தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (11-09-2022)

DIN

பாரதியார் நினைவு நூற்றாண்டு நிறைவு பெற்று 101-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நினைவு நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, பாரதியாருக்குப் புகழஞ்சலி செலுத்தியது. அதற்காகத் தமிழக முதல்வரை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பாரதி நினைவு நூற்றாண்டையொட்டி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் குறிப்பிடத்தக்கது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கவிதைப் போட்டி நடத்தி, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் "பாரதி இளம் கவிஞர்' விருது வழங்கப்படும் என்கிற அறிவிப்பு. ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடைபெறும் என்பதும், வருடந்தோறும் இளம் கவிஞர்கள் பலர் தங்களது படைப்புகளால் அடையாளம் காணப்படுவார்கள் என்பதும், பாரதியாருக்கு செய்யப்பட்டிருக்கும் மிகப் பெரிய மரியாதை.

பாரதியாரின் நினைவு நாள் இனிமேல் ஆண்டுதோறும் "மகாகவி நாள்' என்கிற அங்கீகாரம் பெறுகிறது. அவரது நினைவு தினமான செப்டம்பர் 11-ஆம் தேதி இனிமேல் "மகாகவி தினம்' என்று அழைக்கப்படும். முதல்வருக்கும், அவரது தலைமையிலான தமிழக அரசுக்கும் "தினமணி' வாசகர்களின் சார்பிலும், பாரதி அன்பர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றி!

----------------------------------------------------

மகாகவி பாரதியார் குறித்துப் பேசும்போது, "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரனாரை நினைவுகூராமல் இருக்க முடியாது. இந்திய விடுதலை வேள்வியில் தங்களை இடுபொருளாக்கிக் கொண்ட தனிப்பெரும் ஆளுமைகள் சுப்பிரமணிய பாரதி, வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா மூவரும். அவர்களது தியாகம் குறித்தும், தமிழுக்கு அவர்களது பங்களிப்பு குறித்தும் சொல்லி மாளாது.

வ.உ. சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த ஆண்டின் நிறைவு கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி. தூத்துக்குடியில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் அன்று வ.உ.சி. குறித்த கருத்தரங்கங்களும், விழாக்களும் நடத்தப்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். தூத்துக்குடியில் விழாவாவது எடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

சொல்ல வெட்கமாக இருக்கிறது. "வ.உ.சி.க்கு விழாவா?' என்று கேட்டுப் புரவலர்கள், பங்களிக்க முன்வரவில்லை. வ.உ.சி. குறித்துப் பேச அழைக்கப்பட்ட பேச்சாளர்கள் பெருந்தொகை கேட்டார்கள். போதாக்குறைக்கு, விமானப் போக்கு வரத்துச் செலவும். 

வாழ்ந்த காலத்தில்தான் என்றில்லை, இன்றளவும் அந்தத் தகைசால் தமிழனுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை எனும்போது, அண்ணாவின் "ஏ.. தாழ்ந்த தமிழகமே..!' என்கிற தலைப்புத்தான் நினைவுக்கு வருகிறது!

----------------------------------------------------

ராசிபுரத்திலிருந்து அவ்வப்போது என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வார் 96 வயதான புலவர் மு. இராமசாமி. அவரது மகன் அழைத்துத் தந்தையிடம் கொடுப்பார். 

"தினமணி' நாளிதழ் வெளியானது முதல் அதன் வாசகராக இருக்கும் சிலரில் புலவர் மு. இராமசாமியும் ஒருவர் என்பதை, அவரது வயதைக் கேட்டதுமே நான் புரிந்து கொண்டேன். தலையங்கம், செய்திகள், கட்டுரைகள், தமிழ்மணி என்று "தினமணி' தொடர்பான பல விஷயங்கள் குறித்து அவர் கருத்துக் கூறுவார்; பாராட்டுவார்; குறைகளைச் சுட்டிக் காட்டுவார்; பிரச்னைகளை விவாதிப்பார்.

அவரது பின்னணி குறித்துக் கேள்விபட்டபோது நான் ஒரு நிமிடம் அதிர்ந்தேன். அவர் சாதாரண ஆளுமையல்லர். "வைணவப் பேராசான்' பு.ரா. புருடோத்தம நாயுடுவின் தவமிகு சீடர். "சிவம் பெருக்கும் சீலர்', "தமிழ்க்கடல்' ராய. சொவின் நற்றமிழ்த் தொண்டர். அவரது படைப்புகளைப் பாராட்டி, 32 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக் கம்பன் கழகம் "அமரர் மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசு' வழங்கியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

தமிழாசிரியராகத் தன்னை தகவமைத்துக் கொண்ட அந்தப் பெரியவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள், பெரும் பதவிகளும் பொறுப்புகளும் வகித்துப் புகழ் பெற்றவர்கள். கம்பன் என்றால் அவருக்கு உயிர். பாரதி என்றால் உருகுவார். வள்ளலாரில் தோய்ந்தவர். 

ஆழ்புலமை, ஆராயும் திறன், நுணுகி நோக்கும் நன்னயம், நிறைபெறக் கூறும் நாநயம், நேரிட உரைக்கும் நாணயம் யாவும் ஒருங்கே சேரும் அரும்புலப் புலவர் என்று தமிழறிஞர்களால் போற்றப்படும் மாமனிதர் அவர்.

""மூப்பின் காரணத்தால் தளர்ந்த வயதினனான (96) என் உள்ளத்தில் ஆசை ஒன்று வளர்ந்து நிற்கிறது. மூத்த வயதினருக்கு ஆசை குறைய வேண்டும் என்பது இயல்பு. 

ஆனால், எனக்கு வயதும் ஏறுகிறது. உள்ளத்து ஆசையும் ஏறிக்கொண்டு வருகிறது'' என்று குறிப்பிடும் புலவர் மு. இராமசாமியின் அந்த ஆசை "பாரதியார் புதுமைக் கோலம்' என்கிற புத்தக வடிவத்தில் நிறைவேறி இருக்கிறது.

கடந்த ஆண்டு பாரதி நினைவு நூற்றாண்டையொட்டி "தினமணி' வெளிக்கொணர்ந்த "மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர்' தான் அந்த ஆசைக்கு வித்திட்டது. வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட "பாரதியாரின் படைப்புகள்' ஆறு தொகுதிகள்தான் அதன் அடுத்தக்கட்டத்துக்கான ஊக்கசக்தி.

பாரதி என்கிற பெருங்கடலில் மூழ்கி, முத்துக்குளித்து, தான் பெற்ற இன்பத்தைப் பெறுக இவ்வையகம் என்று "பாரதியார் புதுமைக் கோலம்' என்கிற தலைப்பில் புத்தக வடிவமாக்கியிருக்கிறார் புலவர் மு. இராமசாமி.

பாரதியாரின் படைப்புகளில் அவர் அனுபவித்த பேரின்பத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நிறைவுக்கு இதைவிடச் சிறந்த அஞ்சலி வேறொன்றும் இருக்க முடியாது.

ஹைக்கூவில் அந்தாதியா என்று ஆச்சரியப் படாதீர்கள். டி.என். இமாஜான் செய்திருக்கும் முயற்சி இது - 
காற்றுக்கு ஆடையுடுத்த ஆசை
ஆசையில் உள்ளே புகுந்தது
புகுந்த இடம் புல்லாங்குழல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT