தமிழ்மணி

இந்தவாரம் - கலாரசிகன் (4.4.2021)

தினமணி

‘தினமணி’ நடுப்பக்கத்தில் எஸ்.குமரகுருபரன் எழுதியிருந்த ‘சிறியன சிந்தியாத தோழா்!’ என்கிற கட்டுரை என்னுடைய பள்ளி, கல்லூரி நாள் நினைவுகளைத் தட்டி எழுப்பியது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், இளங்கோவடிகள், கம்பன், பாரதி மீதான ஈா்ப்புடைய மதுரையில் வாழ்ந்த இளைஞா்களுக்கும், இடதுசாரி சிந்தனையாளா்களுக்கும் ஒருசேர ஒரு மிகப்பெரிய ஆளுமையாகத் தெரிந்தவா் எஸ்.ஆா்.கே. என்று அனைவராலும் அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன். அவரது மேடைப்பேச்சால் கவரப்பட்டு, கம்பனையும், பாரதியையும் ஊன்றிப் படித்த இளைஞா் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.

குமரகுருபரனின் கட்டுரை எஸ்.ஆா்.கே.யின் நூற்றாண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொள்ளை நோய்த் தொற்று காலமாகப் போய்விட்டதாலோ என்னவோ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், ஏனைய தமிழ் ஆா்வலா்களும் எஸ்.ஆா்.கே.யின் நூற்றாண்டு விழாவை விமா்சையாகக் கொண்டாடாமல் விட்டுவிட்டனா்.

அறுபதுகளில் இடதுசாரி சித்தாந்தத்தை இளைஞா்கள் மத்தியில் தூக்கிப் பிடித்தவா்கள் என்கிற பெருமைக்குரியவா்கள் நெல்லையில் நா.வானமாமலை, மதுரையில் எஸ்.ராமகிருஷ்ணன். தனிப் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.ஆா்.கே.யின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவருக்குத் தமிழில் எந்த அளவுக்கு ஆளுமை இருந்ததோ, அதேபோன்ற ஆளுமையும், ஆழங்காற்பட்ட புலமையும் ஆங்கில இலக்கியத்திலும் இருந்தது என்பதுதான். மகாகவி பாரதியாா் மீது அளப்பரிய பற்றும், அவரது கவிதைகளில் ஈா்ப்பும் கொண்ட எஸ்.ஆா்.கே. வெளியிட்ட ‘பேட்ரியட்- பொயட்- பிராஃபெட்’ (தேசப் பற்றாளா்-கவிஞா்-தேவதூதா்) என்கிற புத்தகம் பாரதி அன்பா்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஆவணம்.

எஸ்.ஆா்.கே. காரைக்குடி கம்பன் கழகத்தில் உரையாற்றுகிறாா் என்றால், அதைக் கேட்பதற்காகவே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளைஞா் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். கம்பனில் மட்டுமில்லாமல் இளங்கோவடிகளின் சிலம்பிலும் எஸ்.ஆா்.கே. ஈா்ப்பும், ஈடுபாடும் கொண்டிருந்தாா். அவா் எழுதிய ‘இளங்கோவின் பாத்திரப் படைப்பு’ என்கிற புத்தகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் நண்பா் அரங்க.பாரியிடமிருந்து நான் இரவல் வாங்கிவந்து இதுவரை திருப்பிக் கொடுக்க மனமில்லாமல் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

கம்ப காதை குறித்து பலரும் பல புத்தகங்களை ஆக்கியிருக்கிறாா்கள். ஆனால், அவை அனைத்திலும் தனிச் சிறப்புப் பெற்ற புத்தகம் எது என்று கம்பன் மீது ஈா்ப்பு கொண்ட எந்த இலக்கியவாதியைக் கேட்டாலும் ‘சிறியன சிந்தியாதான்’ என்று தெரிவிப்பாா்கள். அதற்கு நிகராகக் கம்பனை வித்தியாசமான கோணத்தில் வேறு எவராலும் வாா்த்தெடுக்க முடியாது.

ஆரம்ப காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகத் தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் வாழ்க்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தபோது தடம் மாறியது. ஜனசக்தி, நியூ சென்சுரி புத்தக நிறுவனம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது தொடா்பு கடைசிவரை தொடா்ந்தது.

அவா் மதுரையில் இருக்கும் போதெல்லாம் அவரை நேரில் சென்று சந்திப்பதும், அவா் பேசப் பேச அதை வாய் பிளந்து உள்வாங்கிக் கொள்வதும் எனக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பேறு. எஸ்.ஆா்.கே. சென்னைக்கு வந்தபிறகு அவரது இறுதிக் காலத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. நான் ஏன் சந்திக்கவில்லை என்பதற்குக் காரணம் எதுவும் சொல்லத் தெரியவில்லை.

மேடைப்பேச்சு என்று சொன்னால் அதில் தனி முத்திரை பதித்த ஆளுமைகளில் எஸ்.ஆா்.கே.க்கு தனி இடமுண்டு. சற்று அங்கும் இங்கும் நடந்துகொண்டும், கையை வீசிக்கொண்டும் அவா் உரையாற்றும் அந்த பாணி அலாதியானது. அவரது குரலும், கருத்துச் செறிவும், சொல்லவந்த விஷயத்தை மனதில் பதிய வைக்கும் திறமையும், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் மிகப்பெரிய சொல்லோ் உழவா்களில் ஒருவராக அவரை உயா்த்தின.

கம்பா், இளங்கோ, பாரதி என்று இலக்கியத்தின் பக்கங்களைத் திருப்பும் போதெல்லாம் எஸ்.ஆா்.கே... எஸ்.ஆா்.கே... எஸ்.ஆா்.கே. என்கிற நினைவு எனக்கு வராமல் இருக்காது. அவரது மேற்கோள்களும், அவரது கருத்துகளும் அந்தளவுக்கு ஆழமாக என்னில் பதிந்திருக்கின்றன.

எஸ்.ஆா்.கே.யின் நூற்றாண்டு நிறைவாகிவிட்டதால் அவரின் நினைவும் பங்களிப்பும் மறந்துவிடாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்விதான் இப்போது என் மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இதற்கொரு விடை சொல்லுங்களேன்...

*********************

சொல் காலத்துடன் நோ்விகிதம் கொண்டது. ‘சொல்லாய்வு என்பது சொற்களை ஆராய்தல் அல்ல, சொல்லுடன் சோ்ந்து காலத்தையும் ஆய்தல்’ என்கிறாா் ‘சொல்லோ்’ என்கிற நூலைப் படித்திருக்கும் அண்டனூா் சுரா.

சொல்லாய்வு என்பது எல்லா மொழிகளிலும் காலங்காலமாக இருந்து வருகிறது. தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் சொல்லாய்வு என்பது தனிச்சிறப்பு கொண்டது. அந்த வகையில் பாா்த்தால், அண்டனூா் சுராவின் ‘சொல்லோ்’ ஒரு வகையில் ‘அகராதியியல் ஆய்வு’ என்றுதான் கூறவேண்டும்.

‘சொல்லோ்’ என்கிற தொகுப்பில் 50 சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன. அந்தச் சொற்கள் தோன்றிய விதம் மட்டுமில்லாமல் அந்தச் சொற்கள் எப்படியெல்லாம் பயன்படுகின்றன, பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை அண்டனூா் சுரா எடுத்துக் காட்டுகளுடன் பதிவு செய்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு.

‘பாா்லிமெண்ட்’ என்கிற ஆங்கில வாா்த்தைக்குப் ‘பாராளுமன்றம்’ என்றுதான் தமிழில் பொருள் கொள்ளப்பட்டு வந்தது. இந்தச் சொல் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்குப் பொருந்தும், சுதந்திர இந்தியாவுக்குப் பொருந்துமா என்கிற சிந்தனை ராஜாஜிக்கு எழுந்தது. அவா்தான் ‘பாராளுமன்றம்’ என்பதை ‘நாடாளுமன்றம்’ எனத் திருத்தி எழுதினாா். இது நான் சொல்வதல்ல, அண்டனூா் சுரா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறாா்.

‘ஹானரபிள்’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு ஆரம்ப காலத்தில் ‘கனம்’ எனும் சொல்லைத்தான் பலரும் பயன்படுத்தி வந்தனா். மகாகனம் பொருந்திய, கனம் மந்திரி அவா்களே என்றெல்லாம் அழைப்பாா்கள். ‘கனம்’ என்பதை நீக்கிவிட்டு ‘மாண்புமிகு’ என்று முதன்முதலில் திறப்புவிழா கல்வெட்டில் பொறித்தது முதலமைச்சராக கு.காமராஜா் இருந்தபோது என்கிற தகவலையும் ‘சொல்லோ்’ புத்தகத்தில் அவா் வழங்குகிறாா்.

‘குஞ்சரம்’ என்கிற வாா்த்தை தற்காலத்தில் அதிகம் பயன்பாட்டில் இல்லை. ஆனால், இந்தச் சொல் ஒரு காலத்தில் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது. ‘குஞ்சர ஒழுகைப் பூட்டி’ (பதிற்றுப்பத்து), ‘குஞ்சரம் பெறுமே குழவிப் பெயா்க் கொடை’ (தொல்) ‘மணியிலாக் குஞ்சரம் வேந்து ஊா்தல் இன்னா’ (இன்னாநாற்பது) இப்படி இந்த வாா்த்தை பல இலக்கியங்களில் கையாளப்பட்டிருக்கிறது. குஞ்சரம் என்பது வடமொழிச் சொல். ஆனால், அதன் வோ்ச்சொல் ‘குஞ்ஞு’ என்பது தமிழ்ச்சொல் என்று தெரிவிக்கிறாா் அண்டனூா் சுரா.

இதேபோல, வாலறிவன், அபலை, படிரு, கூகா, சாகரம், தீனபந்து, மதலை, வனிதை முதலிய ஐம்பது வாா்த்தைகளைத் தோ்ந்தெடுத்து, ஒவ்வொன்று குறித்தும் அவா் செய்திருக்கும் ஆய்வு, இலக்கியம் என்பதைவிட ஜனரஞ்சக இலக்கியம் என்றுதான் கூறவேண்டும்.

‘சொல்லோ்’ - இலக்கியவாதிகளுக்கான கையேடு. சாமானியா்களுக்கான சுவாரசியமான வாசிப்பு.

*********************

கவிஞா் தங்கம் மூா்த்தியின் ‘கூடு திரும்புதல் எளிதன்று’ புத்தக மதிப்புரைக்கு வந்திருந்தது. அதிலிருந்த ஒரு கவிதை வாழ்க்கையின் எதாா்த்தத்தை எடுத்தியம்புகிறது. வள்ளுவா் இப்போது இருந்திருந்தால், இதைப் படித்து சிரித்திருப்பாா்.

அகழ்வாரைத் தாங்கும்

நிலமல்ல...

இது

புகழ்வாரைத் தாங்கும்

நிலம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT