தமிழ்மணி

இலக்கியம் போற்றும் தீபம்!

இராம. வேதநாயகம்

தீபம் ஏற்றுதல் இறைவழிபாட்டில் முதன்மையான பங்கு வகிக்கிறது. திருமாலும் நான்முகனும் இறைவனின் அடி-முடி தேடியபோது, இருவருக்கும் காட்சி தந்த சிவனின் உருவமே - ஒளியே (நெருப்பு-ஒளி மலையே)- அண்ணாமலையானது. "தீபம்' என்றால் அண்ணாமலை கார்த்திகை தீபத்தையே குறிக்கும்.

ரிக் வேத காலத்திலேயே கடவுளை ஒளியாகக் கருதி வழிபட்டனர் என்ற குறிப்பு உண்டு. அதன்பின் அவ்வொளி வழிபாடு உபநிடதத்திலும், பகவத்கீதையிலும் தொடர்ந்தது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஒளியைப் போற்றிப் பாடியுள்ளனர்.

"போதாந்தப் புண்ணியங்கள் போற்றி
சய சய போற்றி யெனும்
வேதாந்த வீட்டின் விளக்கே பராபரமே'
என்று விளக்கின் ஒளியை -தீபத்தைப் பாடுகின்றார் தாயுமானவர்.
"நெஞ்சுக் கிருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி

நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழநன் னூல்துறைகள்...' என்று தீபத்தைத் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பாடும். "தீப மங்கள சோதி நமோ நம / தூய அம்பல லீலா நமோ நம' என்று அருணகிரிநாதரும் அழகாகப் பாடியுள்ளார்.

கடலுக்குச் சென்ற தலைவன் வரவில்லை. தலைவி காத்திருக்கிறாள். இரவு வரப்போகிறது. நாட்டு அரசனான வீரைவேண்மான் வெளியன் தித்தன் முரசில் விளக்கேற்றுகிறான் என்று புலவர் முதுகூற்றனார் நவில்கிறார். தோழி கூற்றுப் பாடலான இது நெய்தற் திணைக்குரியது.

"பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல்கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப நுண்பனி அரும்ப...'
(நற்:58, 1-7)

தீபத்தில் நெய்யைப் பெய்து விளக்கேற்றினர் என்பதை, "யவனர் இயற்றிய வினைமாண் பாவை / கையேந்து ஐஅகல் நிறைய நெய் சொரிந்து' என்று நெடுநல்வாடை கூறுகிறது. இங்கு "அகல்' என்பது மண்ணால் செய்த விளக்கை (தீபத்தை) ஏற்றுவதைக் குறிப்பிடுகிறார் புலவர்.

இருண்ட நள்ளிரவில் வீதிகள்தொறும் விளக்குகளை மாலைபோலத் தொங்கவிட்டு வெற்றியுடைய மூதூரில் விழா கொண்டாடினர் என்பதை "அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்' என்ற பாடலில் புலவர் நக்கீரர் எடுத்தோதுகிறார். இப்பாடலில் "அறுமீன்' என்ற சொல் கார்த்திகை விண்மீனையும், "பழவிறல் மூதூர்' என்பது அண்ணாமலையையும் குறிப்பதை நோக்க வேண்டும். பாலை பாடிய புலவர் பெருங்கடுங்கோ,
"... ... ...
அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போல,
பல்பூங் கோங்கம் அணிந்த காடே' (நற்:202, 9-11)


அறுமீன் என்னும் கார்த்திகை விழாவின்போது விளக்குச் சுடரின் நெடிய வரிசைபோல என்று கூறுகிறார்.

அக்கால மாந்தர் கார்த்திகைத் தீபத் திருநாளில் கார்த்திகை விளக்கை ஏற்றி வழிபட்டனர் என்று சீவக சிந்தாமணியும் செப்பும். "கார்த்திகை விளக்கிட்டு அன்ன வியர்த்துப் / பொங்கு கடிகமழ்' என்றும், "கார்த்திகை விளக்கு இட்டன்ன / கடிகமழ் குவளை பைந்தனர்' என்றும் கூறுகிறது. கார்த்திகைத் திங்களில் வரும் விண்மீனுக்கு, "ஆஅல்' என்று பெயரென்று மலைபடுகடாம் (99-101) கூறும்.

போரில் வீரர்கள் சிந்திய குருதி, கார்த்திகை விழாவின்போது ஏற்றப்பட்ட விளக்கைப் போன்றிருந்தது என்று களவழி நாற்பது என்னும் நூலில் பொய்கையாழ்வார் புகல்வார்.

"ஆர்த்தெழுந்த ஞாட்பினுள் ஆளாள் எதிர்த்தோடத்
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றிக் கழிவிளக்கைப் போன்றவே
போர்க்கொடித் தானைப் பொருபுனல் நீர்நாடன்
ஆர்த்தமர் இட்ட களத்து...' (க.நா.17)

கார் நாற்பதில், "நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டநாள் விளக்கு' என்றும்; திருஞானசம்பந்தரும், "கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்' என்றும் பாடியிருப்பது கார்த்திகை தீபப் பெருவிழாவை நினைவுபடுத்துகிறது.

இறைவனை "ஒளி'யாக (தீப) வழிபாடு செய்வதே சைவ சமயத்தில் பெரிதும் கூறப்பட்டுள்ளது. அத்தகைய ஒளி வழிபாடு செய்தவர்களுள் முதன்மையானவர் மாணிக்கவாசகர். சிவபரம்பொருளை, "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி என்றும்; சோதியே சுடரே சூழொளி விளக்கே' என்றும் போற்றிய அவர், ஒளி வழிபாட்டையே திருவாசகத்தில் பெரிதும் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவரது திருவாக்கை சிரமேற்கொண்ட அருட்பிரகாச வள்ளலாரும், "அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி' என்று ஒளியையே கடவுளாகக் கொண்டார்.

தீபத்தின் ஒளியில் கலைமகளும், தீபத்தின் சுடரில் திருமகளும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளும் வாசம் செய்வதாகக் கூறுவர். தீபத் திருநாளில் தீபங்கள் பல ஏற்றி, நம் வாழ்வில் சூழ்ந்துள்ள அக இருளையும் புற இருளையும் அகற்றுவோம்!

தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பான காட்சிகளைக் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT