தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (30-07-2022)

DIN

நாம் கற்றது கைம்மண்ணளவுகூட இல்லை; கால் தூசியிலும் குறைவு என்பதைப் புதிதாகத் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு செய்தியும் உணர்த்துகின்றது. பத்திரிகையாளர் ஆறு. அண்ணல்,  அர்த்தநாரீஸ்வர வர்மாவின் "வீரபாரதி' மூலத்திரட்டு அனைத்தையும் தேடித் தொகுத்துப் புத்தகமாக வெளியிட இருக்கிறார் என்கிற தகவல், அர்த்தநாரீஸ்வர வர்மா குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலை என்னில் ஏற்படுத்தியது.

சேலம் சுகவனேச படையாட்சியார் மகன் அர்த்தநாரீஸ்வர வர்மா என்பதும், அவர் திருத்துருத்தி ஸ்ரீலஸ்ரீ அழகிரி சுவாமிகளின் சீடராக இருந்தார் என்பதும் முக்கியமான செய்திகள் அல்ல. அவர் விடுதலைப் போராளி என்பதும்கூட முக்கியமல்ல. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கவிஞராக, பத்திரிகையாளராக, சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார்  என்பதுதான் அவருடைய சிறப்பு.

இப்போதுபோல அப்போது சம்ஸ்கிருதத்தின் மீது வெறுப்பும், துவேஷமும் இல்லாமல் இருந்த காலம். பிராமணர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும், நமது அண்டை மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் சம்ஸ்கிருதப் புலமை பெற்றிருந்தனர் என்பதற்கு அர்த்தநாரீஸ்வர வர்மாவும் ஓர் உதாரணம். சேலம் சுதேசாபிமானி அச்சுக்கூடத்தின் மேலாளராகப் பணியாற்றிய அர்த்த
நாரீஸ்வர வர்மா, சம்ஸ்கிருதத்தோடு, சகல சாஸ்திரங்களிலும் வல்லுநராக இருந்தார் என்று தெரிகிறது.

மகாகவி பாரதியார் வாழ்ந்த  காலத்தில் வாழ்ந்த வர்மாவும், அவரைப் போலவே கவிபுனையும் ஆற்றல் பெற்றிருந்ததால் அவரை "கவிச்சிங்கம்' என்று அழைத்தார்கள். பாரதியாரைப் போலவே, எழுத்தைத் தொழிலாகக் கொண்டிருந்த வர்மா, "க்ஷத்ரியன்', "க்ஷத்ரிய சிகாமணி', "வீரபாரதி', "தமிழ் மன்னன்' ஆகிய பத்திரிகைகளை நடத்தி இருக்கிறார்.

"சனாதன தர்மத்தை ஆதரிக்கும் தமிழ்ப் பத்திரிகை' என்கிற கொள்கை முழக்கத்துடன் 1923 முதல் 1951 வரை "க்ஷத்ரியன்' இதழை நடத்தி வந்தார் அவர். வன்னிய குல க்ஷத்ரியர்களின் ஜாதிய இதழாக இல்லாமல், சமத்துவ, சமதர்ம இதழாக வெளிவந்தது என்பதுதான் அதன் சிறப்பு. 

அர்த்தநாரீஸ்வர வர்மா குறித்த செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. வரகவியாகவும், மரபுக் கவிதையில் புலமை பெற்றவராகவும் இருந்திருக்கிறார் அந்த சேலம் கவிச்சிங்கம். பாரதியாரின் மறைவைத் தொடர்ந்து "சுதேசமித்திரன்' இதழில் வெளியான அவரது "இரங்கற்பா' சங்க இலக்கியப் பாடல்களுக்கு நிகரானது.

பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்ற இளைஞர்களையும், ஜெனரல் கர்னல் சிம்சன் கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட தினேஷ் குப்தாவையும், தினேஷ் குப்தாவுக்கு தூக்கு தண்டனை விதித்த அலிப்பூர் மாவட்ட நீதிபதி கார்லிக் துரையைக் கொன்றுவிட்டுத் தன்னைத்தானே சுட்டுக்கொன்று மடிந்த விமலதாஸ் குப்தாவையும் போற்றி "வீரபாரதி' இதழ் வெளியிட்ட கட்டுரைகள் ஆங்கிலேய அரசைக் கோபப்படுத்தின. அச்சுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு முடக்கப்பட்ட முதல் தமிழ்ப் பத்திரிகை "வீரபாரதி' என்று தெரிகிறது.

1937-இல் சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த ராஜாஜி, சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அறிமுகப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அதற்குக் காரணம் அர்த்தநாரீஸ்வர வர்மா என்பது வெளியில் தெரியாத தகவல்.

அவர் நடத்திய "தமிழ் மன்னன்' பத்திரிகையில் ஏராளமான இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. அந்த இதழ்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. "வீரபாரதி' புத்தகமாக வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழுக்கும், தமிழகத்துக்கும், தாய்நாடான இந்தியாவுக்கும் தொண்டு செய்து தங்களை சந்தனமாகக் கரைத்துக் கொண்ட அர்த்தநாரீஸ்வர வர்மா போன்ற தியாகிகளை, இந்தியா தனது 75-ஆவது சுதந்திர ஆண்டிலாவது அங்கீகரித்து, மக்களுக்கு அடையாளம் காட்டாமல் போனால், நாம் நன்றி கொன்றவர்களாவோம்.

-------------------------------------------


சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் சென்றிருந்தபோது, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் இ.ஆ.ப.-வை சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பிலேயே நெருக்கமாவோம் என்று நாங்கள் இருவருமே நினைத்திருக்க மாட்டோம். அதற்குக் காரணம் அவர் மலையாளத்தில் எழுதியிருந்த இரண்டு நூல்கள்.

இரண்டுமே திரையுலகம் தொடர்பானவை. அந்த நூல்களுக்கும் கேரள மாநிலம் காயங்குளம் அருகேயுள்ள முதுகுளம் என்கிற சிறிய ஊருக்கும் தொடர்புண்டு. கேரள சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக வலம் வந்த கதாசிரியர் ராகவன் பிள்ளையும், இயக்குநர் பத்மராஜனும், முதுகுளத்தைச் சேர்ந்தவர்கள். அதே ஊரைச் சேர்ந்த டாக்டர் சமீரன் அந்த ஆளுமைகளின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மருத்துவப் படிப்புக்குப் பிறகு இந்தியக் குடிமைப்பணி தேர்வெழுதி, ஆட்சிப் பணியில் சேர்ந்தவர் சமீரன். நானோ முழுநேர எழுத்தாளன், பத்திரிகையாளன். எங்கள் இருவருக்கும் சினிமா என்கிற கலைமேல் ஈர்ப்புண்டு. மலையாள சினிமாவை ரசிப்பவன் என்பதுடன், அந்தத் திரையுலகுடன் நெருங்கிய தொடர்பும் எனக்கு இருப்பதால், சமீரனின் புத்தக நாயகர்களான ராகவன் பிள்ளையும், இயக்குநர் பத்மராஜனும் எனக்குப் பிடித்தவர்கள்.

குறிப்பாக, "பப்பேட்டன்' என்று அழைக்கப்படும் இயக்குநர் பத்மராஜனுடன் நான் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். அந்தப் பின்னணியில்தான் சமீரன் எழுதிய மலையாளப் புத்தகத்தைப் புரட்டினேன். உடனே நான் எழுப்பிய கேள்வி இதுதான் - "இதை ஏன் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது?'

எனது கேள்விக்கு விடையாக டாக்டர் ஜி.எஸ். சமீரன் எழுதிய "பத்மராஜன் கந்தர்வனோ மானிடனோ!' தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. "மலையாளத் திரையுலகின் எழுத்தச்சன்' என்று அறியப்படும் முதல் மலையாளத் திரைப்படமான "பாலன்' படத்தின் வசனகர்த்தாவான ராகவன் பிள்ளை பற்றியது இன்னொரு புத்தகம். இந்த இரண்டு புத்தகங்களையும் படித்தால், ஏறத்தாழ 75 ஆண்டு மலையாள சினிமா குறித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஓர் ஆய்வாளராக, தனது ஊர்க்காரர்களான இரண்டு ஆளுமைகள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார் சமீரன் இ.ஆ.ப. "முதுகுளம் ராகவன்பிள்ளை' புத்தகத்தை மொழியாக்கம் செய்திருப்பது "திசை எட்டும்' குறிஞ்சிவேலன். அவரது 80-ஆம் ஆண்டு நிறைவு விழா மலருக்குக் கட்டுரை கேட்டிருந்தார்களே, அது நினைவுக்கு வந்தது. கோவையிலிருந்து சென்னை திரும்பியதும் எழுதிவிடுவேன்.

-------------------------------------------

கபிலர் விழாவுக்கு திருக்கோவிலூர் சென்றிருந்தபோது, சங்கராபுரம் கள்ளிப்பாடியைச் சேர்ந்த கவிஞர் கே. ஸ்டாலின் தனது "அப்பாவின் நண்பர்' கவிதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அதிலிருந்த இந்தக் கவிதை, எனக்காகவே எழுதப்பட்டிருப்பது போல இருக்கிறதே, அது எப்படி?
பகலில் உறங்கி
இரவில் விழித்திருப்பவனைக் கண்டு
குழம்பி நிற்கிறது
அவனது காலடியில்
நாயெனக் காலம்!


 அடுத்த வாரம் சந்திப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT