில் நிகழ்வதைக் கண்ட வேடர்கள், அதனை நன்னிமித்தமாகக் கருதி அப்பருவத்திலேயே மணவினை செய்ய முடிவெடுத்தனர்.

வேங்கை விரிவிட நோக்கி
வீக்கிறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே
என்கிறது குறிஞ்சிக்கலி,

ஒழுங்கு படுத்தப்பட்ட ஓசையே இசை. எனவே ஓசையெனினும், இசையெனினும், இன்னிசை என்ற பொருள் குறித்தாக உள்ளது.

ஆயர்கள் ஊதும் குழலோசையைக் குழலோசை என்றே வழங்கினர். இக்குழலோசை நன்னிமித்தப் பொருளாகக் கருதப்பட்டது. இதனை அழகுபட விவரிக்கிறார் முல்லை பாடிய நல்லுருத்திரனார்.

ஏறுதழுவும் இடத்திற்குச் சென்ற தலைவியும், தோழியும் ஏறுதழுவும் இளைஞர்களுக்கு ஆங்கே காளைகளால் ஏற்படும் காயங்களைக் காண்கின்றனர். அவ்வேளையில் ஏறுதழுவும் தன் தலைவனுக்கும் இதுபோன்ற இன்னல்கள் வருமே எனத் தலைவி அச்சங்கொள்கிறாள். அச்சமயம் ஆயர்களின் குழலோசையைக் கேட்ட தோழி, அதனையே நன்னிமித்தமாக எண்ணி தலைவியை நோக்கி "நீலமணிபோலும் காயாம் பூவினால் ஆன மலர்மாலையை அணியும் இயல்புடைய தலைவனின் பெற்றோர் தமக்குத் தலைவனைத் தருவதற்காகவே ஆயர் ஊதும் குழலோசை நன்னிமித்தமாக ஒலிப்பதைக் கேட்டாயா' என்று தலைவியிடம் கூறி அவளின் அச்சத்தைப் போக்குகிறாள்.

அணிமாலைக் கேள்வன் தரூஉம் ஆயர்
மணிமாலை யூதுங் குழல் (முல்லைக்கலி: 1)
என்பது அப்பாடல்.

இவ்வாறு தமிழர் வாழ்வில் நாள், நேரம் இவற்றோடு புள், (பறவை) மரம், பூ, குழல் ஓசை போன்றவையும் நன்னிமித்தப் பொருள்களாக இருந்தன; இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT