தமிழ்மணி

செம்பொன்பதின்றொடி!

DIN


"சொம்பொன்பதின்றொடி' என்ற தொடரை இளம்பூரணர் தொல்காப்பிய எழுத்ததிகார உரையில் எடுத்தாள்கிறார்(தொல்.143). இத்தொடருள் இருமைப் பொருளமைப்பு பொதிந்துள்ளதைக் காணமுடிகிறது. 

கழஞ்சு, பலம் முதலிய நிறைப்பெயர்
களுள் "தொடி' என்பதும் ஒன்று. இத்தொடரில்

இடம்பெறும் பொருள் செம்பா,  இல்லை செம்பொன்னா என்ற இருமைப் பொருளமைப்பையும், இதனுள் குறிக்கப்படும் எண்ணுப்பெயர் ஒன்பதா, இல்லை பத்தா என்ற இருமைப் பொருளமைப்பையும் காணமுடிகிறது.

"செம்பொன்' என்ற பொருளில் இத்தொடரை செம்பொன் + பத்து + தொடி என்று பிரிக்க வேண்டும். பத்து எனும் நிலை மொழியை அடுத்து நிறைப்பெயர் வந்து புணர்கின்றபொழுது "இன்' சாரியை பெறும் என்பதைத் தொல்காப்பியம்,

நிறையு மளவும் வரூஉங் காலையும்
குறையா தாகும் இன்னென் சாரியை (தொல்.437)

என்றுரைக்கிறது. அதனடிப்படையில் பத்து + தொடி என்பது இன் சாரியை பெற்று பதின் + தொடி என்றாகும். னகரத்தை அடுத்து வருகின்ற தகரம் றகரமாகும் என்பதைத் தொல்காப்பியம்,

லனவென வரூஉம் புள்ளி முன்னர்
தந எனவரிற் றன வாகும்மே (தொல்.150)

என்றுரைக்கிறது. அதனடிப்படையில் பதின்றொடி என்றாகி, செம்பொன் + 
பதின்றொடி என்பது இயல்பாய்ப் புணர்ந்தது. 

செம்பு என்ற பொருளில் இத்தொடரை செம்பு + ஒன்பது + தொடி என்று பிரிக்க வேண்டும். ஒன்பதுடன் தொடி  புணர்கின்ற பொழுது இன் சாரியை பெற்று, குற்றியலுகரம் உயிர் ஏற இடம் தந்து, ஒன்பதின் + தொடி என்றாகி, தொடி என்பதன் தகரம் றகரமாகி ஒன்பதின்றொடி என்றாகியது. செம்பு + ஒன்பதின்றொடி என்பது குற்றியலுகரம் உயிர் ஏற இடம்தந்து "செம்பொன்பதின்றொடி' என்று புணர்கிறது. 

மேற்கண்டவாறு இத்தொடர் செம்பையும், செம்பொன்னையும் மயங்கச் செய்வதுடன் அளவுகளில் ஒன்பதைப் பத்தாகவும் பத்தை ஒன்பதாகவும் கொள்வதற்கு இடந்தருகிறது.  

இவ்வாறானவற்றை முன்னத்தின் உணரவேண்டுமேயன்றி, அதனை வேறுபடுத்திக் காட்டும் எழுத்துமுறைமை இல்லை என்பதை,

எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே

 (தொல்.142)

அவைதாம்

முன்னப் பொருள புணர்ச்சி வாயின்
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே

(தொல்.143)

என்கிறார் தொல்காப்பியர். இதனை விளக்கும் இளம்பூரணர், ""செம்பொன்பதின்றொடி என்றவழிப் பொன்னாராய்ச்சி உள்வழிப் பொன்னெனவும், செம்பாராய்ச்சி உள்வழிச் செம்பெனவும் குறிப்பான் உணரப்பட்டது'' என்றுரைக்கிறார்.

எழுத்துகளால் வேறுபடுத்திக் காட்ட முடியாத இத்தொடரை எழுதும் முறைகளால் வேறுபடுத்திக்காட்ட முடியும். செம்பொன்னைக் குறிக்கும் நிலையில் இதனை, "செம்பொன் பதின்றொடி' என்று பிளவுபடுத்தியும், செம்பைக் குறிக்கின்ற பொழுது "செம்பொன்பதின்றொடி'  எனப் பிளவு இன்றியும் "செம்பு ஒன்பதின்றொடி' எனப் பிளவு படுத்தியும் எழுதித் தெளிவு பெறலாம். இவ்வாறு வேறுபடுத்தி அறியும் பொழுது ஒன்பது, பத்து என்பனவும் தெளிவு பெறுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT