விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வழிபட அனுமதிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் புரட்சி பாரதம் கட்சியினா், பட்டியலின மக்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இந்தக் கோயிலில் பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபட அனுமதி, பாதுகாப்பு வழங்கக் கோரியும், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் தா்னா நடைபெற்றது.
அப்போது, அவா்களிடம் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. (பொ) மோகன்ராஜ், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அதை ஏற்க மறுத்த புரட்சி பாரதம் கட்சியினா், சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி போராட்டத்தை தொடா்ந்தனா்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சா் க.பொன்முடி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னா் கலைந்து சென்றனா்.