தமிழ்மணி

கொடிச்சியின் குழந்தைத்தனம்!

18th Jul 2021 04:45 PM | -மு. வெங்கடேசபாரதி

ADVERTISEMENT

 

மங்கைப் பருவத்துள் மலரடி வைப்பவள் என்றாலும் குழந்தைத் தன்மை கொண்டிருக்கிறாள் கொடிச்சி ஒருத்தி. ஒரு நாள் ஓர் அழகிய ஆண் மகன் அவளைக் கண்டான்; காதல் கொண்டான்; அவளை மணந்துகொள்ள மனங் கொண்டான். தன் ஆசையை அவள் தோழியிடம் உரைக்கின்றான். தோழியோ, தலைவியின் குழந்தைத் தனம் மாறாத இயல்பை அவனுக்கு எடுத்துக் கூறுகிறாள்.

"தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; இல்லத்தில் காப்பு கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதுமாம்' என்று இப்பாடலுக்கு இரண்டு கூற்றுகள் (பாடற் குறிப்பு) தரப்பட்டுள்ளன.

"ஐயனே! தலைவியின் ஒரு நாள் நிகழ்வை உங்களுக்குக் கூறுகிறேன். மென்மையான தலையை உடைய பெண் குரங்கின் குட்டி, குன்றில் உள்ள வீட்டின் முற்றத்திலிருந்து நீங்காமல் இருக்கும். நெருப்பு கொழுந்துவிட்டது போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினை உடைய வேங்கை மரத்தின் கிளைகளில் உட்கார்ந்திருந்தது. அப்போது நீங்கள் விரும்பும் அந்த அழகி தேன்கலந்த பால் கலசத்தைக் கொண்டு மெல்ல நடந்து வெளியே வந்தாள்.

ADVERTISEMENT

இதைப் பார்த்த குரங்குக் குட்டி அவள் கையிலிருந்த செம்பைப் பறித்துக்கொண்டு ஓடியது. அதனால் ஓவியத்தில் எழுதியது போன்ற இவள் கண்களின் அழகெல்லாம் சிதையுமாறு அழுதாள். அவ்வாறு அழுததால் கண்கள், தேர்களைப் பரிசிலர்க்கு வழங்கும் வள்ளல்தன்மை மிக்க சோழ மன்னர்க்குரிய "குடவாயில்' என்னும் ஊரில் மழை பெய்து நிரம்பிய அகழியில் குளிர மலர்ந்த நீலமலரைப் போன்றன. குட்டிக் குரங்கு பால் கிண்ணத்தைப் பறித்துச் சென்றதால் அவள் தன் அழகிய வயிற்றில் அடித்துக் கொண்டதால், அவள் விரல்கள் சிவந்து, அலைகின்ற மேகங்கள் இயங்கும் பாண்டியனின் பொதியில் என்னும் மலையிடத்தே மலர்ந்து செழித்த காந்தளின் பூத்த மலர்களைப் போல் கைவிரல்களும் சிவந்து போயின. இத்தகைய இளமையும் மடமையும் உடையவள் உன் அன்பை (அன்பு மிகுதியை) தணிப்பது எங்ஙனம்? இப்படிப்பட்டவளா உன் ஆசையை நிறைவேற்றி வைப்பாள்?' என்கிறாள் தோழி.

குடவாயிற் கீரத்தனார் பாடிய குறிஞ்சித் திணைப் பாடல் (புன்தலை மந்தி கல்லா வன்பறழ்-நற்.379) இது.

Tags : Tamilmani The childishness of the flag!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT