தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (22-05-2022)

22nd May 2022 04:46 PM

ADVERTISEMENT

 

கவிஞர் கண்ணதாசனால், "சங்க இலக்கியத்துக்கு  உ.வே. சாமிநாதையர் போல பாரதியியலுக்கு சீனி.விசுவநாதன்' என்று பாராட்டப்பட்ட பெரியவர் சீனி.விசுவநாதனை சந்தித்தேன். சென்னை மேற்கு மாம்பலம் சுப்பிரமணியம் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் வீடு வாங்கிக் குடியேறிய தகவலை எனக்கு ஏற்கெனவே அனுப்பி இருந்தார்.

சென்னையில் பெய்த பெருமழையில், அப்போது அவர் குடியிருந்த நந்தனம் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து, அவரது சேகரிப்பில் இருந்த பல புத்தகங்கள் வீணாகிப் போனது, மிகப்பெரிய சோகம். அது முதல் அங்கே இங்கே என்று வீடு மாற்றிக் கொண்டிருந்தார். இப்போது நிம்மதியாகத் தனக்கென்று ஒரு வீட்டில் குடியேறி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.   நியாயமாகப் பார்த்தால் இதுபோன்ற தமிழறிஞர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு  முந்தைய அரசுகள் வீடு கொடுத்து ஆதரித்திருக்க வேண்டும்.

சீனி.விசுவநாதனின் காலவரிசைப்படுத்தப்பட்ட ஆவணப் பதிவுகளில் 18-ஆவது தொகுப்பாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது "பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி-2'. முதலாவது பகுதி ஏற்கெனவே புத்தகமாக வெளியாகி இருக்கிறது. பெரியவர் சீனி.விசுவநாதன் எந்தவொரு பாரதி ஆய்வுத் தொகுப்பை வெளிக்கொணர்ந்தாலும் எனக்கு ஒரு தொகுதியை அனுப்பித் தருவது வழக்கம். இந்த முறை அவரை நேரில் சந்திக்கச் சென்ற எனக்கு அந்தத் தொகுப்பில் கையொப்பம் இட்டுத் தந்தார்.

ADVERTISEMENT

பாரதியாரின் பாடல்களை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது யார் என்று நினைக்கிறீர்கள்?  பிரிட்டிஷ் அரசுதான். கலெக்டர் ஆஷ் கொலை தொடர்பாக,  21-08-1911-அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி ஆவணங்களான பாரதியாரின்  பாடல்கள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டவையாக  அவை இருந்தனவே தவிர, அந்தப் பாடல்களின் உணர்வு வெளிப்படும் வகையில் அவை அமையாததில் வியப்பில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள்,  அவ்வளவே. அதையெல்லாம் தேடிப் பிடித்து தனது தொகுப்பில் இணைத்திருக்கிறார் சீனி. விசுவநாதன்.

அதேபோல,  இந்தத் தொகுப்பில் காணப்படும் இன்னொரு முக்கியமான பதிவு, பாரதியார்  கடலூர் சிறைச்சாலையில் இருந்தது தொடர்பானது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பற்பல பிரச்னைகளை சமாளித்துப் பாண்டிச்சேரியில் வசித்துவந்த பாரதியார்,  போர் முடிந்துவிட்டதால் பிரிட்டிஷ் இந்தியாவில்  தனக்குத் தொந்தரவு இருக்காது என்கிற நம்பிக்கையில் முன்பின் யோசிக்காமல் கிளம்பிவிட்டார்.

20-11-1918 அன்று பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பி, கடலூருக்குப்  போகும் தறுவாயில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து, சிறையில் அடைக்கப்பட்டது, அங்கே கழித்தது என்று அனைத்து விவரங்களும் ஆவணங்களாகப் பதிவு செய்யப்பப்பட்டிருக்கின்றன இந்தத் தொகுப்பில். 

தோண்டத் தோண்ட வந்துகொண்டிருக்கும் புதையல்போல, பாரதியார் குறித்த தகவல்களும், அவரது படைப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. 39 அகவைக்குள் பாரதி செய்திருக்கும் சாதனைகளை நினைத்தால் வியப்பில் சமைகிறேன்...!

----------------------------------------------------


கடந்த ஒரு வாரத்தில் சில புத்தகங்கள் படித்தேன் என்றாலும் குறிப்பிட்டு எழுதும்படியான புத்தகம் எதுவும் இல்லை. ஆங்கில நாவல், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் "விடுதலைப் போரில் தமிழகம்', "விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு' ஆகியவற்றை மீள் பார்வை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பெங்களூரில் வசிக்கும் என் சிற்றன்னை நேற்று,  அ.ச.ஞானசம்பந்தத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த "கம்பன் புதிய பார்வை' புத்தகத்தைப் படித்ததாகவும்,  அதை சிலாகித்தும் கட்செவி அஞ்சலில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்தபோது சட்டென்று அ.ச.ஞாவின் "இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' நினைவுக்கு வந்தது.

தொண்ணூறுகளில் காரைக்குடி கம்பன் விழாவுக்குப் போயிருந்தபோது அங்கே வாங்கிய அந்தப் புத்தகத்தை, இப்போதும் பத்திரமாக எனது பார்வை படும் வகையில் வைத்திருக்கிறேன். "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளையின் "கம்பன் கவியின்பம்' தொகுப்பும், "இராவணன் மாட்சியும், வீழ்ச்சியும்' இரண்டுமே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் புரட்டிப் பார்க்கும் பொக்கிஷங்கள்.

அ.ச.ஞா.வின் அந்தப் புத்தகத்துக்கு "தமிழ்த் தென்றல்' திரு.வி.கலியாணசுந்தரனார் ஒரு சிறப்புரை தந்திருக்கிறார், அடடா அற்புதம். அதற்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் வழங்கியிருக்கும் முன்னுரை அதைவிடச் சிறப்பு. அ.ச.ஞா. இராவணனைக் காட்சிப்படுத்திப் பதிவு செய்திருப்பதோ,  வார்த்தையால் விவரிக்க முடியாத நடைச்சித்திரம்.

இராவணனை வீரனாகவோ,  அரசனாகவோ, அரக்கனாகவோ காட்டமாட்டார் அ.ச.ஞா. அவனை ஒரு கலைஞனாகக் காட்டுவார். இராவணனின் வீழ்ச்சியைக் கவிஞனின் வீழ்ச்சியாக அவர் சித்தரிப்பார்.  யாழ் கொடி ஏந்தி அகத்தியருடன் இசையில் போட்டி போட்டவன் என்பதை உயர்த்திப் பிடிப்பார் அ.ச.ஞா.

இராவணன் குற்றுயிரும் குலை உயிருமாக வீழ்ந்து கிடக்கிறான். தேரில் சாய்ந்து கிடக்கும்  அவன் மீது அம்பு எய்து கொல்ல மறுத்து விடுகிறான் இராமன். தன் மனைவியைக் கவர்ந்து சென்றவன் என்ற காழ்ப்புணர்ச்சி இல்லாமல்,  ஒரு சிறந்த வீரனுடன் போர் புரிகிறோம் என்கிற உணர்வுடன், "படை துறந்து மயங்கிய பண்பினான் மேல் நடை துறந்து உயிர் கோரல் நீதியன்று' என்று மறுத்து விடுகிறான். அந்த இடத்தை அ.ச.ஞா. விவரிக்கும் விதமே அலாதியானது.

""இராவணனிடம் இருந்த மாட்சியையும், அவன் அடைந்த வீழ்ச்சியையும் கம்பனே குறிப்பிடுகிறான். இராவணனை ஒரு காப்பியத் தலைவனோடு ஒப்பவே கம்பன் மதிப்பிடுகிறான். ஓர் அவலத் தலைவனுக்குள்ள அனைத்து மதிப்பையும் வழங்குகிறான்'' என்கிறார் அ.ச.ஞா.

பலரும் படித்த புத்தகம்தான். நானும் பலமுறை படித்த புத்தகம்தான். இன்றைய தலைமுறை கட்டாயம் கம்ப காதையைப் படிக்க வேண்டும், அ.ச.ஞா.வின் பார்வையில் "இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' எத்தகையது என்பதையும் படிக்க வேண்டும்.

--------------------------------------------------------------


"அகில்' என்கிற  அகிகேஸ்வரன் சாம்பசிவம் கனடாவிலிருந்து வெளிக்கொணரும் "இலக்கியவெளி' அரையாண்டிதழில் வாசுதேவனின் "என் புழுதி ரசம்' கவிதைத் தொகுப்பு குறித்த கட்டுரை வெளிவந்திருந்தது. அதிலிருந்த ஒரு கவிதை -

அருவி நீர்
தானாய் பாயும்
நதி நீர்
தானாய் ஓடும்
கிணற்று நீர்
தானாய் ஊறும்
நாமாய் ஏதும்
செய்தாலன்றி
அசையா திருக்கும்
தொட்டி நீர்
உயிருள்ள தண்ணீரை
விட்டு விலகி வந்து
செத்துப்போன தண்ணீருடன்
வாழ்க்கை நடத்துகிறோம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT