சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்! - திறன் மிக்கவன்  - நரி விளா மரம்!

18th Sep 2021 07:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT


குழந்தைகளே நலமா?

நான் தான் நரிவிளா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் நாரிங்கி கிரெனுலேடா என்பதாகும். நான் ருடேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு நாய் விளா, மஹாவில்வம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் இந்தியாவில் தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், ஒடிஷா, மத்தியப் பிரதேசம், கர்நாடாகா, ஆந்திரம், முதலிய மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறேன். நான் வறட்சியைத் தாங்கி வளர்ந்து மண் அரிப்பையும் தடுத்திடுவேன். நானும் வீசும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி வேகமாக ஓடும் வாகனங்களால் ஏற்படும் மாசு மற்றும் தூசுகளை வடிகட்டி, காற்றைத் தூய்மைப்படுத்தி, உங்களின் சுற்றுச்சூழலைக் காப்பேன்.

நான் ஒடுங்கி, ஓரளவிற்கு உயர்ந்து வளரும் தன்மையன். அதுமட்டுமா, வளைந்து கொடுக்கும் ஆற்றல் எங்கிட்ட நிறையவே இருக்கு. அதனால், எந்தப் புயலும் என்னைத் தாக்காது.

என் இலைகள், விளை நிலங்களுக்குத் தழை உரமாகும். என் பட்டையில் அதிக டேனின் உள்ளதால், தோல் பதனிடவும், சாயமேற்றவும் பயன்படுத்தலாம். என் கனி புளிப்புச் சுவையுடையது. குழம்பில் புளிப்பு சுவையைக் கூட்ட என் கனியை பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

நான் மிகவும் கடினமாகவும், கனமாகவும் இருப்பேன் என்பதால், கடைசல் வேலைகள், வண்டி அச்சுகள், உலக்கைகள், சுத்தியல், மண்வெட்டிகளுக்கான கைப்பிடிகள், பெட்டிகள், சிற்ப வேலைகள், கதவுகள், வாசக்கால் தயாரிக்க பெரிதும் உதவுவேன். என் பட்டைகளை கூழாக்கி காகிதம் தயாரிக்கவும் பயன்
படுத்தறாங்க. என்னை கரையான்கள், பூச்சி, பூசாணங்கள் தாக்காது. ஏழை, எளிய மக்கள் என்னை வெட்டி காய வைத்தால் அடுப்பெரிக்க நல்ல விறகாகவும் உதவுவேன்.

குழந்தைகளே, என் இலைகளை கஷாயமாக்கி குடித்து வந்தால் காய்ச்சல், நீர்வேட்கை அறவே இருக்காது. உடம்பில் சூடு தணியும். என் இலையுடன், சிறிது கஸ்தூரி மஞ்சள், ஏலரிசி கலந்து குளித்து வந்தால் உங்கள் மேனி பளப்பளப்பாக இருக்கும்.

என் மரப்பட்டையையும், சந்தனக் கட்டையையும் ஒன்றாக அரைத்து நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, ஜாவா நாட்டு மக்கள் சோப்பிற்கு பதிலாக, என் உலர்ந்த கனிகளையே உடம்பில் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தறாங்களாம். அதனால், அவர்கள் மேனி பளபளப்பதுடன், சிறந்த கிருமிநாசினியாகவும் பயன்படுதாம்.

நகரத்திலுள்ளோர் என்னை வீட்டின் அருகில் வளர்த்தால், உங்கள் வீட்டின் வேலியாகவும், காற்றுத் தூசிகளின் வடிகட்டியாகவும் செயல்படுவேன்.

மரங்களாகிய நாங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ உங்களின் பொருளாதாரம் மேம்பட பல வகைகளில் உங்களுக்கு உதவி வருகிறோம். நாங்கள் உயிருடன் இருக்கும் போது நீங்கள் உண்டு மகிழ காய், கனிகளைத் தருகிறோம். மருந்து பண்டகமாகவும் இருக்கிறோம். வெயில் காலத்தில் நீங்கள் ஒதுங்கி இளைப்பாற நல்ல நிழலையும் கொடுக்கிறோம். சுற்றுச்சூழலையும் காத்து, மழைப் பொழிவையும் தருகிறோம். ஏழை, எளிய மக்கள் அடுப்பெரிக்கவும் உதவுகிறோம். எனவே, இத்தனை பயன்களையும் தரும் எங்களைக் காத்து வளர்ப்பது உங்கள் கடமையல்லவா குழந்தைகளே. மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

Tags : Siruvarmani Fox Villa Tree
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT