தமிழ்மணி

உயிரைத் தொடரும் உடம்பு

18th Sep 2022 04:50 PM | ஸ்ரீமூலநாதன்

ADVERTISEMENT

 

"உயிர் போன்றது', "உயிர் அனையது' என்பதெல்லாம் வழக்குச் சொற்கள். அவ்வளவே. உயிரைப்போல் உயர்வாக உணர்கிறேன் என்று கொள்ளலாம். இராமனும் குகனை அவ்வாறு உணர்ந்தான். குகனிடம் மனம் திறந்து இராமன் சொன்னான்:

"என் உயிர் அனையாய் நீ (1994)
இராமன் ஆடவன். அனைத்து உயிர்களிடமும் பொங்கும் அருள் கொண்டவன். அனைவரையும் தன் உயிராகக் கருதினவன். தீயவர்களிடமிருந்து நல்லவர்களைக் காக்க தன் உயிரையும் இழக்கத் துணிந்தவன். 

அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி  தொலையேன் எனின்,
இறந்துபோகினும் நன்று; இது அல்லது,
பிறந்து யான் பெறும்  பேறு என்பது யாவதோ? 

ADVERTISEMENT

-(2649)

அன்பும் அருளும் இரு வழிப் பாதை. எனவேதான் கவிச்சக்கரவர்த்தி ஒரு  மிகச் சிறந்த பாடலில், இராமனுக்கு முடி சூட்டியதை,  மூன்று உலகத்தவர்களும்  தங்களுக்கு சூட்டப் பட்டதாக மகிழ்ந்தார்கள் என்றார்.

சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் 
                                                          தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது
                                                   எனினும், மேன்மை
ஒத்த மூஉலகத்தோர்க்கும் உவகையின் 
                                                         உறுதி உன்னின், 
தம்தம் உச்சியின்மேல் வைத்தது 
                  ஒத்தது, அத் தாம மோலி (10329).

சீதை  மிகுந்த அன்பும், அருளும் கொண்டபெண். தான் வளர்த்த பறவைகளையும் தன் உயிர்போல நினைத்தாள். வனம் ஏகுவதன் முன்னரே, சுமந்திரனிடம் நினைவுபடுத்தினாள்:

பொன் நிறப் பூவையும், கிளியும், போற்றுக என்று 
உன்னும் என் தங்கையர்க்கு உணர்த்துவாய் (1878)
வனத்திலும் இந்நிலை தொடர்ந்தது.
என் ஓர் இன் உயிர் மென் கிளி (5422) 
"உயிர்" என்றே சொன்னாள்.

இத்தகைய எல்லையில்லா அன்பினால் அன்றோ "கடக்க ஒண்ணா வினை என வந்து நின்ற மானையும்  (3292) விரும்பினாள்.   

இவற்றுக்கெல்லாம் மிகவும் மேலானது இராமனும் சீதையும் ஒருவர்பால் ஒருவர் கொண்ட இல்லற இணைப்பு. 

மிதிலையில், "தெருவே திரிந்த' (1167)  இராமனும், "விளை காம விதைக்கு எருவான' (1173) சீதையும் கண்ணினால் கண்டு காதல் கொண்டனர்.   

அக்கணமே, இருவரும் மாறிப் புக்கு 
                             இதயம் எய்தினர்- 516.
"ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று 
                                                             ஆயினர்'-  517.

தெய்வத்திருமணம் இனிதே நடந்த தருணத்தில், 
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள் (1249) 
மாறி மாறி வருகின்ற இயல்பினையுடைய 
பிறவிகளில்  (உயிர்  உடம்பைத்   தொடர்கின்ற  வழக்கத்திற்கு மாறாக) உடம்பு   உயிரைத்   தொடர்கின்றதைப் போல  இராமனைப்  பின் தொடர்ந்தாள்.
உயிர், தான் நுகரவுள்ள வினைகட்கேற்ற 
                                                                உடலைப் பெற்று
பிறவி தோறும் உடலைப் பின் தொடரும்
                            வினைகள் அற்ற தெய்விகத்
தம்பதி ஆதலின் உடம்பு உயிரைத் 
                        தொடர்ந்தது போல் சீதை
இராமனைப் பின் தொடர்ந்தாள் 
என்றார் (இல்பொருள்  உவமையணி).

மடம் -  பெற்றோரும் கணவனும் கற்பித்தபடி  வழுவாது  ஒழுகும்  குணம்..
"கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' என்பர். 

இக் குணச் சிறப்பால் இராமன் ஆகிய  உயிர் செல்வழியெல்லாம்  இனிச் செல்ல இருப்பவள் என்பது உணர்த்தினார். 

உயிராகிய இராமன், சீதையைத் தனது "உயிரின் கரு' என்று முன்னதாகவே முடிவு செய்துவிட்டான் (1173). சீதைக்கு இராமனும் அவனது நாமமுமே முழுவதுமான உயிர். தற்கொலைக்குத் துணிந்த அவளை அந்த நாமத்தைச் சொல்லித்தானே அனுமன் காப்பாற்றினான்.  

அவளே சொன்னாள்:

எம்பிரான் நாமம் சொல்லி .... தந்தான் உயிர் (5254)
அனுமனும் இராமனிடம் இதை உறுதி செய்தான். 
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் 
                                                உயிர் துறப்பதாக
உன்னினள்; கொடிஒன்று ஏந்தி, கொம்பொடும்  
                                                                        உறைப்பச் சுற்றி,
தன் மணிக்கழுத்தில் சார்த்தும் அளவையில் 
                                                                   தடுத்து, நாயேன்
பொன் அடி வணங்கி நின்று, நின் பெயர் 
                                    புகன்ற  போழ்தில் (6045) 
அனுமன் பொய் இலாதவன் (3853) 
அவன் சீதையிடம் சொல்லியது: 
"உனது பிரிவினால் மேவிய துன்பத்தால் இராமன்  
                                           உயிர் விடக்கூட நினைத்தான்'
"இனி விளிதல் நன்று அரோ' (4239) 
ஆனால் அவனால்  எப்படி உயிரை  விட முடியும்? அவனிடம் இருப்பது பொய் உயிரே! அவனின் உண்மையான உயிர் நீயேதான்.  நீ உள்ளவரை யாதொரு அழிவும் இல்லை; அவனால் உயிரை விடவும் இயலாது.    

"தேண்டி நேர் கண்டேன்; வாழி! தீது இலன் 
                                                          எம் கோன்; ஆகம்
பூண்ட மெய்உயிரே நீ ! அப் பொய் 
                                   உயிர் போயே நின்ற
ஆண்தகைநெஞ்சில்நின்றும் அகன்றிலை;
                                                  அழிவு உண்டாமோ ?
ஈண்டு நீஇருந்தாய்; ஆண்டு, அங்கு, 
                       எவ் உயிர் விடும் இராமன்? (5304)
(எவ் உயிர் விடும் - எந்த உயிரை விடுவான்?) பிராட்டியேஇறைவனுக்கு உண்மையான உயிர் என்பது குறிப்பு.

தலைவியைத் தலைவனின் உயிர் என்று இலக்கியம் பேசும். காணா மரபிற்று.
உயிர் என மொழிவோர்... பொய் மொழிந்தனரே. 
                                                                      யாம் காண்கும் எம்
அரும்பெறல் உயிரே... மழைக்கண் மாதர் 
பணைப் பெருந்தோட்டே' (தொல் -களவியல் 10).  

இவ்வாறு, இராமன் உயிர் சீதையிடமும், சீதையின் உயிர் இராமனிடமும் உறைவிடமாக அமைத்து காப்பியத்தை மிளிரச் செய்ய கம்பரால் மட்டுமே இயலும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT