சிறுவர்மணி

அரங்கம்: முதல் மாணவன்

9th Apr 2022 12:00 AM | பாவலர் மலரடியான்

ADVERTISEMENT


காட்சி-1
இடம் : தெருவில் ஒரு கூரை வீடு
மாந்தர்: பரமசிவம், பர்வதம்.
(அதிகாலை நான்கு மணி. பரமசிவம் எழுந்து வெளியே கிளம்பும் சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்து எழுந்த பர்வதம்)

பர்வதம்: இந்நேரத்தில எங்க கிளம்பிட்டீங்கள்...?
பரமசிவம்:  வேலைக்குத்தான்.
பர்வதம்:  ராத்திரி உடம்பு வலின்னு சொன்னீங்களே?
பரமசிவம்: சொன்னேன்தான். ஆனால், நீதானே இன்னும் நாலஞ்சு நாள்ல பையன் பரிட்சைக்குப் பணம் கட்டணும்னு சொன்னே...
பர்வதம்: அதுக்கு?
பரமசிவம்: நேரத்தோட தொழில பாத்தாத்தானே நாலு காசு பாக்க முடியும்? பையன் நல்லா படிச்சு, நல்ல உத்தியோகத்துக்குப் போவனும்னா இந்த ஒடம்பு வலிய பாத்தா முடியுமா?  பையன் பின்னால கொட்டகையில படிச்சிக்கிட்டிருக்கான்... பாத்துக்க.
பர்வதம்: சரிங்க... 
(பரமசிவம் தன் கைவண்டியை இழுத்துத் தள்ளிக்கொண்டு போனான்).


காட்சி-2
இடம் : தோட்டத்துக் கொட்டகை
மாந்தர்: பர்வதம், மகன் செல்வம்.
(செல்வம் படித்துக் கொண்டிருந்தை பர்வதம் பார்க்கிறாள்)

பர்வதம்: செல்வம்...
செல்வம்: என்னம்மா, தூங்கலியா நீ?
பர்வதம்: செல்வம்... ராத்திரி 12 மணிவரை படிச்சுட்டுத்தானே படுத்தே? ரொம்ப கண்ணு முழிச்சா உடம்புக்கு ஆவாது.
செல்வம்: எனக்கு ஒண்ணும் ஆவாதும்மா. அப்பா எத்தனை மணிக்கு வேலைக்குக் கிளம்புறார் பாத்தியா? நீ வீட்டு வேலையை முடிச்சுட்டு ஏழு மணிக்கெல்லாம் வயக்காட்டு வேலைக்குப் போயிடுவே. நீங்க உங்க வேலையை செய்யற மாதிரி நானும் என் வேலையை செய்தாத்தானே நம்ம  கஷ்டம் தீரும்.
பத்து நாள்ல பரிட்சை. அடுத்த மாசம் ரிசல்ட் வந்துடும். நான் கண்டிப்பா பாஸ் ஆயிடுவேன். எனக்கு ஒரு வேலையைத் தேடிக்கிட்டா அப்புறம் நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்மா...
 

ADVERTISEMENT

காட்சி-3
இடம்: கடைவீதி
மாந்தர்: பரமசிவம், செல்வம், சிமெண்டு 
கடை முதலாளி.

பரமசிவம்: (தள்ளு வண்டியைக் கடைமுன் நிறுத்திவிட்டு களைப்பில் பெருமூச்சு விட்டுக்கொண்டே வருகிறான்) ஸ்ஸ்ஸ்... அப்பாடா!
முதலாளி: (கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர் பரமசிவத்தைப் பார்த்துவிட்டு) வாப்பா, பரமு டீ குடிக்கிறீயா?
பரமசிவம்: வேணாம் முதலாளி. டீ குடிக்கிறதில்ல.. 
முதலாளி: நல்ல பழக்கம்தான்.  ஒத்தப் புள்ளைய வச்சிகிட்டு நீ ரொம்ப கஷ்டப்படறியேப்பா.
பரமசிவம்: ஒத்தப் புள்ளன்னாலும் அதுக்குன்னு நாலு காசு பணம் சேர்த்து வச்சில்லைங்களே... கஷ்டப்பட்டாத்தான அவனை கரையேத்த முடியும்.
முதலாளி:  சிமெண்டு மூட்டைய  ஒத்த  ஆளா ஏத்தி இறக்கி பொறுப்பா நடந்துக்கற... உன் உழைப்பு வீண் போகாது. சரி, பையன் நல்லா படிக்கிறானா?
பரமசிவம்: படிக்கிறாங்க..  
முதலாளி: உன் பையனுக்கு ஆயுசு நூறுப்பா.
பரமசிவம்: என்ன சொல்றீங்க?
முதலாளி: அதோ பாரு. (பரமசிவம் திரும்பிப் பார்க்க செல்வம் வருகிறான்)
செல்வம்: அப்பா, பரிட்சை முடிஞ்சுது. நல்லா எழுதியிருக்கேன்.
பரமசிவம்: சந்தோஷம்பா... (முதலாளியிடம்) முதலாளி நூறு ரூபா கொடுங்க. கூலியில கழிச்சுக்கலாம்.
முதலாளி: அதுக்கென்ன... இந்தா வச்சிக்கோ.
பரமசிவம்: (அதைப் பையனிடம் கொடுத்து) சாப்பிட ஏதாவது வாங்கிட்டுப் போ.
செல்வம்: அதுக்கு ஏம்பா நூறு ரூபா?
பரமசிவம்: வாங்கிக்கடா. அம்மாவுக்கும் கொடு. நான் நேரத்தோட வந்துடறேன்.
(செல்வம் தலையசைத்து விட்டுக் கிளம்பினான்)


காட்சி - 4
இடம் பரமசிவம் வீடு
மாந்தர்: பர்வதம், செல்வம், கல்லூரி பணியாளர் ஒருவர்.
(பரமசிவம் வீட்டு வாசலில் வந்து ஒருவர் உள்ளே இருப்பவரைக் கூப்பிடுகிறார்)

பர்வதம்:  (உள்ளே இருந்த வந்து) ஐயா.. யார் வேண்டும் உங்களுக்கு?
புதியவர்: அம்மா, நான் உங்க பையன் செல்வம் படிக்கிற காலேஜ் ஆபீஸ்ல வேலை பார்க்கிறேன். பிரின்சிபால் செல்வத்தை அழைச்சிட்டு வரச் சொன்னார்.
பர்வதம்: (புரியாமல்) ஏன்.. ஏதாவது பிரச்னையா?
புதியவர்:  அதெல்லாம் ஒன்னுமில்லம்மா... செல்வம் நல்ல பையன். பிரின்சிபால் சார் அழைச்சிட்டு வரச்சொன்னாருன்னா அது நல்ல விஷயமாத்தான் இருக்கும்.
(அப்போது செல்வம் வீட்டுக்குள் நுழைகிறான்)
செல்வம்: வாங்க சார்... வணக்கம்.
புதியவர்: பிரின்சிபால் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார். காரணம் எதுவும் சொல்லல.
செல்வம்: சரி சார் போகலாம் வாங்க. அம்மா நான் போயிட்டு வந்திடறேம்மா.
பர்வதம்: எதுக்குன்னு எனக்கு ஒண்ணும் புரியலயே. பாத்து பக்குவமாப் பேசுப்பா... 
செல்வம்: சரிம்மா...  (இருவரும் போகிறார்கள்).

காட்சி - 5
இடம்: பரமசிவம் வீடு
மாந்தர்: பரமசிவம், பர்வதம், செல்வம்.
(பரமசிவமும், பர்வதமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். செல்வம் வருகிறான்)

செல்வம்: அம்மா... (சத்தமாக அழைத்தபடி வருகிறான்)
பரமசிவம்: வாப்பா செல்வம்.
செல்வம்: (மகிழ்ச்சியாக) அப்பா.. நான் பாஸ் பண்ணிட்டேன். இந்தக் காலேஜுக்கு மட்டும் இல்ல, மாநிலத்துக்கே முதல் மதிப்பெண் வாங்கி பாஸ் பண்ணியிருக்கேன்.
பர்வதம்: ராசா பெருமையா இருக்குய்யா.
பரமசிவம்: நமக்கு மட்டுமா பெருமை... ஊருக்கே பெருமை! இரு வரேன். (பரமசிவம் எழுந்தான்)
செல்வம்: அப்பா என்னப்பா, எங்கே கிளம்பிட்டீங்க?
பரமசிவம்: செல்வம், ஒரு தண்ணி வண்டிக்காரன் மகன் மாநிலத்துக்கே முதல் மாணவனா தேறி வந்திருக்காங்கறது சாதாரண விஷயமா? ஊருக்கே சொல்லி கொண்டாடனும்டா. இரு நான் போய் சுவீட் வாங்கிட்டு வரேன்.
செல்வம்: அப்பா, இருங்க. அவசரப்படாதீங்க. இந்தச் செய்தி நம்ம பிரின்சிபாலுக்கு மட்டுந்தான் வந்திருக்கு. நாளைக்கு செய்தித்தாளில் வரும். வந்த பிறகு கொண்டாடலாம். இப்ப நான் முக்கியமா சொல்ல வேண்டியது ஒன்னு இருக்கு. முதல்ல அதைக் கேளுங்க. சாதாரண குடும்பத்துல பொறந்து மாநிலத்துக்கே முதல் மாணவனா தேர்ச்சி பெற்றிருக்கிறது இந்தக் கல்லூரிக்குப் பெருமை; எங்களுக்கெல்லாம் பெருமைன்னு பிரின்சிபால் சொன்னார். இந்த வாரத்தில் அமைச்சர் அதிகாரிகளையெல்லாம் அழைச்சி வந்து பெரிய விழா நடத்தப்போறதாவும் சொன்னார்.
பர்வதம்: பெத்த வயிறு குளிருதுய்யா. 
செல்வம்: அது மட்டுமில்லம்மா.  உன் பெற்றோரையும் விழாவுக்குக் கூட்டிட்டு வரணும்னு சொல்லியிருக்கிறார்.
(ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கின்றனர். ஒன்றும் பேசவில்லை.)
செல்வம்: என்ன... உங்க ரெண்டு பேருக்கும் இதில் சந்தோஷம் இல்லையா?
பர்வதம்:  இதைவிட எங்களுக்கு சந்தோஷம் வேற என்னய்யா இருக்கு?
செல்வம்: அப்புறம் என்ன? ரெண்டு பேரும் அமைதியாயிட்டீங்க?
பரமசிவம்:  விழாவுக்கு நீ போயிட்டு வாப்பா. அதான் பெரிய சந்தோஷம்.
செல்வம்: ஏன் நீங்க வரமாட்டிங்களா? என் சந்தோஷம் உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?
பரமசிவம்: செல்வம், உன் சந்தோஷம்தானே எங்க சந்தோஷம். ஆனா, இந்த அழுக்கு, கந்தல் கோலத்தோட வந்து அந்தப் பெரிய விழாவுல  எல்லார் முன்னாடியும் நிக்க மனசு ஒத்துக்கலடா.
பர்வதம்: நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேன்.
செல்வம்: என்னம்மா சொல்ற, இந்த அழுக்கும், வேர்வையுந்தானே என்னை அந்த அளவுக்கு ஆளாக்கியிருக்கு? நான் அதைப் பத்தி சங்கடப்படலே, சங்கடப்படவும் மாட்டேன். நீங்க கண்டிப்பா வரணும்.
பர்வதம்: நாலு பெரிய மனுஷங்க முன்னால போயி நின்னு பழக்கமில்லேயே ராசா. எங்களால வர முடியாது.  
செல்வம்:  சரி விடு. உங்களுக்கு சங்கடமா இருந்தா  நான்  வற்புறுத்தமாட்டேன். ஆனா ஒண்ணு... அந்த விழாவுக்கு என் உடம்புதான் போகும். மனசு இங்கேதான் இருக்கும்.
 (செல்வத்தின் கண்கள் கலங்கின. பர்வதம், பரமசிவத்தின் கண்களும் கலங்கி இருந்தன.)


காட்சி-6
இடம் : விழா மேடை
மாந்தர்: சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர், கல்லூரி முதல்வர், உயர் அதிகாரிகள், பார்வையாளர்களாக அரங்கம் நிறைந்த மாணவ, மாணவிகள், பெற்றோர், பேராசிரியர்கள்)

செல்வம்: (மேடையில் ஒலிபெருக்கி முன் நின்று கை கூப்பி) எல்லோருக்கும் வணக்கம். மேடையில் உள்ள மதிப்புமிக்க உள்ளங்கள் அத்தனை பேரும் என்னையும், என் பெற்றோரையும் பாராட்டினார்கள். நான் கடைசியாக சில வார்த்தைகள் பேசவேண்டும் என்று வாய்ப்புக் கேட்டேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள் என்று எல்லோரும் நினைத்திருப்பீர்கள். என் பெற்றோர் இருவருமே கூலித்தொழிலாளிகள். அவர்களின் அழுக்கிலும், வேர்வையிலும், உழைப்பிலும்தான் நான் இந்தப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன். அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துவர முயற்சி செய்தேன். ஆனால், அவர்கள் விழாவுக்கு வரும் தகுதி தங்களுக்கு இல்லை என்று வர மறுத்துவிட்டனர். நான்... 
(நா தழுதழுக்கத் தொடர்ந்து பேசினான்) 

அவர்களுக்கே இந்தப் பாராட்டுகளைக் காணிக்கையாக்குகிறேன். (அப்போது பார்வையாளர்கள் பகுதியின் ஓர் ஓரத்திலிருந்து கூப்பிய கைகளோடு இருவர் எழுந்தனர்)
செல்வம்: (அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அம்மா... அப்பா... என்று மேடையிலிருந்து இறங்கி அவர்களை நோக்கி ஓடினான்) வாங்கப்பா, அம்மா வாங்க...
பரமசிவம்: நாங்க வரலேன்னு சொல்லி உன்ன அனுப்பி வைச்சிட்டு மனசு கேக்கலப்பா. எங்காவது ஒரு ஓரமா நின்னாவது புள்ளைய விழாவுல பாக்கணும்னு வந்தோம்.
பர்வதம்: நீ மேடையில கண்கலங்கறதைப் பாத்ததுக்கு அப்புறமும் ஒதுங்கி ஒளிஞ்சி நிக்க முடியல ராசா.
செல்வம்: பரவாயில்ல... மேடைக்கு வாங்க.

(இருவரையும் மேடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு இருந்தவர்கள் எழுந்து கைகளைத் தட்டி மூவரையும் வரவேற்க, பார்வையாளர்களும் கரவொலி எழுப்பினார்கள். அமைச்சர்கள், இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டியபோது கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.

திரை

ADVERTISEMENT
ADVERTISEMENT