தமிழ்மணி

துயில் மறந்ததுவே!

மு. வெங்கடேசபாரதி

தலைவியின் களவு உறவைத் தாயறிந்தாள். அதனால் அவள் இல்லச் சிறையிலே இருத்துதல் செய்யப்பட்டாள். அன்புத் தோழியிடம் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டாள். உயிர்த் தோழியும் அடிக்கடி வந்து தலைவியுடன் உரையாடினாள்; உறவாடினாள்; ஆறுதலும் கூறினாள்.

ஒரு நாள் தோழி,  தலைவியைப் பார்க்க வருகிறாள். அப்போது தலைவி, "ஒளி வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பது

போலத் தோன்றும் உயரமான கோட்டை. அதன் புறமதில் கடுமையாக முற்றுகையிடப்பட்டது. குளிர்ச்சியான சிறிய கண்களைக்கொண்ட யானைப் படைகளோடு பகைவனான தார் வேந்தன் மதிற்பக்கம் தங்கினான். இதுநாள் வரையிலே வலிமை மிகுந்திருக்கும் இந்த மதிலைப் பகையாளர் கைப்பற்றாதவாறு பாதுகாத்திருப்பவர் பலர். பேராண்மைமிக்க நல்ல வீரரைப் பெற்றிருக்கிறோம் என்ற, அந்தப் பீடு மிகுந்த பெருந்தகைமையாளன் தூய மறவர்குடித் தலைவன் துணிவையும் செருக்கையும் நானும் கொண்டிருந்தேன்.

வளைவு கொண்ட கழியின் பக்கம் வளர்ந்திருக்கும் நெய்தல்கள் பச்சை இலைகளோடு நிறைந்திருக்கும் குளிர்ச்சியான கடற்கரையைக் கொண்டவன் நம் தலைவன். அவன் அச்சத்தைத் தருகின்ற முதலைகளைப் போல நடுக்கம் தரும் பகைவனுக்கும் அஞ்சமாட்டான்.  அவ்வீரனைப் போல வலிமை குன்றாது தலைவனிடத்துச் செல்லும் என் நெஞ்சம். நடு இரவின் இருளில் பறவைகளின் ஒலி கேட்கும் போதெல்லாம், தலைவன் ஏறிவரும் தேரின்கண் கட்டிய மணிகள் தெளிந்த ஓசைபோலும் என்று நினைத்து ஊரார் உறங்குகின்ற இரவிலும் என் கண்கள் துயில்வதை மறந்தது தோழி' என்கிறாள்.

"காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது' என்பது இப்பாடலுக்கான கூற்று. புலவர் உலோச்சனார் இயற்றிய நெய்தல் திணைப் பாடல் இது.

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிப்
பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்த,
"நல் எயிலுடையோர் உடையம்' என்னும்
பெருந்தகை மறவன் போல, கொடுங்கழிப்
பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன்  
நாம முதலை நடுங்குபகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகா தாகி யவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள்ளொலி கேட்டொறும்
"தேர்மணித் தெள்ளிசை கொல்?' என  
ஊர்மடி கங்குலும் துயில் மறந்ததுவே! (நற்.287) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT