தமிழ்மணி

பெண் உழைப்பைப் போற்றிய சமூகப் பேரழகு...

12th Jul 2021 04:31 PM | -முனைவர் பு.இந்திராகாந்தி

ADVERTISEMENT

 

சங்க காலத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்த குடும்ப அமைப்பு இருந்தது. அதில் ஆண் வீரம் செறிந்தவனாக, பொருளீட்டும் வல்லமையுடையவனாக இருந்ததைக் காட்டும் பாடல்கள் பல உள்ளன.

தே நிலையில் மீன், உப்பு, பூ, மோர் முதலியவற்றை விற்ற பெண்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. இன்றும் பெண்மையைப் போற்றல், பெண் உழைப்பை ஊக்குவித்தல், உழைக்கும் பெண்களைப் பாராட்டுதல் என்ற நிலையிருக்கிறது. 

அதே சமயம், பெண் ஒருத்தியின் உழைப்பால்தான் அக்குடும்பம் உயர்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அனைவருக்கும் வரவில்லை. அப்படியே உயர்நிலை அடைந்தாலும் வெளிப்படையாகப் பாராட்டும் பண்பு அக்குடும்பத்தாரிடமே மிகக் குறைவு என்பதுதான் உண்மை. 

ADVERTISEMENT

பெண்ணின் உழைப்பால் ஒரு குடும்பம் மேன்மை கண்டதை ஊரார் புகழ்ந்து சொல்வதாகக் குறுந்தொகைப் பாடல் (295)ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையானது பெண் உழைப்பைப் போற்றிய அன்றைய பெரும் சமூக அமைப்பை மிக அழகாகத் தெளிவுப்படுத்துகிறது. 

பரத்தையோடு நீர் விளையாடிவிட்டு வந்த தலைவனிடம் தோழி சொல்வதாக அமைந்து, பெண் உழைப்பை அங்கீகரிக்கும் அப்பாடல் இதுதான்:

உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்
தழை அணப்பொழிந்த ஆயமொடு துவன்றி
விழாவொடு வருதி நீயே; இஃதோ
ஓர்ஆன்வல்சிச்சீர் இல்வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும் இவ்வூரே!

மாலையாகத் தொடுத்தணிந்தும் குழை முதலிய அணிகலங்கள் அணிந்தும் கூந்தலில் செருகியும் தழைஅலங்காரத்தினால் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டத்தோடு நெருங்கி நீர் விழாவிற்குரிய அடையாளங்களோடு வந்து நின்றாய்.  இந்த ஊரில் உள்ளோர் பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவுடைய செல்வ சிறப்பில்லாத இல்வாழ்க்கை, மிக்க அழகைவுடைய இளைய தலைவி இவனுக்கு வாழ்க்கைப் பட்டு வந்தாள். இப்பொழுது விழாவுடையதாயிற்று என்கிறது.

பரத்தையாடி வந்த தலைவனிடம் தோழி சொல்லும் தன்மையில் அமையப்பெற்று தலைவனின் செயலைப் பழிப்பதோடு, தலைவனுக்குத் தலைவி வாழ்க்கைத் துணையாக வந்தபிறகு அவன் இல்ல உயர்வை ஊரே சொல்கிறது என்ற கூற்றின்வழி பெண்ணின் உழைப்பைப் போற்றிய அன்றைய பொதுச் சமூக அமைப்பை அறிந்துகொள்ள முடிகிறது.

Tags : Social catastrophe
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT