தமிழ்மணி

நல்வழி காட்டும் பழமொழிகள்

பாலசாண்டில்யன்

பழமொழிகளை எல்லோரும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்துகிறோம். சொல்கின்ற கருத்துக்கு வலுவூட்டவும், பேச்சில் சுவை கூட்டவும் உதவுபவை பழமொழிகள். காலப் பழைமையான சொல்லே பழமொழி. "பல்லோர் கூறிய பழமொழி', "தொன்றுபடு பழமொழி' என்னும் அகநானூற்றுத் தொடர்கள் பழமொழியின் பழைமையைத் தெரிவிக்கின்றன. 

"மொழி' என்பதற்குச் "சொல்' என்பது பொருள். முதுமொழி, பழஞ்சொல் என்னும் சொற்களால் இது சொல்லப்படுகிறது. பழமொழியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும் "நாம் அதைப் புதுப்பிக்கிறோம்' என்றே கூறவேண்டும். மணிவாசகப் பெருமானும் "அங்கப் பழஞ் சொல் புதுக்கும்' என்கிறார் (திருவாசகம், 7-19).  ஒவ்வொரு பழமொழியும் ஒரு பழைய கட்டடம். இங்கே இரண்டு கட்டடங்கள்,  இப்போது புதுப்பிக்கப்படுகின்றன.

1. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்: காற்று வீசும்போதே நெல்லைத் தூற்றி பதரையும், தூசியையும் பிரித்து நெல்லைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து. வாய்ப்புக் கிடைக்கும்போதே அதைப் பயன்படுத்தி, செயலை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது இதன் உட்பொருள்.

"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்'

என்பது திருக்குறள். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், தவறவிட்டுவிடாமல் தன்னால் இயன்றவரையில் அறச் செயலைச் செய்ய வேண்டும் என்னும் கருத்தமைந்த இந்தக் குறளிலுள்ள "செல்லும்வாய்' என்பதும் பழமொழியில் உள்ள "காற்றுள்ளபோது' என்பதும் ஒன்றல்லவா? இந்தப் பழமொழிக்கு வேறோர் உட்பொருளும் உண்டு.

"காற்று' என்பது மூச்சுக்காற்றைச் சுட்டுவது. "காற்றைப் பிடிக்கும் கணக்கு' என்பார் திருமூலர். "தூற்றுதல்' என்பதற்குப் "பரப்புதல்' எனவும் பொருள் உண்டு. "பிறர் பிறர் சீரெல்லாம் தூற்றி' என்பார் குமரகுருபரர்.

"கால் இருக்கும்போதே கோயிலை நாடு; கை இருக்கும்போதே கும்பிடு போடு; வாய் இருக்கும்போதே அவன் புகழ்பாடு' என்பர் சான்றோர். "உயிர் இருக்கும்போதே இறைவனது பெருமைபெறு புகழினைப் பேச வேண்டும்' என இந்தக் கட்டடத்தில் மாடி எடுத்தும் நாம் மகிழலாம்.

2.  உப்பிட்டவரை உள்ளளவும் நினை:

உப்பு என்பது உபலட்சணமாய் உணவைக் குறிக்கும். நமக்கு உதவியவர்களை நம் உயிர் உள்ளவரை மறக்கக்கூடாது என்பது இதன் பொருள். சமைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் இயற்கையிலேயே தனித்தனிச் சுவையுண்டு. எனினும், அதில் உப்பு சேரும்போதுதான் சுவை கூடுகிறது. 

"கடல்விளை அமுதம் கண்டபொழுதின் நெய்கனிந்த / தீஞ்சோற்று அடிசில் அம்சுவை மிக்காங்கு' என்பது சீவக சிந்தாமணி பாடல் வரிகள். கடல்விளை அமுதம் ஆவது உப்பு. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்முடன் நின்று, நமக்கு ஒளிசேர் நலம் அனைத்தும் ஓங்கி வளர உதவுபவர்களை "உப்பு' எனச் சொல்வதில் தப்பில்லையே!

"நீர்க்கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்' என்று கும்பகர்ணனும்; "செருமுனைச் சென்று செஞ்சோற்றுக் கடன்கழிப்பதுவே எனக்கு இனிப் புகழும் கருமமும் தருமமும்' என உறுதிமொழி உரைத்த கர்ணனும் தங்களுக்கென்றே அளவெடுத்துத் தைத்த சட்டையாய் இந்தப் பழமொழியைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதைக் கம்பரும் வில்லிபுத்தூராரும் புலப்படுத்துவர்.

மற்றும் ஒன்று. உணவில் பயன்படுத்தும் உப்பின் அளவு சிறிதுதான். அதனால் விளையும் சுவைப் பயனோ மிகுதி. அதுபோல, ஒருவர்க்கு நெருக்கடி நேரும்போது, தக்கவர் ஒருவர் வந்து செய்யும் உதவி சிறிதாயிருந்தாலும் அந்த உதவி செய்யப்பட்ட நேரத்தை நோக்க அதன் பெருமை மிகுதியே. "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் / ஞாலத்தின் மாணப் பெரிது' என மிகுதியின் அளவைப் பாராட்டுவார் திருவள்ளுவர்.

இப்படிப் பழமொழிகள் காட்டும் நல்வழிகள் புண்ணியவாளர்தம் புகழினைப்போல் வளர்கின்றன; வளர்கின்றன; மேலும் வளரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT