தமிழ்மணி

தமிழ் நாடகத் தந்தை!

அரிமளம் பத்மநாபன்

நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும் இசைத்தமிழுக்கும் புதுநெறி, புதுநடை வகுத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். இவர் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டுநாய்க்கன்பட்டி எனும் ஊரில் 7-9-1867 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் சங்கரன். இளம் வயதில் ஒரு நாடகக்குழுவில் ஆசிரியராக இருந்தார். பின் உலக வாழ்வை வெறுத்து முருக பக்தராகி பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.

மக்கள் இவரை "சுவாமிகள்' என்றே அழைத்தனர். பின் சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிவந்த தமிழ் நாடகச் சூழலில் பரந்த கலை நோக்குடன் செயல்பட்டு, அன்றைய காலகட்டத்திற்கான நவீன நாடகத்தை, தமிழ் மரபு வழி நின்று சுவாமிகள் உருவாக்கினார். 

இவர் தனது 24-ஆம் வயதில் "சமரச சன்மார்க்க நாடக சபை'யை நிறுவினார். தமிழகத்தில் "பாய்ஸ் கம்பெனி' எனும் மரபைத் தோற்றுவித்தவர் இவரே. ஒளவை சண்முகம் சகோதரர்கள், பி.யு. சின்னப்பா, டி.எஸ். துரைராஜ் போன்ற பலரும் சுவாமிகளின் பயிற்சி பெற்றவர்களே. தமிழகத்தில் மட்டுமின்றி ஈழத்தின் நாடக அரங்குகளிலும் பெரும் மாற்றத்தை இவர் நாடகங்கள் ஏற்படுத்தின. 

சுவாமிகளின் நாடக மேடைகளில் பாடப்பட்ட புகழ் வாய்ந்த வர்ணமெட்டுகளிலேயே பிற்கால நாடக மேடைகளில் பாடப்பட்ட சுதந்திரப் போராட்டப் பாடல்கள் பலவும் இருந்தன. 

மதுரைத் தமிழ்ச்சங்க வித்வான் நா. கிருஷ்ணசாமி நாயுடு, "தெற்றெனக் கூறில் ஆங்கில நாட்டுக்கு ஷேக்ஸ்பியரும் தமிழ் நாட்டுக்கு இவருந்தான் நாடகாசிரியரில் மகிமை பெற்றவர்கள்' என்று போற்றுகின்றார்.  

என்னன்புக் கேற்றோன் 
                 இசை நாடகப் புலமை
தன்னிலுயர் சங்கரதாசுப் 
                                                     புலவன் 
என்று தம் குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் பாராடப்பட்டவர் சுவாமிகள்.  

புதுச்சேரியில் உள்ள சுவாமிகளின் நினைவிடத்தில் 13-11-1958 அன்று இலக்கியவாதியும், கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் ஜீவானந்தம் ஆற்றிய உரையில், "முறையான நாடக மரபை அனுபவத்தில் கண்டறியாத ஒரு நாட்டில், நாடகங்களை முறையாக எழுதித் தந்து, கோடானுகோடி மக்கள் கண்டு களிக்க நடிக்கச் செய்த செயல் வல்லார், சங்கரதாஸ் சுவாமிகள். 

காளிதாசர், ஷேக்ஸ்பியர், மோலியர் முதலிய உலக நாடக மேதைகளின் வரிசையில் வைத்துப் போற்றுதற்குரியவர் நம் சுவாமிகள்' என்றார்.  

நவீனத்துவத்தை நாடகத்தின் அனைத்துக் கூறுகளிலும் முயன்று பார்த்தவர் சுவாமிகள். இதற்காக சுவாமிகள் கையாண்டிருக்கும் உத்திகளை அவர் எழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் காண முடியும். சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட  ஒரு காப்பியத்தின் முக்கிய கதாபாத்திரமான இந்திரஜித்தை, தமது "சுலோசனா சதி' நாடகத்தில் கதைத் தலைவனாக்கி,  அவன் மூலம் தமிழின் பெருமையைப் பேச வைத்திருக்கிறார் சுவாமிகள்.  

சுவாமிகளின் இந்திரஜித், வேத சாஸ்திரங்களிலும், தமிழ் அறநூல்களிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவன். தமிழையும் தமிழ்ப் பண்பாட்டினையும் போற்றுபவன்.  வேத சாஸ்திர நெறிகளுடன் தமிழ் நூல்கள் கூறும் அறநெறிகளை ஒப்பிட்டுத் தமிழின் சிறப்பையும், பண்பாட்டு நெறிகளையும் இந்திரஜித் சுலோசனாவுக்கு விளக்கிக் கூறுவதுபோல் காட்சிகளை அமைத்திருப்பார் சுவாமிகள். 

இவருடைய மனிதப் பாத்திரங்கள் தேவர்களுக்கும் கடவுளர்க்கும் தமிழ் அறங்களைப் போதிப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பார் சுவாமிகள். அனசூயா நாரத முனிவர்க்குத் திருக்குறளையும், சாவித்திரி எமதர்மனுக்கு தமிழ் அறநெறிகளையும் போதிப்பார்கள். இவற்றின் மூலம் சுவாமிகளின் ஆழ்ந்த புலமையையும் தமிழ்க் காதலையும் உணர முடியும்.

தமிழ் நாடகத் தந்தை என்று புகழப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். சுவாமிகள், 1922 நவம்பர் 11 அன்று புதுச்சேரியில் மறைந்தார். அவருடைய சமாதி புதுச்சேரியில் உள்ளது. மதுரையில் சுவாமிகளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. 

சுவாமிகளின் பெருமையை அவர் மறைந்து நூறாண்டுகள் கடந்த நிலையிலும் தமிழுலகம் உணர்ந்து கொள்ளவில்லை என்ற உண்மை வருத்தத்திற்குரியது.
இன்று சங்கரதாஸ் சுவாமிகள்நினைவு நூற்றாண்டு நிறைவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT