தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (26-06-2022)

26th Jun 2022 05:18 PM

ADVERTISEMENT

 

பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி நூற்றுக்கணக்கான வெளியீடுகள் வந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே பல புதிய தகவல்களை நமக்குத் தருகின்றன. பெரியவர் சீனி.விசுவ நாதன், பேராசிரியர் ய.மணிகண்டன், ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்டோர் ஆய்வு நோக்கில் வழங்கியிருக்கும் தரவுகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.

அந்த வரிசையில் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தனது பங்குக்கு வெளிக்கொணர்ந்திருக்கும் "தொகுப்புக் கருவூலம்'தான் "கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி'. அவரது பல வருட உழைப்பு இதில் தெரிகிறது. கோவில்பட்டிக்காரர் என்பதால் இயல்பாகவே நண்பர் கே.எஸ். இராதாகிருஷ்ணனுக்கு பாரதியாரிடம் பற்று கலந்த அபிமானம் உண்டு. அவருக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிடுவாரா என்ன?

""தமிழ் நாட்டின் தென்புலக் கரிசல் மண்ணில் பிறந்து தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையகம் பாலிக்கப் பாடிய குடுகுடுப்பைக் கோணங்கி மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. அத்தகைய பெருமகனை நம் தமிழ்கூறும் நல்லுலகத்தின் அறிஞர் பெருமக்கள் பலரும் தம்முள் நினைவுகூர்ந்து எழுதிய பலவிதமான கருத்துக் களஞ்சியங்களை ஒருசேரத் தொகுப்பது, சிதறி உருண்டோடும் நெல்லிக்கனிகளை ஓடிப் பொறுக்கி ஒரு மூட்டைக்குள் அடக்குவதற்கு ஒப்பான செயல். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பலவாறாகத் தேடிச் சேகரித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன'' என்கிற பதிப்பாசிரியர் உரையை மெய்ப்பிக்கின்றன கட்டுரைகள்.

ADVERTISEMENT

பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, நெருங்கிப் பழகிய ராஜாஜி, திரு.வி.க., வ.உ.சி., வ.வே.சு.ஐயர், உ.வே.சா., குவளை கிருஷ்ணமாச்சாரியார், பரலி சு.நெல்லையப்பர், சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் போன்றவர்களும், பாரதியாரின் குடும்பத்தினரும் அவர் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள் அந்த ஆளுமை எப்படி இருந்தார் என்பதைப் படம் பிடிக்கின்றன.

பாரதியார் குறித்து அவருக்குப் பின்னால் வந்த அரசியல் ஆளுமைகளான எஸ்.சத்தியமூர்த்தி, ப.ஜீவானந்தம், ம.பொ.சி. போன்றவர்களும், திராவிட இயக்கத்தினர்களான அண்ணா, கருணாநிதி உள்ளிட்டவர்களும் வெளிப்படுத்தி இருக்கும் பார்வை, அந்த ஆளுமை எப்பேர்ப்பட்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

கவிஞர்கள், இலக்கியவாதிகள், இதழியலாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்று எந்தவொரு பகுதியினரையும் விட்டு வைக்காமல், அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தேடி சேகரித்துத் தொகுத்திருக்கும் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு பாரதியார் விருது வழங்கி கெüரவிக்க வேண்டும்.

பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின்போது "கல்கி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அதேபோல, பாரதியாரின் பிறந்த நூற்றாண்டின்போது கலைக்கதிர் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அந்த மலர்களில் வெளிவந்த கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆளுமைகளுக்காக சேர்க்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும், சொல்லப்படும் செய்திக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. தவிர்த்திருக்கலாமே என்று சொல்லும்படி எந்தவொரு கட்டுரையும் இல்லை.

பாரதியார் ஒரு தங்கச் சுரங்கம். தோண்டத் தோண்டக் கொட்டிக் கிடக்கும் தங்கத்தை அள்ளி அள்ளி மாளாது. அடுத்த தலைமுறைக்கு இந்தக் கட்டுரைகள் கிடைப்பதற்கு வழிகோலியிருக்கிறார் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

"ரிலே ஓட்டப் பந்தயத்தின் ஒரு கட்டம் ஓடியிருக்கிறார் அவர். இதைப் படித்த பிறகு, அடுத்தகட்ட ஓட்டத்துக்குத் தயாராக என்னைத் தூண்டுகிறது ஆர்வம்.

----------------------------------------------------------

பட்டிமன்றப் பின்னணியுடன் கூடிய இலக்கியவாதிகள் எப்போதும் வித்தியாசமான பார்வை பார்ப்பார்கள். மற்றவர்களுக்குப் புலப்படாதவை அவர்களுக்கு மட்டும் எப்படியோ தட்டுப்படும். அதிலும் ஆழங்காற்பட்ட புலமையும் இருந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?

கம்பர் குறித்து முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதியிருக்கும் "கம்ப நாடர் புதிய வெளிச்சம்' அந்த வரிசையில் உள்ளது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் புலமை இருப்பதால், முனைவர் தெ.ஞா.வால் கம்பனையும், வான்மீகியையும் ஒப்பு நோக்கிப் புதிய பார்வை பார்க்க முடிகிறது. இந்த நூல் வெறும் ஒப்புமை நோக்கும் நூலல்ல. கம்பன் படைத்த இராமகாதையின் காலநிரல், வான்மீக காலநிரலியிலிருந்து வேறுபடுகிறது என்கிற அடிப்படையை உணர்த்தி, மேலே நகர்கிறது தெ.ஞா.வின் ஆய்வு.

இதற்காக அவர் மேற்கொண்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கடந்த 20 ஆண்டு உழைப்பும், ஆய்வும் இதற்குப் பின்னால் இருக்கிறது. "இராமாயண சார சங்கிரகம்' என்னும் சம்ஸ்கிருத நூலை மயிலை குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பெற்று, வைணவக் கல்லூரி முன்னாள் வடமொழி பேராசிரியர் முனைவர் திருவேங்கடத்தான் உதவியோடு படித்தறிந்து, தனது ஆய்வைத் தொடங்கி இருக்கிறார் முனைவர் தெ.ஞா.

""வான்மீகி ராமாயணத்தில் காணப்படும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை வேறு. கம்பராமாயணத்தில் அமைந்திருக்கும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை வேறு. ஒரே நிகழ்ச்சியை வெவ்வேறு கால எல்லைக்குள் நிகழ்ந்ததாக இருவரும் குறித்துள்ளனர் . வான்மீகி முனிவர் பலநாள் நிகழ்ந்ததாகக் காட்டும் நிகழ்ச்சியினைச் சில நாளில் நிகழ்ந்ததாகவும், சில நாள் நடந்ததாகக் காட்டும் நிகழ்ச்சியினைப் பல நாள் நடந்ததாகவும் கம்ப நாடர் சித்தரித்துள்ளார்'' என்று நிறுவுகிறார் தெ.ஞா.

வான்மீகத்தில் இராவணவதம் அமாவாசையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கம்பராமாயணத்தில் அதுவே பெüர்ணமியில் நிகழ்ந்ததாகக் காட்டப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். அதற்குக் காரணமும் கூறுகிறார்.

கம்ப காதை குறித்த புதிய வெளிச்சம் பாய்ச்சும் முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் இந்த ஆய்வு நூல், தமிழிலக்கியத்திற்கு அவர் வழங்கியிருக்கும் இன்னொரு கொடை!

----------------------------------------------------------

 

பட்டிமன்றப் பேச்சாளர் அனுக்கிரகா ஆதிபகவனின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்த இயலவில்லை. "வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்துகிறேன்' என்று சொன்னேன். இயலவில்லை. சமீபத்தில் "கலைஞர் 99' நிகழ்ச்சியில் தம்பதியரை சந்தித்தேன். அவரது கணவர் கவிஞர் தரன் தனது "பூ அவிழும் சமிக்ஞை' என்கிற புதிய கவிதைத் தொகுப்பை என்னிடம் தந்தார். அதிலிருந்து ஒரு கவிதை
பழத்தை விழுங்கிய
பறவையொன்று
எச்சமிட்டுக்கொண்டே போகிறது
வனத்தை...
 

ADVERTISEMENT
ADVERTISEMENT