தமிழ்மணி

அவள் அன்பே என் காவல்!

சக்தி முரளி

பல்வண்ண காட்சிக் கருவி (கலைடாஸ்கோப்) என்ற கருவியைப் பலரும் அறிந்திருப்பர் - அனுபவித்திருப்பர். கண்ணாடிகளைப் புரட்டிப் புரட்டிப் பார்க்கும் பலவேறு பரிமாணங்களில் எத்தனை விதமான காட்சிகள்! கலித்தொகைப் பாடல்களை "கலித்தொகை எனும் கலைடாஸ்கோப்' என்றுகூடச் சொல்லலாம். 

கலித்தொகையின் பாடல் வரிகள் வெறுமனே பொழிப்புரைக்கான செய்யுள்கள் அல்ல; அதற்கும் மேலாக, மனித வாழ்க்கையின் பல்வேறு நுணுக்கங்களை, அனுபவங்களை, போராட்டங்களை, தேடல்களை, தவிப்புகளை, இன்பங்களை, துன்பங்களை, வலிகளை, வழிகளை - இப்படி எத்தனை எத்தனையோ நிலைகளை எல்லாம் குறியீடுகளாகக் கோடிட்டுக் காட்டியுள்ள அற்புதச் செறிவான படைப்புகள் அவை. 

பாலைத் திணையை மட்டும் கையாண்டு, சாதாரண மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை விவரிக்கும் பாடல்களை புதிய கோணத்தில் விரிவுபடுத்தும் ஒரு புதிய முயற்சிதான் இப்பதிவு. 

பாலை பாடிய பெருங்கடுங்கோவின்  "பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க' என்கிற பாடல் (கலித்-16) தலைமகன் பொருட்வயிற் பிரிந்து சென்ற துயரத்தில் அவன் செல்லும் காட்டு வழியின் கடுமையை நினைத்து, (மேகம், சூரியன், காற்று முதலிய) அவனுக்கு எந்த இடையூறும் நேராதிருக்க வேண்டும் என்று இயற்கையிடமெல்லாம் வேண்டிக் கொள்ளும் தலைவிக்குத் தோழி மறுமொழி கூறுவதாக அமைந்த (22 அடிகள்) பாடல் இது. ஆனால், எத்தனைத் துன்பங்கள் தனக்கு வந்தாலும், அத்தனைத் துன்பங்களிலிருந்தும் தன்னைக் காப்பது தலைவியின் தூய அன்பு ஒன்றே என்று தலைவன் உறுதியாக நம்பும்படியாக - நினைக்கும்படியாக இப்பாடலை நாம் அணுகி, அனுபவிக்கலாம்.  

"நம் வறுமை நீக்கமே, எனது வாழ்வின் நோக்கம். அதற்காக, எதையும் தாங்கும் என் ஆக்கம். பச்சைப் பசும் சுகமாய் விரியும்  புல்பாதை அன்று, வெப்பம் சுடும் தணலாய் எரியும் கல்பாதை; இரக்கம் வேண்டி இன்மழை சுரக்க யாதும் இல்லை; சுரக்கும் கருணை இழந்ததாய் நகரும் மேகம்.

"கல்மிசை உருப்பு அறக் கனைதுளி சிதறு' என
இன்இசை எழிலியை இரப்பவும் இயைவதோ?'

இதுதான் பாதை, இதில்தான் பயணம்; வறுமை நீக்கமும் செல்வமும் கவனம். என்ன துயர் வரினும் நோக்கம் தளர மாட்டேன்; என்ன இடர் வரினும் பயணம் நிறுத்த மாட்டேன். "இந்தப் பூவை வெப்பம் பாய்ச்சி வாட்டாதே, நட்புக்கரம் நீட்டு' என்று கெஞ்சுவதாலேயே தன் குணமான சினம் தணிந்து, நட்பை நீட்டி பூக்களைக் கதிரவன் காப்பது இல்லை; வெட்பைக் கொட்டி கருகச் செய்வதுதான் வழக்கம்.

"சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக' என,
கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?'

இதுதான் பாதையும் பயணமும்; இதில்தான் நடக்கிறது நோகும் பாதம்; என்ன துயர் வரினும் நோக்கம் தளர மாட்டேன்; என்ன இடர் வரினும் பயணம் நிறுத்த மாட்டேன்.

காட்டுவழிப் புதர்களிலே பாலைவனப் பெரு நெருப்பு பற்றி,  காற்றிடம் "அதைப் பரவாமல் தடுப்பாய், தீயே அணைப்பாய்' என்று கெஞ்சுவதாலேயே இந்தக் காட்டுக் காற்று, மனிதர்கள் ஆற்று நீராய் மாறி நன்மை செய்வது இல்லை.

"முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக' என,
வளி தரும்செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?'

இதுதான் பாதை, இதுதான் பயணம்; பாதம் கவனம்; இதுதான் பாதை, இதுதான் லட்சியம்; என்ன துயர் வரினும் நோக்கம் தளர மாட்டேன். என்ன இடர் வரினும் என் பயணத்தை நிறுத்த மாட்டேன். எந்தத் துயரிலும் துஞ்சுதல் இல்லை;  எந்த ஆபத்திலும் அஞ்சுதல் இல்லை; நம் வறுமை நீக்கமே, எனது வாழ்வின் நோக்கம். அதற்காக, எதையும் தாங்கிடும் என் ஆக்கம். 

காரணம், அவள் அன்பு இருக்கிறது; அது என்னைக் காக்கும். எத்தனைத் தொலைவில் நான் இருந்தாலும், அவள் அன்பின் நினைவில் ஆறுதல்; அவள் அன்பே தேறுதல்; அவள் அன்பே ஆன்ம ஆவல்; அவள் அன்பே தேவக்காவல்.


""பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க
... ... ... ... ... ... ... ...
செய்பொருள் சிறப்பு எண்ணிச் செல்வார் மாட்டு, இனையன
தெய்வத்துத் திறன் நோக்கத் தெருமரல் தேமொழி!
வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள் 
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு என
அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினை திறத்தே!' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT