தமிழ்மணி

நற்றமிழ்த் தொண்டர் நாவலர்

18th Dec 2022 05:35 PM | சே. ஜெயசெல்வன்

ADVERTISEMENT

 

தமிழ் மொழியும் சைவ நெறியும் தழைத்தினிது வளர தொண்டாற்றியவர்களுள் சிறப்புடையவர் ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணத்து நல்லூரில் கந்தப்பிள்ளை- சிவகாமி அம்மையார் இணையர்க்கு ஆறாவது மகவாக 18-12-1822 அன்று பிறந்தார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டு  அவற்றை வளர்க்கும் பணியில் தம்மை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்டார். 

இவரது இடைவிடாத் தமிழ்ப்பணியைப் பாராட்டி, திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக விளங்கிய மேலகரம் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் இவருக்கு "நாவலர்' என்னும் பட்டத்தை வழங்கியருளினார்கள். காலப்போக்கில் இவரது பட்டமே பெயராக அமைந்து இவரைப் பெருமைப்படுத்தியது. "தமிழில் என்ன இருக்கிறது' எனக் கேட்டு அறியாமையில் ஆழ்ந்து கிடந்த தமிழரை, இவரது சொல்லாற்றல் எழுச்சி பெறச் செய்து, "எங்கள் தமிழில் எல்லாம் இருக்கிறது' எனப் பெருமிதம் கொள்ள வைத்தது.

நாவலர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "உதய தாரகை', "இலங்கை நேசன்' முதலிய பத்திரிகைகளில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதினார். யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சியந்திரசாலைகள் அமைத்து அவற்றின் வாயிலாகப் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பாவலர் முதல் பண்டிதர் வரை படித்து இன்புறத்தக்க நூல்களைத் தமிழுலகிற்குத் தந்துள்ளார். 

ADVERTISEMENT

நாவலர், அழகிய திருத்தமான எளிய நடையில் எழுதினார். இவரது உரைநடை திறனைக் கண்டு பரிதிமாற் கலைஞர் இவரை, "வசனநடை கைவந்த வல்லாளர்' என்று பாராட்டினார். இவரது நடை "நாவலர் நடை' என்றே சிறப்பிக்கப்படுகிறது. மேலும் இவர், "தமிழ்க் காவலர்' எனவும்  "தமிழ் உரைநடையின் தந்தைட எனவும்  போற்றப்படுகிறார். மேல் நாட்டவர் மட்டுமே கடைப்பிடித்துவந்த காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்புக்குறி போன்றவற்றை தமிழில் முதன்முதலில் கையாண்டவர். பிழையற்ற செம்பதிப்புகள் கொணர்ந்ததில் நாவலருக்கு நிகர் எவருமிலர்.

தமிழ்நாட்டுத் திருத்தலம் தோறும் சென்று, வழிபட்டு உரையாற்றிய, நாவலர் சிதம்பரத்துக்கு வருகை புரிந்து, பல நாட்கள் தங்கியிருந்தபோது, சிதம்பர சைவ பிரகாச வித்தியாசாலையை உருவாக்கி, சைவ சமயக் கருவி நூல்கள் மட்டுமின்றி , சமய நூல்களையும் பதிப்பிக்க ஆவன செய்தார். 

"பெரியபுராண வசனம்', "திருவிளையாடற் புராண வசனம்', "கந்தபுராண வசனம்', "பால பாடம்', "சைவ வினா விடை', "சிதம்பர மான்மிய வசனம்', இலக்கணச் சுருக்கம்' ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். "கோயிற்புராணம்', "நன்னூல்', "வாக்குண்டாம்', "நல்வழி', "நன்னெறி' "சிவஞானபோதம்' முதலிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். 

இவருடைய வரலாற்றினை "ஆறுமுக நாவலர் சரித்திரம்' என்னும் பெயரில் த. கைலாச பிள்ளைய எழுதியுள்ளார். அருணாசலக் கவிராயர், "ஆறுமுக நாவலர் புராணம்' என்னும் பெயரில் நூல் இயற்றியுள்ளார். நாவலரின் தமிழ்ப்பணிகள் தமிழ்க்கூறு நல்லுலகில் என்றுமே நிலைத்துநிற்கும்.

இன்று ஆறுமுக நாவலர் பிறந்த 200-ஆம் ஆண்டு நிறைவு.

ADVERTISEMENT
ADVERTISEMENT