சிறுவர்மணி

காந்தியின் நேர்மை

2nd Oct 2022 06:00 AM | பி.புலேந்திரன்

ADVERTISEMENT

 


குசராத் மாநிலம் போர்பந்தரில்
குழந்தையாய் பிறந்த காந்தியுமே
குழந்தைப் பருவம் முதற்கொண்டே
கூச்ச சுபாவம் உள்ளவராம்!

பொய்யை சொல்லா அரிச்சந்திரன்
புவியோர் போற்றும் மன்னன் கதை
சொல்லும் நாடகம் பதிந்ததுவாம்
சிறுவன் காந்தி மனத்தினிலே!

அன்னையின் சொல்லை மீறாத
அருமைப் பிள்ளை காந்தியுமே
இங்கே படிப்பை முடித்துவிட்டு
இலண்டனில் சட்டம் படித்திட்டார்!

ADVERTISEMENT

தென்ஆப் ரிகாவில் வழக்குரைஞர்
தொழிலைத் தொடங்கிய காந்தியிடம்
வந்தார் ஒருவர் வழக்குடனே
வாங்கிப் பார்த்தார் காந்தியுமே!

அந்த வழக்கில் கீழ்மன்றம்
அளித்த தீர்ப்போ அவர்பக்கம்!
அந்தத் தீர்ப்பை எதிர்தரப்பு
ஆய்திடப் போட்ட மேல்வழக்கு!

கணக்கு குறித்த அவ்வழக்கில்
கண்டு பிடித்தார் காந்தியுமே
கணக்கில் தவறு இருந்ததனை
காட்டினார் நீதி பதியிடமே!

கண்டேன் தவறு இருப்பதனை
கவனக் குறைவால் ஏற்பட்டது!
உங்கள் கட்சிக் காரருக்கே
உண்டு அதனால் பாதிப்பு!

என்ற போதிலும் நேர்மையுடன்
எடுத்துச் சொன்னீர் தவறதனை!
எந்த ஒருவரும் இத்தொழிலில்
இப்படி நேர்மையாய் இருந்ததில்லை!

""நீங்கள் செய்தது பாராட்டுக்குரியது'' 
என்ற நீதிபதி
காந்தியின் கட்சிக் காரருக்கே
தீர்ப்பை எழுதினார் சாதகமாய்!

ADVERTISEMENT
ADVERTISEMENT