தமிழ்மணி

பெரியபுராணத்தில் யோகநெறி

அரங்க. இராமலிங்கம்

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளில் வாழ்ந்துகாட்டிய பெருமக்கள் நாயன்மார்கள். இவர்களுள் யோகதெறியில் வாழ்த்து இறையருளைப் பெற்றவர் பெருமிழலைக் குறும்ப தாயனார்.

இவர் குறுநில மன்னர் மரபினர். புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள பெருமிழலை எனும் ஊரினர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தவர் (கி.பி. 840 - 863). சுந்தரரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்று முக்தி அடைந்தவர். இவருடைய வரலாற்றினை பெரியபுராணத்தில் 11 பாடல்களில் தெய்வச் சேக்கிழார் கூறியுள்ளார்.

பெருமிழலைக் குறும்பநாயனார் சிவனடியார் உரையாமுன்னம் குறிப்பறிந்து பணிசெய்யும் முதிர்ந்த ஞானம் உடையவர். எண்ணற்ற தொண்டர்களுக்குத் திருவமுதூட்டி வேண்டிய செல்வங்களைக் கொடுத்தனுப்பும் உயர்பண்பினர். அடியாரை மனத்தால் வணங்கும் நல்இயல்பினர்.

தொண்டர்களை வணங்கித் திருத்தொண்டத்தொகையைப் பாடியவர் சுந்தரர். பெருமிழலைக் குறும்பநாயனார் சுந்தரரைக் கைகளால் தொழுது வாயார வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டினையே சிவபெருமானுக்குரிய தொண்டுநெறி என்று நினைப்பவர். சுந்தரரைக் குருவாக ஏற்றுப் போற்றி வாழ்த்துவந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமான் எழுந்தருளியுள்ள கொடுங்கோளூர் திருவஞ்சைக்களம் முதலிய இடங்களுக்குச் சென்று வழிபட்டார். இம்மண்ணுலக வாழ்க்கையில் சுந்தரருக்குச் சலிப்பு மிகுந்தது. இறைவன் திருவடியில் இணைய விருப்பம் மேலிட்டது. இக்கருத்தினைப் புலப்படுத்தும்வண்ணம் நொடித்தான்மலை (திருக்கைலாயம்) உத்தமனை வணங்கிப் பதிகங்கள் பாடினார். இதனைத் தன் யோகசக்தியால் பெருமிழலைக் குறும்ப நாயனார் உணர்ந்தார்.

மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களும் சிந்தையேயாகப் பிரம்மதாடி (கழிமுனை நாடி) வழிக் கருத்தைச் செலுத்தினார். மறைமூலக் கபாலம் (ஆதியாகிய - வித்தில்லா வித்தாகிய - சிவமயப் பொருளாகிய - அந்த ஆதி வஸ்து இருக்கும் இடம்) திறந்தது. அவர் இறைவன் திருப்பாதம் சேர்ந்தார். யோகநெறியில் ஞானம் பெற்று இறைவன் திருவடி சேர்ந்தார். திருக்கைலாயம் சென்றார். நொடித்தான்மலை உத்தமனோடு ஒன்றினார்நாள்தோறும் சுந்தரர் நாமம் ஓதியதால் எண்வகைச் சித்திகளும் கைவரப்பெற்றார். இதனை,

நாளும் நம்பி ஆரூரர் நாமம் 
                                           நவின்ற நலத்தாலே 
ஆளும் படியால் அணிமாதி சித்தி 
                            ஆன அணைந்ததன்பின் 
மூளும் காதல் உடன்பெருக முதல்வர் 
                               நாமத்து அஞ்செழுத்தும் 
கேளும் பொருளும் உணர்வும்ஆம் 
                     பரிசு வாய்ப்பக் கெழுமினார்      (6)

எனும் பாடல்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கும் அறிவில் ஒன்ற, உணர்வு சிறந்து, நினைவுத் தவத்தால் கபால நடுநாடியினைத் திறந்தார். "பல காலம் பயிற்சி செய்திருந்த யோகமுறைப்படி' கபால நடுச்சுழிமுனை திறந்தார் என்கிறார் தெய்வச் சேக்கிழார். "ஏலவே முன் பயின்ற நெறி' என்பது தெய்வச்சேக்கிழார் திருவாக்கு.

பயிற்சியும் முயற்சியும் உடையவரே யோகநெறியில் செல்லமுடியும். இறுதியாக உச்சி மறைமூலம் (பிரம்மரந்திரம்) திறந்து அதன்வழி அவரது இன்னுயிர் திருக்கைலாய மலையை அடைந்தது என யோக நுட்பத்தை விளக்குகிறார் தெய்வச் சேக்கிழார்.

பெரியபுராணம் பக்திப் பெருங்காப்பியம். அறுபத்துமூன்று அடியார்களுள் யோகநெறியில் நின்று குருவின் அருளால் இறைவனை அடைந்தவர் பெருமிழலைக் குறும்பநாயனார். ஆனால் குருவும் சீடரும் ஒருமுறைகூட சந்தித்துக் கொண்டதே இல்லை. நாளை தன்னுடைய குருவாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கைலாயத்தை அடையப் போகிறார் என்பதை உணர்ந்துகொண்ட பெருமிழலைக் குறும்பநாயனார் யோகசக்தியால் குருவை வரவேற்க குருவிற்குமுன் திருக்கைலாயத்தை அடைகிறார். 

இதனை, 

மண்ணில் திகழும் திருநாவலூரில் 
                                      வந்த வன்தொண்டர்
நண்ணற்கு அரிய திருக்கயிலை 
                           நாளை எய்த நான்பிரிந்து 
கண்ணிற்கு அரிய மணிகழின் 
             வாழ்வார்போல வாழேன்என்று 
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று 
         அடைவன் யோகத்தால் என்பார் (9) 
நாலு கரணங்களும் ஒன்றாய் 
                        நல்லஅறிவு மேற்கொண்டு 
காலுமி பிரமநாடிவழிக் கருத்துச் 
                                        செலுத்தக் கபாலநடு 
ஏலவேமுன் பயின்றநெறி எடுத்த 
                               மறைமூலம் திறப்ப மூல 
முதல்வர் திருப்பாதர் அணைவார் 
                        கயிலை முன்அணைந்தார் (10)

ஆகிய இரண்டு பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. 

தாம் நாளை திருக்கைலாயம் போகப்போகிறோம் என்று குருவாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே தெரியாது ஆனால், குருவருள் திறந்தால், சீடராகியப் பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கு ஒருநாள் முன்னதாகத் தெரிந்தது.

இராமபிரானைக் கண்ணாரக் கண்டு (குருவாக வரித்துக்கொண்டு) - பழகி, தொண்டு செய்த அனுமன் - உரைத்து உய்ந்தது "இராம நாமம்'.
சமுதாயச் சூழலால் குருவைக் கண்ணால் கண்டும், சந்தித்து ஞானம் பெறமுடியாமல் குருவின் வடிவத்தை வணங்கியே அனைத்துக் கலைஞானமும் பெற்றவன் ஏகலைவன்.

நாரத மகரிஷி ஓதிய "இராமநாமம்' உணர்வில் கலந்து உயிரில் ஒன்றியதால் வேடனாகிய வால்மீகி மகரிஷியானார். 

நாரத மகரிஷி சிறுவன் துருவனுக்கு உபதேசித்து உய்தி பெறவைத்தது "ஓம் நமோ நாராயணா' என்னும் எட்டெழுத்து மந்திரம் நாரத மகரிஷி சிறுவன் பிரகலாதனுக்கு உரைத்து உயிரில் ஒட்ட வைத்தது "ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரம். சிறுவர் ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவராக உயர்ந்தார்.

வால்மீகி, துருவன், பிரகலாதன் ஆகிய மூவருக்கும் குருவாக அமைந்து உபதேசம் அளித்தவர் நாரத மகரிஷி. அனுமன், வால்மீகி, துருவன், பிரகலாதன் ஆகிய நால்வரும் குருவைக் கண்டு உபதேசம் பெற்றவர்கள்.

பெருமிழலைக் குறும்ப நாயனார் தம் குருவாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளை வாழ்நாளில் ஒருமுறைகூடப் பார்த்ததில்லை. 

பிறர் யாரிடமும் உபதேசம் பெற்றதில்லை. தம் நினைவு ஒன்றிலே குருபரனைச் சிக்கெனப் பிடித்துக் கண்ணின் மணியாக, மணியின் ஒளியாகக் குருவின் திருப்பாதத்தைப் பற்றியதால் பற்று அறுந்தது. பரலோகம் பற்றிய பரமன் அருள் கிட்டியது. திருவருள் நிறைந்தது. திருவடிப்பேறு நிலைபெற்றது. இந்நாயன்மாருக்குச் சுந்தரரின் திருவருளே இறையருளைப் பெற்றுத்தந்தது.

தீவிர வைராக்கியத்தோடு, இடையறாது விடாப்பிடியாக நினைவுத் தவத்தில் மூழ்கி வாழ்பவரைக் குருவருள் சுற்றிச் சூழ்ந்துநின்று காக்கும். அந்த அன்புத் தொண்டரை இறையருள் தானே வந்து தாயைப்போல அணைத்து, அன்புகாட்டி அருள்செய்யும். தெய்வம் மடியை வரித்துக் கட்டிக்கொண்டு வந்து மூன்றிற்கும். இது முக்காலும் உண்மை. இச்செயல் அன்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது. என்றும் நடைபெறக்கூடியது. இதனைப் பின்வரும் சான்றுகளால் உணரலாம்.

வழிபடு தெய்வம் திற்புறங் காப்பப் 
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து 
- தொல்காப்பியம் பொருளதிகாரம்: செய்யுளியல் 415
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் 
மடிதற்றுத் தாள்முந் துறும் -(குறள். 1023)

பெரியபுராணப் பெருங்காப்பியத்தில் யோகநெறிக்குச் சான்றாக வாழ்ந்தவர்கள் இருவர் ஒருவர் திருமூலர். மற்றொருவர் பெருமிழலைக் குறும்பநாயனார். யோகநெறியில் உறுதி உடையோர் இவ்விரு அருளாளர்களைப் போன்று உணர்வு சிறந்து உய்திபெறலாம். குருவருள் இருக்குமானால் யோகமும் ஞானமும் தானே வந்தமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT