தமிழ்மணி

மங்கையர்க்கு உடன்படும் மரங்கள்!

25th Oct 2020 05:11 PM | -கோ.ந. முத்துக்குமாரசுவாமி

ADVERTISEMENT

 

ஆதிசங்கரர் அருளிய செளந்தர்யலஹரி என்னும் வடமொழி தோத்திர நூலில் அமைந்துள்ள பாடல் இது. இந்நூலைக் கவிராஜ பண்டிதர் எனும் பெரும்புலவர் அழகிய சந்த விருத்தங்களில் மொழிபெயர்த்து உதவியுள்ளார்.

"அரியமென் காவினீபுக் கசோகினிற் பாதமேற்ற
உரியநம் பதத்தை யீதோ வுறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கு மியல்பினைக் கேட்டு யானும்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினி தினிது மாதே'

"பார்வதி தேவியார் பரமேஸ்வரனுடன் ஒரு சமயம் மலர்ச் சோலைக்கு எழுந்தருளினார். அங்கோர் அசோக மரம் இருந்தது. அசோக மலர்களை விரும்பிய அன்னையார் அதன்மீது தம்முடைய திருப்பாதத்தால் உதைத்தார். அதைக் கண்ணுற்ற பரம சிவனார், "தமக்கே உரிய அன்னையின் திருவடி ஸ்பரிசம் இந்த மரமோ அடைவது' என்ற எரிச்சலுடன் அசோகத்தை நோக்கினார். அதனைக் கேட்டு யானும் அம்மையின் திருப்பாதத்தைப் போற்றும் வளம் மேன்மேலும் இனிதாவதாகும்' என்பது இப் பாடலின் பொருள்.

ADVERTISEMENT

அசோக மரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியங்களில் காணும் கவி மரபு. இம்மரபு சங்க காலத்திலேயே தமிழ் மரபுடன் கலந்துவிட்டது என்பது அகநானூற்றுப் பாடலொன்றிலிருந்து புலனாகின்றது.

அகப்பொருள் இலக்கிய மரபில் "அறத்தொடு நிற்றல்' என்றொரு துறை உண்டு. தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த தோழி, உரிய காலத்தில் அதைச் செவிலிக்கு உணர்த்துவது அறத்தொடு நிற்றல் எனப்படும். இத்துறையில் அமைந்த சங்கப் பாடல் பல. அதில் வடமொழி இலக்கிய மரபை ஒட்டிய ஒரு பாடலும் உண்டு. "அன்னாய் வாழி வேண்டு அன்னை! நின் மகள்' எனத் தொடங்கும் 26 வரிகள் கொண்ட அகநானூறு 48-ஆவது பாடலே அது.

இப்பாடலில் வேங்கை மலர்கள் உயரத்திலிருப்பதால் அதைப் பறிக்கவியலாத பெண்கள் "புலி புலி' எனக் கூவினர் என்பதறிகிறோம். "புலி புலி' என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும் என்பது பண்டைய நம்பிக்கை. இது புலவர்கள் படைத்துக் கொண்ட இலக்கிய வழக்காகும். இதற்கு, "தோதகக் கிரியை' என்பது பெயர். இது வடமொழி இலக்கிய மரபு. சங்க இலக்கியங்களிலோ அன்றிக் காப்பியங்களிலோ இந்த நம்பிக்கை இடம்பெறக் காணோம்.

மாதவச் சிவஞான முனிவரின் மாணாக்கராகிய கவிராட்சச கச்சியப்ப முனிவர் தம் நூல்களில் வடமொழி இலக்கிய மரபுகளையும், வைதிக மரபுகளையும் பதிவு செய்துள்ளார். காஞ்சி புராணம் இரண்டாம் காண்டம் கச்சியப்ப முனிவர் அருளியது. இயற்கை வருணனையே காப்பியமாக அமைந்தது. இதில் இளவேனிற் காலத்தில் இளமகளிர் புறத்தே சென்று மலர் கொய்து விளையாடும்போது செய்யும் இத்தோதகக் கிரியைகளையும், அவற்றுக்கு உடன்படும் மரங்களையும் பற்றி விரிவாகப் பாடுகின்றார்.

மகளிர் நகைக்க முல்லை மலரும் என்பது கவிமரபு. அல்லி மலரை அணிந்த குழலியராகிய மகளிர், நகை முகத்துடன் முல்லை மலர் கொய்தனர். அது, "முல்லை! உன்னுடைய அரும்புகள் என் மூரலுக்கு நிகராகா' என நகையாட, அம் முல்லையும் பதிலுக்கு, " உன் மூரல் எமதரும்புக்கு நிகராகாமையினால் அல்லவா பல்லும் இதழும் காவலாக உள்ள உம் வாயினுள் போய் ஒளிந்து கொண்டது' என எதிர்த்துப் பழித்ததுபோல முல்லைக்கொடி மெல்லிய அரும்பு ஈன்றது. அது கண்டு தண்டம் விளைப்பார் போன்று மகளிர் அவ்வரும்பினை விரைந்து பறித்தனர். தம்மை இகழ்ந்து பழித்தவரது பல்லைப் பிடுங்குவதுபோல இருந்தது. முல்லை அரும்புகள் மகளிரது பற்களுக்கு உவமை. அது பல் தெரியச் சிரிக்கும் புன்முறுவலைக் குறித்தது.

ஏழிலைம் பாலை என்னும் மலர் மகளிர் நட்பு செய்வதால் மலர்வது. சோலையில் ஒரு பெண் ஏழிலைம்பாலை மரத்தைக் கண்டாள். முன்பொரு முறை தன் கணவருடன் நீண்ட கானகத்தில் உடன்போக்கு நிகழ்த்தியபோது, ஏழிலைம்பாலை மரம் செஞ்ஞாயிறு கனற்றும் வெம்மை தணிய நறுநிழல் நிறைத்து தளர்ச்சியினை அகற்றியது. அது செய்த நன்றியை நினைந்து அப்பழைய நட்பினை நினைவுகூர்ந்தாரென்னும் படியாக, அவ்வேழிலைம் பாலையில் மணமிக்க மலர்கள் கொய்தாள். மலர் கொய்ததால் வறுமையடைந்த ஏழிலைம்பாலை மரமும் நட்புப் பூண்டதென்னக் கொத்து விரிந்தது, புது மலர் முகிழ்ப்ப மகளிர் அதனை நெருங்கிக் கொய்தார்.

பாதிரிப் பூக்கள் கொய்யவியலா உயரத்தில் இருப்பதைக் கண்டு, மலர் கொய்யும் மகளிர், அம்மரத்தை இகழ்ந்தனர். " பாடகமே! நீ தோடணிந்து நனி பூத்து எங்களை ஒப்ப இருந்தும் எங்களுக்கு இதழ் விரியும் மணமுள்ள போதினை நல்காதது என்னே' என இகழ்ந்தனர். தோடு சிலேடையாக, மகளிரின் காதணியையும் மலரிதழையும் குறிக்கும். நனி பூத்து, என்பது சிலேடையாக மலர்கள் நிறைய பூத்திருத்தலையும் மகளிர் இன்பம் துய்த்தற்குரிய பருவம் எய்தியிருத்தலையும் குறிக்கும். இவ்வாறு இகழ்ந்து கூற பெருமை நீங்கும் பழிப்புக்கு அஞ்சி எம்மை இகழாதிர் எனப் பணிந்ததைப் போல கைக்கு எட்டாது ஓங்கும் கிளையில் மீண்டும் செறிந்து மலர்ந்து தம் எதிரில் வளையும் அக் கொம்பிலிருந்து பாதிரி மலர்களைக் கொய்தனர். பாதிரி மகளிர் இகழ மலரும் தன்மையது. இது கவி மரபு. மேலும்,

செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது;
மகளிரின் பார்வை படத் தழைப்பது "மா';
மகிழ மரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும்;
மாதவி- குருக்கத்தி -இது மகளிர் பாட மலர்வது;
மகளிர் உதைக்க மலர்வது அசோகு;
புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது;
மகளிர் தழுவ மலர்வது குரவம்

எனக் கூறி இவ்வொவ்வொன்றையும் மிக விரிவாகப் பாடியுள்ளார் புலவர். இத்தகைய அரிய மரபுகளைப் பதிவு செய்து, போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதே செவ்விலக்கியத்தின் மாண்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT